Friday, May 19, 2006

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய ஏகாதிபத்தியம்

நான் முந்தய பதிவு ஒன்றில் நம்முடைய நாட்டின் சில்லறை வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லியிருந்தேன். அதனை உறுதிப்படுத்துவது போல ஜெயக்குமார் அவர்களின் பதிவும் அமைந்துள்ளது. அதற்கு மேலும் பன்னானாட்டு நிறுவனம் ஒன்றின் செயல்பாட்டினை கடந்த இரு மாதங்களாக கவனித்து வருகின்றேன்.
என்னுடைய அலுவலகத்தின் அருகே டெஸ்கோ இருக்கிறது. அங்குதான் கடந்த ஒரு வருடமாக மதிய உணவு வாங்குவது வழக்கம். அங்கு பணிபுரியும் பணியாளர்களில் சிலர் நன்கு பழக்கமாகி விட்டனர். கடந்த இருமாதமாக கடையில் பல மாற்றங்கள். சுமார் நாற்பது பணியாளர்கள் பில் போடும் பணியில் இருந்தார்கள். தற்போது 30 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் புதிதாக 20 automatic checkout பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அனைவரும் automatic checkoutக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இங்குதான் அவர்களின் தந்திரம். அந்தக் கடையில் நிரந்தர வாடிக்கையாளர்களே அதிகம். அவர்களுக்கு automatic checkout உபயோகிக்கப் பழக்கப் படுத்தப்படுகின்றனர். இன்னும் சில மாதங்களில் இந்த automatic checkout மிஷின்கள் அதிகப்படுத்தப்பட்டு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப் படுவார்கள். இப்பொழுதே பெரும்பாலான பணியாளர்கள் வேலை போய்விடும் என்ற பயத்தில் உள்ளனர்.

நான் சொல்ல வருவது என்னவெனில் தங்களின் சொந்த நாட்டுப் பணியாளர்களின் மீதே இரக்கம் காட்டாமல், லாபத்திற்காக வேலையை விட்டுத் துரத்துகின்ற நிறுவனம் தான் இந்தியாவிலும் தங்களின் கிளையை நிறுவ அனுமதி கேட்டு நிற்கிறது. நம் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்தப்படும் என்று சொல்லி வாசலைத் தட்டி நிற்கிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நம் நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல வந்து நிற்கிறது. டெஸ்கோவின் கடந்த ஆண்டு லாபம் 2.2 பில்லியன் பவுண்டுகள். அதனை 3 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்பது அதன் குறிக்கோள். அதற்குத்தான் இந்த இயந்திர மயமாக்கம், பணிநீக்கம் எல்லாம்.

என் தாய்நாட்டை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. இது போன்ற நிறுவனங்களை அனுமதித்து அதில் மண்ணைப் போட்டு விடாதீர்கள் அரசியலவாதிகளே.

25 comments:

Unknown said...

அமெரிக்காவில் இம்மாதிரி வேலைகளுக்கு கடும் ஆள் தட்டுப்பாடு இருப்பது தெரியுமா மகேஷ்?ப்ளு காலர் வேலைக்கு ஆள் கிடைக்காததால் மெக்ஸிகர்கள் சட்டவிரோதமாக குடியேறுவது நடக்கிறது.

டெக்னாலஜி வளர்ந்தால் பழைய வேலைகள் போய் புது வேலைகள் உருவாகும்.கம்பொயூட்டர் வந்ததால் வேலை போகும் என முன்பு அலறினார்கள்.என்ன ஆனது?

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை நியதி.வேலை தர யாரும் கம்பனி நடத்துவதில்லை.லாபம் சம்பாதிக்கத்தான் நடத்துகிறார்கள்.

மகேஸ் said...

//வேலை தர யாரும் கம்பனி நடத்துவதில்லை.லாபம் சம்பாதிக்கத்தான் நடத்துகிறார்கள்//
100 சதவீதம் ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் நம் நாட்டை விட்டுப் பணத்த்தை எடுத்துச் செல்வது தான் பிரச்சினை. அமெரிக்காவிலோ, லண்டனிலோ என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவில் கடை திறந்து நம்முடைய பணத்தை வெளியே கொண்டு போனால் யாருக்கு நஷ்டம். நமக்குத்தானே. கடந்த சில நாட்களில் பங்குச் சந்தை சரிவிற்குக் காரணம் என்னவெண்று நினைக்கிறீர்கள். அவர்கள் முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இந்தியப் பண மதிப்பு குறைகிறது.

Unknown said...

//ஆனால் நம் நாட்டை விட்டுப் பணத்த்தை எடுத்துச் செல்வது தான் பிரச்சினை. அமெரிக்காவிலோ, லண்டனிலோ என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்தியாவில் கடை திறந்து நம்முடைய பணத்தை வெளியே கொண்டு போனால் யாருக்கு நஷ்டம். நமக்குத்தானே.//

வெளிநாட்டுகாரன் பணத்தை என்ன திருடிக்கொண்டா போகிறான்?பொருளை கொடுத்துவிட்டு அதற்குறிய விலையை தானே பெற்றுக்கொண்டு போகிறான்?நாம் மட்டும் திருப்பூர் பனியனையும்,ஆக்ரா துணியையும் அவனுக்கு தந்துவிட்டு டாலரை திருடிக்கொண்டு வரவில்லையா?அமெரிக்காவில் எத்தனை பெட்ரோல் பங்குகளையும் அதில் உள்ள 7 - 11 ஸ்டோர்களையும் இந்தியர்கள் நடத்துகிறார்கள் தெரியுமா?அமெரிக்காவில் எத்தனை இந்திய கிராசரி ஸ்டோர்கள் உள்ளன தெரியுமா?

சில்லரை வியாபாரத்தில் நம் படேல்கள் உலகம் பூரா பட்டையை கிளப்புகிறார்கள்.நாம் அமெரிக்கனை உள்ளே விடமாட்டோம் என்றால் அது plain hypocracy.

//கடந்த சில நாட்களில் பங்குச் சந்தை சரிவிற்குக் காரணம் என்னவெண்று நினைக்கிறீர்கள். அவர்கள் முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இந்தியப் பண மதிப்பு குறைகிறது. //

முதலீடு செய்தவன் அவனுக்கு வேண்டும்போது பணத்தை எடுப்பது இயல்புதான்.அவன் முதலீட்டால் ஏறிய கரன்சி அவன் அப்பணத்தை எடுக்கும்போது குறையத்தான் செய்யும்.பங்கு சந்தை ஏறுவதும் இரங்குவதும் உலகம் பூரா நடப்பதுதான்.அன்னிய பணம் வேண்டாமென்றால் பங்கு சந்தை அதலபாதாளத்தில் தான் இருக்கும்.அதன் பின் ஏற்றமும் இல்லை,இறக்கமும் இல்லை.பாதாள வாசம் தான்.

மகேஸ் said...

திருப்பூரில் தயாராகும் துணிவகைகள் எல்லாம் அவர்கள் நாட்டில் கிடைக்காத பொருட்கள். எனவே நம்மிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்கள். அமெரிகாவில் எங்கு பருத்தி விளைகிறது என்று சொல்லுங்கள்?

அனால் நம் நாட்டில் சில்லறை வியாபாரம் என்பது அப்படி அல்ல. நம் நாட்டிலேயே எல்லாப் பொருட்களையும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி, நம்மிடமே லாபத்திற்கு விற்றுப் பணத்தை மட்டும் வெளியே கொண்டு செல்வதில் தான் பிரச்சினை. production,cleaning,packing, selling எல்லாமே நம்முடைய நாட்டில் லாபம் மட்டும் ஏன் அவர்களுக்கு?

//சில்லரை வியாபாரத்தில் நம் படேல்கள் உலகம் பூரா பட்டையை கிளப்புகிறார்கள்.//
அமெரிக்காவில்/லண்டனில் சில்லறை வியாபாரம் செய்யும் படேல்களில் பெரும்பாலோர் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். எனவே லாபமும்,வரியும் அந்த நாட்டிற்குத்தான். எந்தப் படேலாவது லாபத்தை இந்தியப் பணமாக மாற்றுகிறாரா? பெரும்பாலான படேல்கள் வெளிநாடுகளிலேயே சம்பாதிக்கிறார்கள், அங்கேயே முதலீடும் செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் மட்டுமே இந்தியப் பெயர்கள்.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட விலையேற்றம் ஒரு செயற்கையானது. வெளிநாட்டுப் பணத்தின் மூலம் பங்குகளுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை(demand) ஏற்படுத்தி விலையேற்றம் செய்யப்பட்டதது. அவர்கள் அதனை விற்கும் போது அவர்களுக்கு மட்டுமே லாபம். அந்த உயர்த்தப்பட்ட விலையில் வாங்கிய இந்திய முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்.

மகேஸ் said...

இந்தியாவில் சீன உணவுக் கடைகளில் அதிகமான வியாபாரம் நடக்கிறது. அதற்காக அந்த லாபம் எல்லாம் சீனாவிற்கா போகிறது?. அது போலத்தான் வெளிநாடுகளில் குஜராத்திய படேல்கள் செய்யும் வியாபாரமும்.

Unknown said...

திருப்பூரில் தயாராகும் துணிவகைகள் எல்லாம் அவர்கள் நாட்டில் கிடைக்காத பொருட்கள். எனவே நம்மிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்கள். அமெரிகாவில் எங்கு பருத்தி விளைகிறது என்று சொல்லுங்கள்?//////

பனியன் துணி செய்ய அமெரிக்கர்களுக்கு தெரியாதா மகேஷ்?இல்லை பருத்தி தான் அமெரிக்காவில் விளையவில்லையா?பருத்தி அமெரிக்காவில் விளைகிறதா என கேட்கிறீர்களே?இதை படித்து பாருங்கள்.பருத்தி உற்பத்தி அமெரிக்காவில் பெரிய வியாபாரம்

http://www.textile-info.com/1713.htm

//production,cleaning,packing, selling எல்லாமே நம்முடைய நாட்டில் லாபம் மட்டும் ஏன் அவர்களுக்கு?//
இதென்ன கேள்வி?முதலீடு அவனுடையது.அதனால் பணத்தை எடுத்து செல்கிறான்.அமெரிக்காவில் லட்சுமி மித்தல் செய்வதும் அதைதான்.கம்பனி ஆரம்பித்து லாபத்தை எடுத்து செல்கிறார்.இன்போசிஸ்,TCS அமெரிக்காவில் கிளை ஆரம்பித்து செய்வதும் அதைதான்.

//அமெரிக்காவில்/லண்டனில் சில்லறை வியாபாரம் செய்யும் படேல்களில் பெரும்பாலோர் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள். எனவே லாபமும்,வரியும் அந்த நாட்டிற்குத்தான். எந்தப் படேலாவது லாபத்தை இந்தியப் பணமாக மாற்றுகிறாரா? பெரும்பாலான படேல்கள் வெளிநாடுகளிலேயே சம்பாதிக்கிறார்கள், அங்கேயே முதலீடும் செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் மட்டுமே இந்தியப் பெயர்கள்.//

இந்தியாவில் NRI's செய்துள்ள முதலீடு எத்தனை லட்சம் கோடி இருக்கும் தெரியுமா?அமெரிக்காவில் சம்பாதித்து குடியுரிமை வாங்கினாலும் அவர்கள் முதலீடு,பணம் அனுப்புவது எல்லாம் இந்தியாவில் தான்.outsourcing மூலம் இந்தியாவுக்கு கிடைக்கும் annual லாபம் 60,000 கோடி ரூபாய்.

//பங்குச் சந்தையில் ஏற்பட்ட விலையேற்றம் ஒரு செயற்கையானது. வெளிநாட்டுப் பணத்தின் மூலம் பங்குகளுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை(demand) ஏற்படுத்தி விலையேற்றம் செய்யப்பட்டதது. அவர்கள் அதனை விற்கும் போது அவர்களுக்கு மட்டுமே லாபம். அந்த உயர்த்தப்பட்ட விலையில் வாங்கிய இந்திய முதலீட்டாளர்களுக்கு நஷ்டம். //


பங்கு ஏறினாலும் இறங்கினாலும் பாதிக்கப்படபோவது முதலீடு செய்த அனைவரும்தான்.உள்நாடு,வெளிநாடு என்றெல்லாம் பார்த்து லாபமோ நஷ்டமோ வருவதில்லை.இதுவரை யாரும் சொல்லாத foreign cospiracy theory சொல்லுவதில் எந்த பயனுமில்லை.

//இந்தியாவில் சீன உணவுக் கடைகளில் அதிகமான வியாபாரம் நடக்கிறது. அதற்காக அந்த லாபம் எல்லாம் சீனாவிற்கா போகிறது?. அது போலத்தான் வெளிநாடுகளில் குஜராத்திய படேல்கள் செய்யும் வியாபாரமும்.
//
இந்தியாவில் சீன உணவுக்கடைகளை நடத்துபவர்கள் இந்தியர்கள்,சீனர்களல்ல.

அமெரிக்காவில் இந்திய உனவுக்கடைகளை நடத்துபவர்கள் அமெரிக்கர்களால்ல.இந்தியர்கள்.

பெத்தராயுடு said...

விரைவில் வரப்போகிற 'ரிலையன்ஸ்' பேரங்காடிகளில் மட்டுமே பொருள் வாங்கினால் நமது பணம் வெளியில் செல்ல வாய்ப்பில்லை...

சராசரி அமெரிக்கனின் வேலையை நாம் எடுத்துக்கொள்கிறோம். நமது பணத்தை அவர்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) எடுத்துக்கொள்கின்றனர்.

உலகமயமாக்கலில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது.

Bons momentos said...

What ??
Ok, I will write in Portuguese :
e quero ver se voces entendem ... e aí, é gostoso o passatempo ?
Cuidem-se !

மகேஸ் said...

அமெரிகாவில் பருத்தி என்றது தவறுதான்.

//அமெரிக்காவில் இந்திய உனவுக்கடைகளை நடத்துபவர்கள் அமெரிக்கர்களால்ல.இந்தியர்கள்//
அவர்கள் இந்தியர்கள் என்று சொல்ல முடியாது. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள். அவர்கள் பெரும்பாலும் சம்பாதிப்பது, வரி கட்டுவது, லாபத்தில் சொத்துகள் வாங்குவது எல்லாம் அமெரிக்காலிலோ/ஐரோப்பாவிலோதான்.

உலகமயமாக்கலில் இவைகள் எல்லாம் சாதாரணமானது என்று சொல்வது என்றென்றைக்கும் நம்முடைய நாட்டிற்கு நல்லதல்ல. அமெரிக்காவும் எல்லா விசயங்களிலும் நியாயமாக நடந்து கொள்வதில்லையே. எண்ணையை அடித்துப் பிடுங்குகிறது. பிற நாடுகளின் பொருட்களுக்கு பேட்டண்ட்களை திருட்டுத்தனமாக வாங்குகிறது. இவைகள் எல்லாம் எதற்கு? தன் நாட்டிற்குள் முதலீடு இல்லாத வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவருவதற்குத்தான். அமெரிகக/ஐரோப்பிய நாடுகளிடம் நியாயம்/அநியாயம் பார்த்தால் முடியாதய்யா.

என்னுடைய முந்தய பதிவில் சொன்னது தான், சில்லறை வியாபாரம் முதலாளிகளை உருவாக்காது. சம்பளம் வாங்கும் தொழிலாளர்களையே உருவாக்கும்.

நாடு முன்னேற வேண்டுமெனில் இது போன்ற சில முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும்.

NRI களின் 60,000 கோடி முதலீடும் அந்நிய நிறுவனங்களால் லாபமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டால் நாட்டில் வளர்ச்சி எப்படி இருக்கும்?

coca-cola 70 பைசாவிற்கு உற்பத்தி செய்து 12 ரூபாய்க்கு விற்று 6 ரூபாய்க்கு மேல் லாபத்தை எடுத்துச் செல்வதோடு மட்டுமின்றி நம்முடைய உள்நாட்டு நிறுவனங்களையும் அழித்துவிட்டது.

நாட்டின் பொருளாதாரம் உயரவேண்டுமெனில் வெளிநாட்டுப் பணம்(பெரும்பாண்மை லாபத்தை எடுத்துச் செல்லப்படும் முதலீடு அல்ல) உள்ளே வர வேண்டும், நம் நாட்டுப் பணம் வெளியே செல்வது தடுக்கப் பட வேண்டும்.

Anonymous said...

சிந்தனை தூண்டும் பதிவு
ஆரோக்கியமான விவாதங்கள்.

Unknown said...

நாட்டின் பொருளாதாரம் உயரவேண்டுமெனில் வெளிநாட்டுப் பணம்(பெரும்பாண்மை லாபத்தை எடுத்துச் செல்லப்படும் முதலீடு அல்ல) உள்ளே வர வேண்டும், நம் நாட்டுப் பணம் வெளியே செல்வது தடுக்கப் பட வேண்டும்.////

லாபத்தை வெளியே எடுத்து செல்ல முடியாதுன்னா வெளிநாட்டுகாரன் முதலீட்டை எதுக்குங்க உள்ளே கொண்டுவர்ரான்?அப்படியே சீனாவுக்கு முதலீட்டை கொண்டுபோயிடுவான்.

NRIகள் இந்தியாவில் செய்யும் லட்சக்கணக்கான கோடி ரூப்பாய் முதலீட்டை சுட்டிக்காட்டியபிறகும்
//அவர்கள் இந்தியர்கள் என்று சொல்ல முடியாது. அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள். அவர்கள் பெரும்பாலும் சம்பாதிப்பது, வரி கட்டுவது, லாபத்தில் சொத்துகள் வாங்குவது எல்லாம் அமெரிக்காலிலோ/ஐரோப்பாவிலோதான்.//
இப்படி சொன்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை.

///NRIகளின் 60,000 கோடி முதலீடும் அந்நிய நிறுவனங்களால் லாபமாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டால் நாட்டில் வளர்ச்சி எப்படி இருக்கும்?///

ஐயா.பொருளாதார ரீதியாக இது சாத்தியமற்றது

"வங்கியில் பணம் போட்ட அனைவரும் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பி கேட்டால் என்ன செய்வது?" என்பது போன்றதுதான் இந்த கேள்வியும்.

பின்னூட்டங்கள் வழியாக பொருளாதாரத்தை விவாதித்து முடிவு காணமுடியாது.என் கருத்துக்களை சொல்லிவிட்டேன்.To conclude my arguments Globalization is Irreversible

நன்றி

anbudan
selvan

மகேஸ் said...

//Globalization is Irreversible//
ஆமாம் நானும் ஒத்துக் கொள்கிறேன்.

அதற்காக நம்முடைய நாட்டையே மற்றவர்களுக்காகத் திறந்து விடக்கூடாது என்றே சொல்கிறேன்.
nokia, hundai , saint gobain, போன்ற நிறுவனங்களின் வரவை ஆதரிக்கிறேன். அவைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்து, உள்நாட்டிலும் விற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நமக்கு வருமானம் தேடித்தந்து அவர்களும் லாபம் பார்த்துச் செல்கின்றன. ஆனால் coke-pepsi,Tesco, wallmart போன்றவைகள் அப்படிப்பட்டவைகள் அல்ல. நம் நாட்டின் வளத்தைச் சுரண்டி, அதை நமக்கே விற்று நம் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள். சில்லறை வியாபாரத்தில் நமக்குத் தெரியாத விசயத்தையா செல்லிக் கொடுக்கிறார்கள். இல்லை. அவர்களை உள்ளே விடுவது monopoly ஆகிவிடும். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என ஆகிவிடும். இது குறித்து தமிழ்சசி அவர்கள் ஒரு பதிவு போட்டிருந்தார்கள் அதனைத் தேடினேன் கிடைக்கவில்லை.

கணிப்பொறிகளை அறிமுகப் படுத்தியபோதும் இதேபோல்தான் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்று ஒரு வாதமும் வந்தது.
கணிப்பொறி செய்யும் வேலையை துரிதப்படுத்த, தூரத்தைக் குறைக்கவும் பயன்படுகின்றன. இதனுடன் சில்லரை வியாபரத்தையும், அந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் ஒப்பிட முடியும் என்று தெரியவில்லை.

விவாதத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி செல்வன் அவர்களே.

மு. மயூரன் said...

அந்நிய முதலீட்டால் நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என்பது மிக மேலோட்டமான பார்வையால் எடுக்கப்படுகின்ற முடிவு.
கோளமயமாக்கலின் அடிப்படை, இருவழி நன்மை அல்ல. வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு தர்ரப்புக்கு மட்டுமே ஆதாயம் கிடைக்கும். மற்றத்தரப்பு ஆதாயம் பெறுவது போன்ற தோற்றம் ஏற்படும்.

எம்மிடம் மூலதனமும், இயற்கை வளங்களும், மனித வலுவும் அறவே இல்லாத சூழ்நிலையில் வெளித்தரப்பு ஒன்று தலையிடுவதை ஊக்குவிக்கலாம் பிரச்சனை இல்லை. ஆனால், இந்தியா போன்ற நாடுகள், தமது மக்களுக்கு தேவையான அனித்தையும் தன்னளவில் தாமே தயாரித்துக்கொள்ளக்கூடிய நாடுகள்.

உற்பத்தித்துறையைத்தான் விடுவோம், சில்லறை விற்பனைத்துறையில் கூட முதலீடு செய்வதற்கு இந்தியாவால் முடியாதா?

எதற்காக அமரிக்க முதலீடு?

மூலதனம் போடுபவரின் குறிக்கோள் லாபம் சம்பாதிப்பதுதான் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்.

மொத்தத்தில் அந்த லாபம் வெளியில் போகப்போகிறது. இது நீண்டகால அடிப்படையில் இந்தியாவுக்கு , அதன் பொருளாதாரத்துக்கு பெரும் தீங்காகவே வந்து முடியும்.
சில்லறை தொழிற்றுறையில் மூலதனம் போடக்கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்கு இருக்குமானால், லாபம் வெளியில் செல்லாமலேயே இதே தொழிற்றுறையை சிறப்பாக கொண்டு நடத்த முடியும்.

வேலைவாய்ப்புகளை சிறப்பாக வழங்க முடியும்.


உலக மயமாக்கல் என்பது ஏகாதிபத்திய சுரண்டலுக்கான ஒரு வழிமுறையே தவிர அதற்கு வேறெந்த அர்த்தமும் பிரயோசனமும் கிடையாது.

எதிரெதிரான இரண்டு வழிகள் தான் உலகத்தில் உண்டு நடு வழி என்று எதுவும் கிடையாது

Chellamuthu Kuppusamy said...

சூடான விவாதங்கள் இங்கே. செல்வன் அவர்களது கருத்தை நானும் வழிமொழிகிறேன். மீண்டுமொரு முறை நிறையப் பேசலாம்.

- குப்புசாமி செல்லமுத்து

மகேஸ் said...

வருகைக்கு நன்றி திரு. குப்புசாமி அவர்களே. உங்களின் கருத்துகளையும் முன்வையுங்கள். நிறையப் பேசலாம்.

Chellamuthu Kuppusamy said...

மகேஸ்.. வருகையின் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

என்னைப் பொறுத்தவரை, பிரச்சினை சிறு வியாபாரிகள் Vs வெளிநாட்டு நிறுவனங்கள் அல்ல. மாறாக சிறு வியாபாரிகள் Vs பெரிய நிறுவனங்கள் என்பது தான். Food world & Trinetra ஏற்பத்திய பாதிப்பை ரிலையன்ஸ் ஏற்படுத்தும். வால்மார்ட் அதை விட அதிகமான பாதிப்பை உண்டாக்கும். சரி தானே??

-குப்புசாமி செல்லமுத்து

மகேஸ் said...

//சிறு வியாபாரிகள் Vs வெளிநாட்டு நிறுவனங்கள் அல்ல. மாறாக சிறு வியாபாரிகள் Vs பெரிய நிறுவனங்கள் என்பது தான். Food world & Trinetra ஏற்பத்திய பாதிப்பை ரிலையன்ஸ் ஏற்படுத்தும்//

ரிலையன்ஸ் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்க்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் டெஸ்கோ, வால்மார்ட் ஆகியவை தொலைநோக்குப் பார்வையில் பார்க்கும் போது நம் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். முதலில் ஒழுங்காக வரி கட்டமாட்டார்கள். வரியை ரிலையன்சும் ஒழுங்காகக் கட்டாது. ஆனால் லாபப் பணம் நம் நாட்டிற்குள்ளேயே இருக்கும். பணம் வெளியே போகும் போதுதான் நம்முடைய பணமாற்று விகிதம் சரியும். வெளிநாட்டில் இருந்து உள்ளே வரும் பணம் எல்லாம் இந்த நிறுவனங்களின் மூலம் வெளியே செல்லும்.

Sivabalan said...

மகேஸ்,

வித்தியசமான பார்வை.

நல்ல பதிவு!!

நன்றி!!

மகேஸ் said...

வருகைக்கு நன்றி சிவபாலன் அவர்களே.

Chellamuthu Kuppusamy said...

சரிதான் நீங்கள் சொல்வது... அதிகாலை ஒரு மணிக்கு பிஸ்கட் வேண்டுமானால் கூட வால்மார்ட்டில் வாங்கிக்கொள்ளலாம். அந்த செளரியம் கிடைக்காதல்லவா?

இது ஒரு மாறுபட்ட கோணமேயொழிய நான் தேச துரோகியல்லன் :-)

- குப்புசாமி செல்லமுத்து

மகேஸ் said...

தங்களின் வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி குப்புசாமி.

ஒரு மணிக்கு யாருக்குங்க பிஸ்கட் வேணும்?. வேறல்லங்க வேணும்(தூக்கத்தைச் சொன்னேங்க) :)))

மகேஸ் said...

வருகைக்கு நன்றி சதயம். எனக்கும் பவண்டோ பிடிக்கும். இன்றும் இந்தியாவிற்குப் போனால், பவண்டோ 2லிட்டர் பாட்டில் வீட்டில் வாங்கி வந்துவிடுவார்கள்.

வெளிநாட்டு நிறுவனப் பொருட்கள், நம் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்பதால் பிளேடு முதல், சோப் வரை முடிந்தவரை அனைத்தும் இந்தியத் தயாரிப்புகளியே வாங்குவேன்.

இலவசக்கொத்தனார் said...

வெளியூரில் இருக்கிறேன். அதிகம் பதிய முடியவில்லை. பெரும்பாலும் செல்வனின் கருத்துகளே என் கருத்தும். கண்களை மூடிக் கொண்டு நான் இருக்கும் நிலைதான் நிரந்தரம் இதில் மாற்றம் வர விட மாட்டேன் என சொல்வது சரியில்லை.

இம்மாறுதல்களை நாம் நிறுத்த முடியாது. இதனை எவ்வாறு எதிர்கொள்ளத் தயாராகிறோம் என்பதில்தான் நம் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

மகேஸ் said...

//கண்களை மூடிக் கொண்டு நான் இருக்கும் நிலைதான் நிரந்தரம் இதில் மாற்றம் வர விட மாட்டேன் என சொல்வது சரியில்லை//

கொத்தனாரே, மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. அந்த மாற்றத்தை இந்திய நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்றே சொல்கிறேன்.
அந்நிய நிறுவனங்கள் அதைச் செய்யும் போது மாற்றத்தின் பலன் நம்முடைய நாட்டிற்குக் கிடைக்காது.

அசுரன் said...

அசுரன்

இங்கு வாதிட்ட எல்லாருமே ஏதோ இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று என்பது போல் வாதிட்டுள்ளனர். வல்லவன் வாழ்வான் கிழ்ப்பான என்றூ ஒரு பக்கம் பேசிவிட்டு ரொம்ப டார்ச்சர் செய்தால் நானும் தேச பக்தி உள்ளவந்தான் என்று ரெட்டை நாக்கு கொண்டு பேச இயலாது என்னால். ஆயினும் சில விசயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

//டெக்னாலஜி வளர்ந்தால் பழைய வேலைகள் போய் புது வேலைகள் உருவாகும்.கம்பொயூட்டர் வந்ததால் வேலை போகும் என முன்பு அலறினார்கள்.என்ன ஆனது?

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை நியதி.வேலை தர யாரும் கம்பனி நடத்துவதில்லை.லாபம் சம்பாதிக்கத்தான் நடத்துகிறார்கள். ///

டெக்னாலஜ -஢ பழையன கழிதல் புதியன புகுதல் என்று ரொம்ப முற்போக்கானா இந்த கருத்தைத்தான் இங்கு சில்லறை வியாபரத்தை ஆதரிக்கும் பலரும் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது.

இவர்கள் எல்லாம் ஏன் இதே உத்தியை இந்திய விவசாயத்தில் பயன்படுத்தச் சொல்லி நாம் கேட்ட்கும் போதெல்லாம் மௌனமாக ஓடிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை இந்திய விவசாயத்தை மட்டும் பின் தங்கிய நிலபிரபுத்துவ உற்பத்தி மூறையில் வைத்திருப்பதன் மூலம் குறைந்த கூலிக்கு ஆளும், வளங்களும் கிடைக்கும் அப்படி கிடைக்கும் மலிவான பொருட்களையே நாம் அவர்களுக்கு குறைந்த விலை என்ற பெயரில் நகரங்களில் விற்று வயிறு வளர்க்கலாம் என்ற MNC, தரகு கம்பேனிகளின் எண்ணமாகக் கூட இருக்கலாம்.

சில்லறை வியாபாரத்தை பொறுத்த வரை மேற் சொன்ன விசயத்தைத் தாண்டி வேறு எந்த ஒரு சிறப்பு அமசமும் இல்லை. இருந்தால் $சல்வன் போன்றவர்கள் விளக்கலாம்.

அசுரன்