காய்கறிக்கடையில் என் சித்தப்பாவின் நிர்வாகத் திறமையை இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து ஒரு அரசையே கவிழ்த்தது பலருக்கு நினைவிருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் வெங்காய வியாபாரம் செய்வதே சிரமமாக இருந்தது. ஒரே நாளில் 10 முறை விலை மாற்றம் ஏற்பட்டது. ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு நாள் வெங்காயம் கிலோ 27 ரூபாய் விலை இருந்தது. அப்போது ஒரு விவசாயி 300கிலோ வெங்காயத்துடன் விற்பனைக்கு வந்தார். நான் சித்தப்பாவிடம் 22 ரூபாய்க்கு வாங்கி 27 ரூபாய்க்கு விற்று விடலாம் என்று கூறினேன். உடனே லேசாக்ச் சிரித்து விட்டு அந்த விவசாயியை மதுரைக்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்தார்.
அன்று இரவு காரணம் கேட்ட போது, தற்போதய நிலவரத்தில் 300 கிலோ வெங்காயம் விற்க ஒரு வாரம் ஆகும். இன்னும் மூன்று நாளில் வெங்காயம் விலை 10 ரூபாய்க்கு வரும் என்று ஆருடம் கூறினார். எனக்கோ அச்சர்யம். அது எப்படிச் சரியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது இன்னும் மூன்று நாட்களுக்குள் மழை பெய்யும் என்றும், அப்படி மழை பெய்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தில் சில பெரிய வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கும் வெங்காயம் அழுக ஆரம்பிக்கும். உடனே அவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரும் போது விலை சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது விளக்கம் கொடுத்தார்.
அவர் சொன்னபடியே மூன்றாவது நாள் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நல்ல மழை. வெங்காயமும் விலை குறைந்தது. இந்திய அரசாங்கமும் ஈரானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் விலை குறைந்ததற்குக் காரணம் ஆனது. அது சரி எப்படி மழை பெய்யும் என்பதைக் கணிப்பது? அவர் சொன்ன இரண்டு வழிமுறைகள். 1. தட்டான்கள்(தும்பி) தாழ்வாகப் பறந்து செல்வது மற்றும் தெளிவான வானத்தில் நிலாவைச் சுற்றி நெருக்கமான வட்டங்கள் ஏற்படுவது.
மற்றொருமுறை ஒரு வெங்காய விவசாயி வந்து சாம்பிள் வெங்காயம் காண்பித்து , இது போன்ற வெங்காயம் தன்னிடம் 500 கிலோவிற்கு இருப்பதாகவும் என்ன விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். நாங்கள் அதனை ஒரு கிலோ ரூபாய் 5.50க்கு வாங்கிக் கொள்வதாக ஒத்துக் கொண்டோம். அவர் அடுத்த நாள் சுமார் ஒரு டன் வெங்காயத்தை மாட்டுவண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டார். அனைத்தும் கடை வாசலில் இறக்கி வைக்கப்பட்டது. உடனே சித்தப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனைத்து வெங்கயத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டு பின்னர் எடை போடலாம் என்று சொன்னார். அதற்கு அந்த விவசாயி ஒத்துக் கொள்ளவில்லை.என் சித்தப்பாவோ விடவில்லை. ஒன்றாகக் கலந்து எடை போடுவது என்றால் வாங்கிக் கொள்கிறேன் இல்லையென்றால் திருப்பி எடுத்துச் செல்லலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
அப்போது அந்த விவசாயி பாதி மூட்டைகள் வெங்காயத்தை மட்டும் எடை போட்டுக் கொண்டு மீதியை வேறு இடத்தில் விற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டோம். நானோ என்ன நடக்கிறது எனப் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்த்து அவரே சொன்னார். அந்த விவசாயி தன்னிடம் உள்ள வெங்காயம் போக தன் பக்கத்துத் தோட்டத்தில் விளைந்த சற்றுத் தரம் குறைந்த வெங்காயத்தையும் ரூபாய்5.50கு விற்று விடலாம் என வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்துவிட்டார். முதல் மூட்டையைப் பிரித்துக் காண்பித்த போது முந்தய நாள் சாம்பிள் காட்டிய அதே வெங்காயம். அந்த மூட்டைகள் அனைத்தும் அடையாளத்திற்காகச் சணலில் கட்டப்பட்டிருந்தன. பக்கத்துத் தோட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மூட்டைகள் எல்லாம் அடையாளத்திற்காகத் துணியால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு மூட்டையாக எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். ஆனால் ஒன்றாகக் கலந்து எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். இதனைத் தடுக்கவே கலந்து எடை போடுவது என்ற உத்தியைப் பயன்படுத்தி அந்தப் பிராடுத்னத்தைக் முறியடித்தார். நான் வியந்தது என்னவெனில் ஒரு கணப் பார்வையிலேயே இவை அனைத்தையும் கணித்து, அதைத் தடுக்க முடிவெடுத்த வேகத்தையும் நினைத்துத்தான். சுமாவா, அவருக்கு 40 ஆண்டுகள் காய்கறி வியாபாரத்தில் அனுபவம் உள்ளதே.
காய்கறி விற்பனையிலும் நாள் நேரம் எல்லாம் பார்க்க வெண்டும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காரட்,முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற காய்கள் மற்ற நாட்களை விட மூன்று மடங்மு அதிகமாக விற்பனையாகும். ஏனெனில் வெள்ளிக் கிழமையன்றுதான் சாம்பார், காய்கறிகள் என் சுத்த சைவமாக இருக்கும். எனவே அந்த நாட்களை அனுசரித்து மொத்தமாக காய்கள் வாங்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அடுத்த பகுதியில்.
9 comments:
//...உடனே சித்தப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனைத்து வெங்கயத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டு பின்னர் எடை போடலாம் என்று சொன்னார்....//
ஜித்தனுக்கு ஜித்தன் இருக்கான்னு எவ்வளவு நாசுக்கா சொல்லி இருக்காரு.
நல்லா இருக்குங்க.
காய்கறி வியாபாரத்தில் இவ்வளவு நடக்கிறதா?நல்ல information.
மழை வருவதை கண்டுபிடிக்க இப்படி ஒரு வழி இருக்கா?
சிங்கப்பூரில் முயற்சிக்கிறேன்.
" தட்டான்கள்(தும்பி) தாழ்வாகப் பறந்து செல்வது மற்றும் தெளிவான வானத்தில் நிலாவைச் சுற்றி நெருக்கமான வட்டங்கள் ஏற்படுவது."
காலையிலே கிழக்கு வெளிச்சமாய்,
வெளுத்திருந்தாலும் மழை வரும்
என்பதும் அனுபவ உண்மை.
"ஒரு கணப் பார்வையிலேயே இவை அனைத்தையும் கணித்து, அதைத் தடுக்க முடிவெடுத்த வேகத்தையும் நினைத்துத்தான். சும்மாவா, அவருக்கு 40 ஆண்டுகள் காய்கறி வியாபாரத்தில் அனுபவம் உள்ளதே."
அனுபவங்கள் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
வருகைக்கு நன்றி நன்மனம், குமார் மற்றும் துபாய் ராஜா.
//காலையிலே கிழக்கு வெளிச்சமாய்,
வெளுத்திருந்தாலும் மழை வரும்
என்பதும் அனுபவ உண்மை//
தகவலுக்கு நன்றி ராஜா.
//காய்கறி வியாபாரத்தில் இவ்வளவு நடக்கிறதா?நல்ல information.//
என்னுடைய முந்தய பதிவுகளையும் படித்து விட்டீர்களா?
//ஜித்தனுக்கு ஜித்தன் இருக்கான்னு எவ்வளவு நாசுக்கா சொல்லி இருக்காரு//
நாங்களும் சில நேரங்களில் ஏமாந்து இருக்கிறோம். எனவே ஜித்தனுக்கு ஜித்தன் எப்பொதும் இருக்கிறான்.
அனுபவம் !நல்ல பாடம்;அதுவும் 40 வருட அனுபவம்; எத்தனை எத்தரைக் கண்டிருப்பார்;எத்தனை பேரை எத்தியிருப்பார். வியாபாரத்தில் இது சகசம் எனமனதைத் தேற்ற வேண்டியதே!
மழை; விடயத்தில் புதிய விடயம் சொல்லியுள்ளீங்க!
இங்கே! பிரான்சில் புழுக்கம் அதிகமாக இருந்தால்; இடியுடன் மழை என்பாங்க! சொல்லி வைத்தது போல் இடி மின்னலுடன் ,சிலசமயம் ஆலங்கட்டியாகவும் கொட்டும். எனக்கு ஆச்சரியமாக் இருப்பது. அவர்கள் கணிப்பு!
யோகன்
பாரிஸ்
வருகைக்கு நன்றி யோகன் அவர்களே.
//பெரிய Sherlock Holmes-ஆ இருக்காரே//
இல்லேன்னா வியாபாரம் பண்ண முடியுமா. தலையில மிளகாய் அரைத்து விடுவார்கள்.
வெங்காயத்தை உரிச்சாதான் கண்ணுல தண்ணிவரும், உங்க சித்தப்பா வெங்காய வியாபாரத்தை நினைச்சாலே கண்ணுல தண்ணி வருதே.
ம், அனுபவத்தை விட சிறந்த வாத்தியார் இல்லே, நல்ல படிச்சிக்கோப்பு வியாபார நுணுக்கத்தை உங்க சித்தப்பாகிட்ட இருந்து.
எங்க வயல்ல வெங்காயம் பழுப்பு நோயடிசுப்போய் கிடக்காம், அத நினைச்சானும் கண்ணுல தண்ணி வருது.
நல்லா எழுதுறீங்க, தொடர்ந்து எழுதுங்க. நன்றி.
பாவூரான்.
//க வயல்ல வெங்காயம் பழுப்பு நோயடிசுப்போய் கிடக்காம், அத நினைச்சானும் கண்ணுல தண்ணி வருது.//
உங்கள் வயலில் கொஞ்சமாக இயற்கை முறையில் விவசாயம் செய்து பார்க்கலாமே? அது நல்ல பலன் தந்தால் முழுவதுமாக விவசாய முறையை மாற்றலாம்.
'இயற்கை விவசாயி' நம்மாழ்வார் என்பவர் இருக்கிறார். அவரிடம் நிறையக் கற்றுக் கொள்ளலாம். எனக்கு அவருடைய முகவரி தெரியவில்லை. தமிழ்மண வாசகர்கள் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
பாவூரான், உங்கள் ஊர் இருப்பது திண்டுக்கல் மாவட்டமா?
Post a Comment