Saturday, July 22, 2006

குழந்தையின் மேல் வன்முறை





இரண்டொரு நாட்கள் முன்பு சில சாமான்கள் வாங்குவதற்காகத் தமிழ்கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் ஒரு அழகான இரண்டு வயதுக் குழந்தையும் அப்பாவும் கடையில் ஏதோ பொருளைத் தேடிக் கொண்டிருந்தனர். அழகான குழந்தை அவ்வப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் முகபாவனைகள் மூலம் சில விளையாட்டுகாட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. நான் எட்டிப் பார்த்த போது அந்த அப்பா குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.(ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம். இதற்குச் சிறைத் தண்டனையோ அல்லதுமனநோய் மருத்துவரிம் ஒரு கலந்துரையாடலோ அரசால் ஏற்படுத்தப்படும்.) அந்தக் குழந்தை கடையில் அடுக்கி வைத்திருந்த சில பொருட்களைத் தள்ளி விட்டுவிட்டு விட்டது என்பதற்காக அந்தத் தந்தை குழந்தையை அடித்திருந்தார்.

குழந்தைகளின் மீது பெற்றோர் வன்முறை காட்டுவது என்பது ஒரு தவறான செயல். அது அவர்களின் ஆழ்மனதில் உள்ள சில சைக்கோத் தனமான எண்ணங்களால் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு வடுகிறது. அதற்குக் காரணம் பின்வருவனவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

1. மனைவியைப் பிடிக்காத கணவர்கள் குழந்தைகள் மீது காட்டும் வன்முறை.(அதற்குக் குழந்தை என்னங்க செய்யும். பாவம்)

2. பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால், அதனை அடக்க முடியாமல் சில நேரங்களில் குறைந்த ஆற்றல் உள்ளவர்களிடம் பீறிட்டு வெளிவருவது. (மன அழுத்தம் என்றால் என்ன என்பதும் கூட தெரியாமல் அதனால் அவஸ்தைப்படுவர்கள் அதிகம்)

3. தன்னுடைய குழந்தையின் செயல்களை/கல்வித் திறனை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல இல்லையே என்ற ஒரு வித ஈகோ மனப்பான்மையால் ஏறபடுவது.(தன்னுடைய குழந்தைக்கு என்ன ஆர்வம் என்று கண்டுபிடித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை)

4. உண்மையிலேயே ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறை காட்டுவது. (உதாரணமாக, எனக்கு ஐந்து வயதிருக்கும் போது 'முண்டை' என்ற சொல என் பேச்சில் அடிக்கடி வரும். என் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததால் விறகுக் கட்டை உடையும் வரை அடி வாங்கியது. அதன் பின்னர் அது போன்ற சொற்களைச் சொல்வதற்கு இன்றும் பயம்)

ஆக இதில் பெரும்பாலான தவறுகள் பெற்றோரிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் செய்யும் செயல்களை ரசிப்பது நம்மை மேலும் இளமையான மனநிலையில் வைத்திருக்கும். இன்றைய குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் நேற்று நாம் செய்ததின் தொடர்சியாக நினைத்து பாருங்கள், உங்களுக்குச் சிரிப்பு வரும்.

நான் மேலே சொன்ன நிகழ்ச்சி தொடர்ந்து சில முறைகள் நடந்தால் குழந்தையின் பிற்கால நடவடிக்கை எப்படி இருக்கும்? எந்த ஒரு பொருளையும் எடுப்பதற்கு யோசிக்கும். அதனால் அதில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் குறைந்துவிடும். அதன் தொடர்சியாக பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரு வழியிலான சிந்தனைகளே அந்தக் குழந்தையிடம் இருக்கும்.எதனையும் மாற்றுக் கோணத்தில்(Lateral thinking) ஆராயும் குணமும் குறைந்து விடும். அதுவே இந்தப் போட்டி நிறைந்த உலகில் பின் தேக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இன்றைய வலைப்பூ வாசகர்கள், படைப்பாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, கலைக்கதிர் போன்ற இதழ்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்திருப்பார்கள். அதன் தொடர்சியாகவே இன்று நல்ல வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குகிறீர்கள். பத்து வயதில் என்ன எப்போதும் கதைப் புத்தகம்? என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் வாசிக்கும் தன்மைகுறைந்தவர்களாகவே இன்றும் இருந்திருப்பீர்கள்.

எனவே குழந்தைகளை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். அன்பால் சொல்லி நல்ல வழியைக் காட்டுங்கள். நாளைய நல்ல மனிதர்களை உருவாக்குவது இன்றைய பெற்றோர்களின் கையில்.

14 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல கட்டுரை!

மாயவரத்தான் said...

நல்லதொரு பதிவு.

'ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம்...' என்று அடைப்புக் குறிக்குள் எழுதியிருக்கும் தேவையற்ற வரிகளை நீக்கி பொதுவாக எழுதியிருந்தால் இன்னும் 'நச்'னு இருக்கும்.

மகேஸ் said...

நன்றி சிபி, மாயவரத்தான், துளசியக்கா.

//'ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம்//
நன்றி மாயவரத்தான். எழுதும் போது தோன்றியது சேர்த்து விட்டேன். குழ்ந்தைகளை அடிப்பது என்பது உலக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட வேண்டும்.

Anonymous said...

Kandippu Kattuvathu Enpathu Veru. Thandippathu Enpathu Veru Enpathai Anaivarum Unara Vendum.

It is NOT only the parents. How about the teachers in schools? They too handle the childrent very roughly.

ALIF AHAMED said...

ஒன்னுமே அறியாத நம்ம கைப்புவை இந்த அடி அடிக்கிறாங்கலே அதுக்கு ஏதும் சைக்கோ விளக்கம் இருக்கா ??

மகேஸ் said...

மின்னல், என்ன சொல்ல வர்றீங்க.
சங்கத்து மக்கள் எல்லாம் சைக்கோ என்றா? :)).

ஏதோ என்னால் முடிந்தது, போட்டுக் கொடுத்தாகிவிட்டது :))

வெற்றி said...

மகேஸ்,
நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிட்ட சட்டங்கள் கனடாவிலும் , அமெரிக்காவிலும் உண்டு. அண்மையில் கனடாவில் தமிழ்க்குடும்பத்திடம் இருந்து 9 வயது நிரம்பிய குழந்தையை பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் எடுத்துச் சென்றுவிட்டது.

ALIF AHAMED said...

//
மின்னல், என்ன சொல்ல வர்றீங்க.
சங்கத்து மக்கள் எல்லாம் சைக்கோ என்றா? :)).
//

ஆஹா நானே வந்து ஆப்புல ஒக்காந்துட்டேனா !!!!!!!! ::)

மகேஸ் said...

//நானே வந்து ஆப்புல//
மார்க்கபந்து, முதல் சந்து !!
என்னமோ தெரியல நேற்று வசூல்ராஜா படம் பார்த்ததில் இருந்து, அடிக்கடி இப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

மகேஸ் said...

வெற்றி, தமிழ்நாடு/தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது போன்று அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
நேற்றய பத்ரியின் வலைப்பதிவில் அவர் ஒரு குறும்படத்தின் லிங்க் கொடுத்திருந்தார். அதனைப் பார்த்தீர்களா?
அதில் முடிவு மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மகேஸ் said...

அனானி நண்பரே,
நான் சிறுவனாக இருக்கும்போது (என்ன இருக்கும்போது? நான் இன்னும் சிறுவன் தான்) பள்ளிக்கு வரும் பெற்றோர்கள், "முகத்தை மட்டும் விட்டு விட்டு நன்றாக அடித்துத் திருத்திப் படிக்க வையுங்க வாத்தியாரய்யா" என்று சொல்லிப் பள்ளியில் பிள்ளைகளை விட்டுவிட்டுப் போகும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். "முருங்கையை ஒடித்து வளர்க்கணும், பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?

பள்ளியில் வீட்டுப் பாடம் எழுதவில்லை என்று நான் தினமும் அடி வாங்குவேன். அடி வாங்கி விட்டுத் திரும்பியவுடன் அதனை மறந்து விடுவேன். இத்தனைக்கும் நான் வகுப்பில் ரேங்க்கில் முதல் மூன்று இடத்திற்குள் இருப்பேன். சில ஆசிரியர்களுக்கு என்னை அடிப்பதற்கு மனம் இல்லாவிட்டாலும் என்னை மட்டும் அடிக்காமல் விட்டால் தலைமை ஆசிரியர் கேள்வி கேட்பாரே என்பதனால் மட்டும் அடிப்பார்கள். என் நான்காம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்புப் படிக்கும் வரை இப்படியே காலை தினமும் அடிவாங்குவது என்பது தொடர்ந்தது. இதுவே எனக்கு ஒரு விதத்தில் ஒரு இன்ஸ்பிரேசன் ஆக அமைந்தது. இப்போதும் எந்த ஒரு செயலையும் எப்படிச் செய்கிறேன் என்று பார்ப்பதில்லை. அதன் முடிவு நல்ல விதமாக அமைகிறதா என்று மட்டும் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்தச் சம்பவங்களை ஏன் சொல்கிறேன் என்றால், நாம் சிறுவயதில் கற்றுக் கொள்ளும் பழக்கங்கள் தான் கடைசி வரை நம்முடன் வருகிறது. அதாவது "தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்".

G.Ragavan said...

குழந்தைகளை அடிக்கவே கூடாது என்று சொல்ல முடியாது. சமயத்தில் கொஞ்சம் அடிக்க வேண்டும். ஆனால் நமது தவறுகளுக்கு அவர்கள் மேல் ஆத்திரம் காட்டுவதில் பயனில்லை.

பிள்ளை வளர்ப்பு என்பதே பெரிய கலை. மிகவும் கடினமான கலை.

மகேஸ் said...

//நமது தவறுகளுக்கு அவர்கள் மேல் ஆத்திரம் காட்டுவதில் பயனில்லை//
Exactly!!, நான் இந்தப் பதிவின் மூலம் செல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள் ராகவன்.

//பிள்ளை வளர்ப்பு என்பதே பெரிய கலை. மிகவும் கடினமான கலை.//
உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் அந்தக் கலையை ஒரு சில பதிவுகள் போட்டு எங்களுக்கும் விளக்கலாமே? என் போன்றவர்களுக்குப் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

மகேஸ், என்னங்க இது, எழுதின நீங்களும் அனுபவம் இல்லாதவர்ங்கிறீங்க..

பின்னூட்டம் போட்டவங்கள்ல துளசி அக்கா, மாயவரத்தான் தவிர மத்தவங்களும் இனிமே தான் கத்துக்கணும்.. எப்படிங்க இதெல்லாம்!!

குழந்தைங்க பண்ற குறும்பெல்லாம் படிக்கும் போது, அடிக்காம வளர்ப்பது அத்தனை சுலபம் இல்லைன்னு தான் தோணுது.. எல்லாம் எனக்கு நேர் அனுபவம் கிடைக்கட்டும், அப்புறம் வந்து இந்தப் பதிவுக்குக் கருத்து சொல்றேன்..

இப்போதைக்கு, இந்தப் பையனை என்ன செய்யலாம்னு சொல்லுங்க.. அப்புறம் பார்க்கலாம்..

//உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் அந்தக் கலையை ஒரு சில பதிவுகள் போட்டு எங்களுக்கும் விளக்கலாமே? //
ராகவன், என்னங்க நடக்குது சென்னைல?!! பெங்களூர்ல இருந்தப்போ புரியாத கதைகளைப் புரியுதுன்னீங்க. இப்போ என்னடான்னா.. !!! முருகனுக்கும் மயிலுக்கும் தான் வெளிச்சம் :)