Friday, July 28, 2006

மித வேகம் மிக நன்று

நாம் பலமுறை பேருந்துகளில் செல்லும் போது நினைத்திருப்போம் "டிரைவர் வண்டிய உருட்டுராரு".பலபேர் டிரைவரின் காதுபடவே இதனைச் சொல்வார்கள். சில டிரைவர்கள் வீராப்பு கொண்டு வேகமாக வண்டியை ஓட்டுவார்கள்.சிலர் என்னதான் சொன்னாலும் "எருமை மாடு மேலே மழை பெய்த்தது போல ஆடி அசைந்த்து ஓட்டிச் செல்வார்கள்".கடந்த ஆண்டு வரை நம்ம ஊர் பஸ் டிரைவர்கள் பற்றிய என் எண்னமும் இப்படியே இருந்தது.

கடந்த ஆண்டு இந்தியா வந்த பொழுது, பெங்களூரில் இருந்து மதுரை வருவதற்காக பஸ் ஏறினேன். திட்டமிடாத பயணம் என்பதால் வந்த வேலை முடிந்ததும் பஸ்பிடித்து சேலம் வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 1 மணி. சேலம் - மதுரை பயணம். அரசு பஸ் டிரைவரும் கண்டக்டரும் "திண்டுக்கல் மதுரை மட்டும் ஏறிக்குங்க நாமக்கல் கரூர் நிக்காது" என்று சொல்லியவுடன் விரைவாக மதுரை சென்றுவிடலாம் என்று மனம் குதூகலித்தது.

பஸ்ஸின் முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் சீட். வசதியாகத்தான் இருந்தது. சேலம் பஸ்டாண்டை விட்டு வெளியே வந்ததுமே அசுர வேகத்தில் பஸ்ஸை இயக்கினார் டிரைவர். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நேஷனல் ஹைவே - 7ல் சுமார் 100கி.மீ வேகத்தில் பல தடைகளைத் தாண்டி பஸ் பறந்து கொண்டிருந்தது. நாமக்கல் தாண்டி ஒரு இடத்தில் லாரியை ஓவர் டேக் செய்ய வேண்டும். டிரைவர் வேகத்தைக் குறைக்காமல் எதிரே லாரி வருவதைக் கணக்கிட்டு வேகத்தை அதிகப்படுத்தி ஒரு ' H ' கட் அடித்து லாரியை முன்னேறிய போது முன்னே விழித்திருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அரண்டு போய்விட்டேன். ஒரு வினாடி நேரம் பிசகியிருந்தால் பஸ்ஸின் ஒரு பகுதி சின்னா பின்னமாகியிருக்கும். அப்போதுதான் நான் சுதாரித்து, இது சாதாரணமாக வேகமாக ஓட்டும் டிரைவரின் செயல் அல்ல என்று எனக்கு உரைத்தது. கொஞ்ச நேரத்தில் யாரோ ஒரு கரூர் டிக்கட் டிரைவருக்குத் தெரியாமல் ஏறி அமர்ந்திருக்கிறார்.

"டிரைவர் சார் என்னை கரூர் விலக்கு ரோட்டில் இறக்கி விட்டு விடுங்கள்" என்று சொன்னதுதான் தாமதம்டிரைவருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. "ஏன்யா என் உயிரை வாங்குறீங்க?" என்று வசவு செய்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

"சார் இவனுங்க தொல்லை தாங்க முடியல சார்" என்று என்னைப் பார்த்துக் கூறினார்,"நைட் நேரம். நிறுத்தித்தான் போகலாமே சார்?" என்றேன் நான்."நான் தூங்கி கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஆகிவிட்டது தெரியுமா சார்" என்றார் டிரைவர்.

தூக்கி வாரிப் போட்டது எனக்கு.

"ஆமாம் சார் டிரைவர் பற்றாக்குறை என்று அடிக்கடி ஓவர் டியூட்டி போட்டுடுராங்க சார். என்னால கண்ணை முழிச்சுப் பார்க்க முடியல சார். கண்ணெல்லாம் எரியுது"

"மெதுவாகப் போனால் தூங்கிவிடுவேன். அதனால் தான் வெறியுடன் வண்டியை விரட்டுரேன்"

"சீக்கிரம் மதுரை போய்விட்டால் தூங்கிவிடலாம்" என்றார் டிரைவர்.

"புலம்பாம வண்டியை ஓட்டுய்யா" என்று சொல்லிவிட்டு கண்டக்டர் தலையச் சாய்த்து விட்டார்.

என்ன விபரீதம் இது. அரசு நிர்வாகம் டிரைவர்களுக்கு ஓவர் டியூட்டி கொடுத்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதே என்று ஆத்திரம் வந்தது. அதற்குள் என் பக்கதில் இருந்த பெரியவர் விழித்துக் கொண்டு விட்டார். டிரைவர் சார் அருகில் ஏதாவது டீக்கடை வந்தால் நிறுத்துங்க, டீ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்றார். சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை வந்தது. டிரைவருக்கு நல்ல ஸ்டிராங்காக இரண்டு டீ சொன்னோம்.

நன்றாக முகத்தைக் கழுவிவிட்டு சிறுது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயண ஓட்டுநர்களுக்கு நல்ல ரெஸ்ட் வேணும் சார், இல்லேண்ணா, தூக்கத்தில் வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும் என்றார். எங்க கஷ்டத்தை யாரும் புர்ந்துகிட மாட்டேங்கிறாங்க சார். எனக்கு 20 வருட அனுபவம் அதனால் சமாளிக்கிறேன். சின்னப் பசங்க என்றால் இந்நேரம் அந்த லாரியில் வண்டியை நுழைத்திருப்பாங்க என்றார்.

உங்களுக்கு ஓவர் டியூட்டி ஏன் போடறாங்க? வண்டிய எடுக்க முடியாதுன்னு மேனேஜரிடம் சொல்லலாமே என்றேன்.

பேன் காத்துலேயும், ஏசியிலேயும் உக்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு எங்க கஷ்டம் புரியாது. நாங்களும் முடியாதுன்னு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா வேற ஏதாவது விசயத்தில கோர்த்து விட்டுப் பழிவாங்கிடுவான் அந்த ஆள், என்றார். மேலும் அரசு டிரைவர்கள் பற்றாக்குறை மற்றும் திருவிழாக்காலங்களில் விடப்படும் சிறப்புப் பேருந்துகளால் ஏற்படும் பணிச்சுமை இது போல பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களிலும் சில நேரம் டியூட்டி போட்டுவிட்டால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட முடியாது. இது போன்ற நாட்களில் எங்களுக்கு அலவன்ஸ் கிடைத்தாலும் அது குடும்பதினருடன் செலவிட நினைக்கும் சந்தோசத்திற்கு இணையாகாது பணம்.

இது போல தூக்கத்தைக் கட்டுப்படுத்ததான் டிரைவர்கள் சிகரெட், பான்பராக் போன்ற பழக்கத்தை ஆரம்பிக்கிறாங்க. பிற்காலத்தில் அதற்கு அடிமையாகி உடல் நலம் கெட்டு பாதிக்கப்படுறாங்க என்றார்.

சார் எங்களுக்கும் குழந்தைகள் குடும்பம் எல்லாம் இருக்கு. உங்களுக்கெல்லாம் வேலைக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம் என்ற உத்திரவாதம் இருக்கு. ஆனால் எங்களுக்கு இல்லை.

நாங்க தவறு செய்தாலோ, இல்லை எதிரே வருகிறவன் தவறு செய்தாலோ, மெக்கானிக் தவறு செய்தாலோ எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து என்றார். அவரின் தொழில் பற்றிய கருத்துகள் முற்றிலும் நியாயமானவையே.

உண்மையிலேயே சொல்லப் போனால் நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்ங்கதான் ரூல்ஸ் பாலோ பண்ணி வண்டி ஓட்டுவாங்க. அவங்க வேகம் எப்போதுமே 50கி.மீ தாண்டாது. வண்டியும் கண்டிஷனாக இருக்கும். மேலும் எல்லா இடத்துலேயும் பொறுமையாக செயல்படுவாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. எங்களுக்கு நேரம் முக்கியம். அதனால் தான் அவசரப்பட்டு வேகமாக ஓட்டி சில நேரங்களில் விபத்துக்குக் காரணமாகிவிடுகிறது என்றார்.

எங்களுக்கும் நல்ல ஓய்வு, தினமும் 8 மணிநேரம் வேலை, நல்ல கண்டிஷனில் வண்டிகள் அப்படீன்னு இருந்தா எங்கலாலேயும் விபத்துகள் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்.

வண்டி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நுழைந்த பொழுது காலை 6.30 மணி. டிரைவர் சார் வாங்க டீ அடிக்கலாம் என்று அழைத்தேன். அவர் சிரித்துக் கொண்டே என்னுடன் சேர்ந்து ஒரு டீ குடித்து விட்டு நட்புடன் விடை பெற்றார். ராமநாதபுரம் செல்ல இன்னும் மூன்று மணி நேரப் பயணத்தை நினைத்து அலுப்பாக வந்தது எனக்கு.

4 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்த மாதிரி ஒரு மறுபக்கம்
இருப்பது
தெரியாமலே போய் விடுகிறது.
மஹேஸ்.
உங்கள் அனுபவம் ஒரு பாடம். சுவைபட எழுதி இருக்கிறீர்கள்

ராமனாதபுரம் பதிவு சீக்கிரம் போடவும்.

இலவசக்கொத்தனார் said...

இந்த மாதிரி செய்யறது ரொம்ப தப்பு. போன தடவை நான் இந்தியா போகும்போது ஏர் இந்தியாவில் போனேன். அந்த பைலட்களும், சிப்பந்திகளும் கிட்டத்தட்ட இதே கதையைத்தான் சொன்னார்கள்.

ஹூம். வீட்டுக்கு வீடு வாசற்படி.

மகேஸ் said...

வரவிற்கு நன்றி மானு.
அடுத்த மாதம் இந்தியப் பயணம். விரைவில் புகைப்படங்களுடன் ராமநாதபுரம் பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்.

ராமநாதபுரம்,
ராமேஸ்வரம்,
தேவிபட்டிணம்,
கமுதி,
ஆற்றாங்கரை முதலிய ஊர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுகிறேன்.

மகேஸ் said...

//ஏர் இந்தியாவில் போனேன். அந்த பைலட்களும், சிப்பந்திகளும் கிட்டத்தட்ட இதே கதையைத்தான் சொன்னார்கள். //

கொத்தனாரே வானத்தில் டிராபிக் ரோட்டில் இருப்பது போல இருக்காது. எனவே ஆக்ஸிலரேட்டரை அழுத்தி வேகமாக ஓட்டினாலும் தவறு இல்லை.