பாகம் 1 - அறிவுச் செல்வன்
நான் பள்ளியில் படித்துக் ஒன்பதாம் வகுப்பு கொண்டிருந்த போது எங்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தவர் எங்கள் பள்ளியின் தாவரவியல் ஆசிரியரான திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.ஆங்கிலப் பாடம் எடுக்க ஆசிரியர் பற்றாக்குறை வந்ததால் தாவரவியல் ஆசிரியரை ஆங்கில ஆசிரியராக வாரம் ஐந்து மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொல்லியிருந்தார் தலைமை ஆசிரியர்.
உரைநடை, ஆங்கில இலக்கணம் இது போன்ற பாடங்களை அவர் வேறு ஆசிரியர்களின் துணையின்றி இலகுவாக கற்பித்தார். ஆங்கிலச் செய்யுள்களுக்கு வேறு சில ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு வந்து எங்களுக்குப் போதனை செய்தார்.
அவரின் வகுப்புகள் மிகவும் எளிமையாகவும் ஆங்கிலம் என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதகவும் அமைந்திருந்தன. வகுப்பில் கடைசி மாணவன் கூட ஆங்கிலத்தில் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள் பெற்றனர்.
ஆங்கில வகுப்பு எடுப்பதற்காகவே தினமும் இரண்டு மணி நேரம் தன்னைத் தயார் செய்து கொள்வார். ஒரு மாணவனின் நிலையில் இருந்து வகுப்பில் என்னன்ன சந்தேகங்கள் வருமோ அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார்.
ஆங்கிலத்தில் சுமாராகப் படிக்கும் எல்லோருக்கும் வகுப்பெடுக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே ஆங்கிலத்தில் வினைச்சொற்கள் அடங்கிய ஒரு லிஸ்ட் கொடுத்து அதன் ஒவ்வொன்றின் அர்த்தமும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு அஸைன்மெண்ட் கொடுத்தார். யாரிடமும் கேட்கக் கூடாது, தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது கட்டளை. இந்தப் பயிற்சி எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
அந்த ஆண்டு கல்வி அதிகாரியின் பள்ளிச் சோதனையின் போது எங்களின் ஆங்கில வகுப்பை மட்டும் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார். ஒவ்வொறு மாணவர்களின் ஆங்கில அறிவு, ஆசிரியரின் பாடம் கற்பிக்கும் முறை,ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க எடுத்துக் கொண்ட குறிப்புகள் இவை அனைத்தையும் கண்டு மிகுந்த மகிழ்சியுடன் இந்த வகுப்பறைதான் தான் ஆய்வு செய்த வகுப்புகளிலேயே தன்னை 200 சதவீதம் திருப்தி அடையச் செய்தது என்று குறிப்பிட்டார்.
அன்றிலிருந்து ஒன்பதாம் வகுப்பின் நிரந்தர ஆங்கில ஆசிரியராக மாற்றப்பட்டார். அவரின் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் மாணவர்க்ளின் தேர்ச்சி விகிதம் அதிகமானது.
என் போன்ற வசதியில்லாத மாணவர்களுக்காக வீட்டில் இலவசமாக டியூசன் எடுத்து ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களைப் பயிற்றுவித்தார். அவரின் கணவர் வேறு ஒரு பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் என்பதால் கூடுதலாக உயிரியல் பாடங்கள் நன்றாகப் படிக்க முடிந்தது.
தாவரவியல் ஆசிரியர் என்பதால் அவரின் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும். செம்பருத்திச் செடியின் கீழே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் வெள்ளையாகவும், மேலே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதியில் இருந்து வரும் பூக்கள் இரண்டும் கலந்த நிறமாகவும் இருக்கும். வீட்டில் விதவிதமான போன்சாய் மரங்கள் கண்ணைக் கவரும். போன்சாய் ஆலமரம் விழுதுகளுடன் மிகவும் அருமையாக இருக்கும்.
மீன்கள், பாம்புகள் ஆகியவற்றை வெந்நீரில் போட்டு நன்கு அவியவைத்து அதன் எலும்புகளை மட்டும் உடையாமல் தனியே எடுத்து அதில் பல வண்ணம் பூசி அழகாக வீட்டு ஹாலில் மாட்டிவைத்திருப்பார் விலங்கியல் ஆசிரியர்.
இன்று வெள்ளைக்காரர்களுடன் ஓரளவு உருப்படியாக ஆங்கிலம் பேசமுடிகிறது என்றால் அதற்கு திருமதி. ராஜேஸ்வரி அவர்களும் ஒரு காரணம். அவரின் சேவைகளை நினைத்துப் பார்க்கும் இந்த நேரத்தில் அவரை வணங்குகிறேன்.
Sunday, August 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் ஆசிரியை திருமதி இராஜேஸ்வரியின் சேவை மகத்தானது. இன்றைக்கும் சில திறமையுள்ள இந்திய இளைஞர்களால் வாழ்வில் பிரகாசிக்க முடியவில்லை என்றால் அதற்கு ஆங்கிலம் தெரியாமையும்... ஆங்கிலம் தமக்குத் தெரியாததால் வரும் தாழ்வு மனப்பான்மையும் தான் பெரிய காரணங்கள்.
ஆசிரியரின் சேவையை நினைவு கூர்ந்து பாராட்டிய மாணவருக்கும் பாராட்டுக்கள்.
பொதுவாகப் ஆசிரியரைப் பாராட்டும் மாணவர்கள் பெரும்பாலும் ஆண் ஆசிரியரைத்தான் பாராட்டியிருக்கிறார்கள். வலைப்பதிவுகளில்.. முதன் முதலில் நான் பார்த்து (மாணவனால்) பாராட்டப்பட்ட பெண் ஆசிரியை என்பதற்கும் ஒரு சிறப்புக் குறிப்பு (special mention).
அன்புடன்,
சீமாச்சு..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீமாச்சு.
Post a Comment