Sunday, February 03, 2008

தை ஒன்னா? சித்திரை ஒன்னா? ரெண்டும் இல்லை.

சூரியன் மகர ரேகையைத் தொட்டுப் பின் கடக ரேகைக்கு திரும்பும் நாள் தான் தை மாதம் முதல் தேதி.இது மிகவும் சரியானது. பின்னர் சித்திரை மாதம் முதல் தேதிக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியம்?

இருக்கிறது.

அதாவது மகரரேகை இலங்கைக்குக் கீழே இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. சூரியன் மகர ரேகையைத் தொட்டுவிட்டு வடக்கு நோக்கி நகர்ந்து குத்து மதிப்பாக இந்திய இலங்கைப் பகுதிகளைத் தொடும் நாள் சித்திரை ஒன்று. ஆகவே தான் சித்திரை ஒன்று புத்தாண்டாகக் கொண்டாடப் பட்டு வந்தது(இப்பத்தான் மாத்திட்டாங்களே :) ).

மிகச் சரியாகத் தமிழ்புத்தாண்டக் கொண்டாடுவது என்றால், கன்னியாகுமரியில் ஒருநாள், மதுரையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் என்று வரும்.

ஆகவே ஊருக்கு ஊர் ஜோசியக் காரரைக் கேட்டு, சூரியன் அவரவர்களின் ஊரைக் கடக்கும் நாளையே புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே
சரி.

ரேகை பற்றிய விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். (கை ரேகை இல்லீன்ங்கண்ணா)

Saturday, January 05, 2008

நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் வீட்டில் இணையத் தொடர்பு வாங்கி எழுதும் முதல் பதிவு.
சிவக்குமார் அவர்களின் இந்தப் பதிவு என்னுடைய பள்ளிப் பருவ நினைவகளைத் தூண்டிவிட்டது.

ஒன்றாம் வகுபுப் படிக்கும் போது என் வகுப்பு சக மாணவர்கள் கேட்டுக் கொள்வது நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா? யாருக்கும் அப்போது கட்சி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர் நல்லவர் , கருணாநிதி கெட்டவர் என்று மட்டும் பேசிக்கொள்வார்கள். எல்லோருமே தாங்கள் எம்.ஜி.ஆர் கட்சி என்றே சொல்லிக் கொள்வார்கள். யாராவது ஓரிருவர் கருணாநிதி கட்சி என்றால் அவனையும் சேர்த்துக் கெட்டவன் என்றே சொல்லிக் கொள்வோம்.

ஏதோ ஒரு ஓட்டுப் பதிவின் போது பள்ளிக்கூடதின் அருகில் விளையாடச் சென்ற போது, சின்னப் பயலுக எல்லாம் இங்க வரக்கூடாதுடா, ஓடுங்கடா என்று விரட்டி விட்டார்க்கள்.

பிறகு ஒருமுறை, ராமநாதபுரத்தில் 'வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களை தேனீக்கள் விரட்டியடித்தன' என்ற செய்தியை என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது, அதனை முழுவதுமாகக் கேட்காமலேயே, இந்த வயசில உனக்கு ஏண்டா அரசியல் என்று என் அம்மா திட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1989 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது எங்கள் தொகுதியில் மக்களுக்கு விளக்க, மாதிரி வாக்குச் சீட்டுகளை ஒரு கட்சி அச்சடித்து, இந்த இடத்தில் முத்திரை குத்த வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்தச் சீட்டை தேர்தல் அன்று கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதுஉண்மையான வாக்குச் சீட்டு என நினைத்து சில கட்சிக்காரர்கள் யாருடா நீ, உனக்கு யாருடா இதைக் கொடுத்தா என மிரட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1999ம் ஆண்டு ராமநாதபுரம் நாடளுமன்றத் தொகுதி தேர்தலில் பவானி ராஜேந்திரன் அவர்களுக்கு ஓட்டுப் போட்ட போது, சீ! தேர்தல்னா இவ்வளவுதானா, என்று ஒரு சலிப்பும் வந்தது.

Saturday, February 10, 2007

வரிக்கு வரி செலுத்தும் அவலம்.

இந்தியாவில் மதிப்புக் கூட்டுவரி அமல் செய்த பிறகு ஒரு பொருளை வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறேம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது என்பது ஒரு நல்ல விசயம்.

ஆனால் அதுவே ஒரு கூட்டுக் கொள்ளையாக , செலுத்திய மதிப்புக் கூட்டுவரிக்கே வருமான வரி செலுத்த வேண்டிய மோசமான நிலையை நாம் இப்போது நேரடியாகப் பார்க்க முடிகிறது.

அதாவது ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் பொருள்களை வாங்கும் போது 10000 ரூபாய மதிப்புக் கூட்டு வரியாகச் செலுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தற்போது வரி விதிக்கத்தக்க வருமாணம்(Taxable Income) 2,50,000 ரூபாயைத் தாண்டும் போது 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.

தனிநபரின் Taxable Income 2,60,000 ரூபாய் என்றால் 2,50,000 க்கு மேற்பட்ட 10,000 ரூபாய்க்க்கு 30 சதவீத வரியாக ரூபாய் 3000 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதாவது நான் அனுபவிக்காத 10,000 ரூபாய்க்கு 3000 வரி செலுத்த வேண்டுமாம். இந்தக் கூட்டுக் கொள்ளையை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

அதாவது நான் வாங்கிய பொருட்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 42.5 சதவீதம் வரை வரி.

இப்படிக் கண்டபடி வரி விதித்தால் வேறு வகைகளில் பித்தலாட்டம் செய்பவர்களே அதிகரிக்கிறார்கள்.

அதாவது அரசு மறைமுககாக கருப்புப்பணமும் பதுக்கலும் உருவாகக் காரணமாக இருக்கிறது.

யார் மனசிலே யாரு. என் மனசிலே யாரு. அவங்களுக்கு என்ன பேரு!

நான் பிரபல வலைப்பதிவர் ஒருவரை மனதில் நினைத்து 11 கேள்விகள் கேட்பேன். அதற்கு ஆம்/இல்லை நானே பதிலும் சொல்லிவிடுவேன். கேள்வியையும் பதிலையும் வைத்து அவர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

1. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் ஆணா?
ஆம்.

2. இந்திய நாட்டவரா?
ஆம்

3. தென் இந்தியரா?
ஆம்

4. அவர் தமிழ்நாட்டுக் காரரா?
ஆம்

5. அவர் ஆணா?
ஆம்

6. ஐம்பது வயதைத் தாண்டியவரா?
ஆம்

7. வலைப்பதிவில் அவருடைய பெருமைக்குக் காரணம் அரசியல்,பொழுது போக்கு, சுயபுராணம் தானா?
ஆம்

8.அவர் அடிக்கடி சர்சைகளில் சிக்கிக் கொள்பவரா?
ஆம்

09.அவர் உண்மையான பெயரில் மட்டுமே எழுதுபவரா?
இல்லை.

10. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் வலையுலகில் ஒரு விளம்பரப் பிரியரா?
ஆம்.

11.அவருக்கும் டெண்டுல்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஆம்.

அவ்வளவு தான் மக்களே. பதிலைப் பின்னூட்டங்களாகச் சொல்லுங்கள். மேலும் இது போன்ற கேள்வி பதிவுகளை ஆரம்ப்பித்துக் காலாய்க்க நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி அகியோரை அழைக்கிறேன்.

Sunday, December 31, 2006

என் மைசூர் சுற்றுலாப் பயணம் - சில புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு மைசூர் சுற்றுலா சென்றிருந்தேன். அது ஒரு நாள் பயணம் என்பதான் மைசூர் விலங்குகள் பூங்காவும், பிருந்தாவன் தோட்டம் ஆகியவைகள் மட்டுமே சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு பயணம் நல்ல முறையில் அமைந்தது. இதோ அந்தப் பயணத்தின் சில நினைவுகள்.

வெள்ளை மயில். சாதாரணமாகப் பல இடங்களில் காணப்படுவதில்லை. திருப்பரங்குன்றத்தில் இவைகளை நான் பார்த்திருக்கிறேன். பெண் மயிலைப் பார்க்கும் போது பெரிய பிராய்லர் கோழியின் நினைவு ஏனோ வந்து போனது.

இவைகள் நம்முடைய முன்னோர்கள். கொரில்லா குரங்குகள் இந்தியாவில் மைசூரில் மட்டுமே பாதுகாத்து வரப்படுகிறது.

காண்டாமிருகம். வெயிலின் சூடு தாங்காமல் தண்ணீர்த் தொட்டியைத் தேடி வருகிறார்.

வரிக்குதிரை. நிழலில் ஓய்வு எடுக்கிறார். நம்ம ஊர் கழுதைகளுக்குச் சூடு போட்டால் அவைகள் வரிக்குதிரை ஆகிவிடுமா?

இவரும் நம்ம முன்னோர் தான். எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி தாவிக்குதித்து நடனமாடி மகிழ்வித்தார்.

ஆப்பிரிக்க யானை. இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். வேறு யானைகள் எதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் வந்திறங்கியதாகத் தகவல்கள் இல்லை எனவே இந்தியாவில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் இதுவும் ஒன்று. இந்தப் புகைப்படம் ஆனந் அவர்களின் இந்தப் பதிவை மனதில் நினைத்துக் கொண்டே எடுத்தேன். யானையாரும் நன்கு ஒத்துழைத்ததால் புகைப்படமும் நன்றாக அமைந்துள்ளது.

மைசூர் பிருந்தாவன் பூந்தோட்டத்தின் அழகிய தோற்றம். பிருந்தாவனம் என்றதும் அது தனியாரால் நடத்தப்படும் பூங்கா என்று தவறாக இந்தனை நாட்கள் நினைத்திருந்தேன். அது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் நிர்வாகத்தில் இருக்கின்றது என்று சென்றவாரம் தான் தெரிந்தது. பூங்கா ரம்யமாக இருக்கிறது.

டிஜிட்டல் காமிரா என்பதால் நினைபதை, பார்ப்பதையெல்லாம் சுட்டதில் சுமாரக வந்த பூக்கள்.



கே.ஆர்.எஸ் அணைக்கட்டில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடல் போல் விரிந்து கிடக்கும் காவிரி நீர் கே.ஆர்.எஸ் அணைக்கட்டில். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் தான்.

இரவில் இசைக்கு ஏற்ப நடனமாடிய நீர்வீழ்ச்சி. நேரில் பார்க்க மிக அருமையாக இருந்தது. டிஜிட்டல் கேமராவில் mode செட் செய்யத் தெரியாததால் இரவில் நகரும் பொருட்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை.

Thursday, December 21, 2006

ஒரு நீதிக்கதை.

ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்று மிகவும் நல்ல பண்பு,பாசம்,நேசம்,மனிதத்தன்மை,உண்மை போன்ற குணங்கள்.

மற்றொன்று கோபம்,பொறாமை,பொய், தான்மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார்.

அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன்.தாத்தா நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார்.

நீதி :
நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

இது இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

Wednesday, December 13, 2006

உஷாரய்யா உஷாரு!!!

நேற்று மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது ஒருவர் தன்னிடம் டிஜிட்டல் வீடியோ கேமரா இருப்பதாகவும் விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டார்.

சரி காண்பியுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு ஓரமாகக் கூட்டிச் சென்று காண்பித்தார். அது நிக்கான் எஸ்.எல்.ஆர் கேமரா போல இருந்தது(நிக்கான் காமிரா அல்ல). காமிராவைக் காட்டி இதன் மூலம் 4 மணி நேரம் வீடியோ பதிவு செய்யலாம் என்று சொன்ன போது, சரி டேப் எப்படி கேமராவில் மாட்டுவது என்று கேட்ட போது அது அவர் உளற ஆரம்பித்தார். வுடு ஜூட் என்று எஸ்கேப் ஆனேன். அவரோ என்னைத் துரத்திக் கொண்டே அலுவலகம் வரை வந்தார்.

இது போல இரண்டு முறை மயிரிழையில் ஏமாற்றலில் இருந்து தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் ஒருவர் தான் குடும்பத்துடன் ஊரில் இருந்து வந்ததாகவும் பணம் இல்லாததால் ஒரு கைக்கடிகாரத்தைக் காட்டி அதன் விலை 1000 ரூபாய் என்றும் அதனை வைத்துக் கொண்டு 700 ரூபாய் மட்டும் தருமாறுகேட்டார்.

அப்போது திடீரென் ஆஜரான மற்றொருவர் தான் தான் அருப்புக்கோட்டையில் பிரபலமான கைக்கடிகாரக் கடையின் உரிமையாளர் என்றும் மதுரை செல்வதற்காக பேருந்துக்குக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு அந்தக் கடிகாரத்தை வாங்கிப் பார்த்தார். இது ஒரிஜினல் கடிகாரம் என்றும் 1000 ரூபாய் விலை பெறும் என்றும் கூறினார்.

நான் உடனே, மதுரை பஸ் அங்கிட்டு(வேறுபக்கம்) அல்லவா நிற்கும். மேலும் மதுரை செல்லக் காத்துக் கிடக்கத் தேவையில்லையே? நீங்கள் சுமார் அரை மணிநேரமாக இந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதுதான் தாமதம் , இருவரும் தலைதெறிக்க ஓட்டம்
பிடித்தனர்.(நமக்கு நன்கு தெரிந்த ஊர்களில் இது போல அடிச்சு ஆடலாம்.:)))) ).

மற்றொரு முறை சென்னை வடபழனியில் பேருந்துக்காக் காத்துக் கொண்டிருந்த போது ஒருவர் தன்னிடம் தங்கம் இருப்பதாகவும் குறைந்த விலைக்குத் தருவதாகவும் கூறினார்.

அப்போது என்னிடம் கையில் ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.எனவே என்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அவருடன் ஓரமாக ஒதுங்கினேன். அப்போது மற்றொருவர் தனக்கும் தங்கம் வேண்டும் என்று கூறி என்னுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் ஒரு பையில் இருந்து ஒரு தங்கக் கட்டியை எடுத்துக் காட்டினார்.உடனே என்னுடன் சேர்ந்து கொண்ட மற்றொருவர் தங்கத்தை வாங்கி உள்ளங்கையில் உரசிப்பார்த்துப் பின்னர் அதனை முகர்ந்து பார்த்தார். உடனே அது சுத்தமான தங்கம் என்று சர்டிபிக்கேட் கொடுத்தார்.

எனக்கோ உரைகல்லில் உரசிப்பார்த்தாலே போலிகளைக் கண்டறிய சிரமமாக உள்ள காலத்தில், உள்ளங்கையில் உரசிப்பார்த்து சொல்வதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

உடனே, சார் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார், நான் ஐம்பது ரூபாய் இருக்கிறது என்றேன். சார் செயின் மோதிரம் ஏதாவது இருந்தால் நாம் தங்கத்தைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்டவுடன் எதுவும் இல்லையே என்றேன். கடுப்பாகிப் போய் இருவரும் திட்டிக் கொண்டே சென்றனர்.

ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

Saturday, November 18, 2006

கணிணித் துறையிலும் பரவிவிட்ட ஊழல்!

சென்ற வாரம் கணிபொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் தொலைபேசி செய்து, தனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னார். நான் வாழ்த்துக்களைச் சொன்ன போது , அந்த நிறுவனத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அலுவலர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்பதாகச் சொன்னார். நான் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும் சில மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்து மேலதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும்மாறு அறிவுறுத்தினேன்.

இதே போன்று எனக்கும் ஒரு அனுபவம் நடந்தது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது பல நிறுவனங்கலுக்கும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளேன்.அப்போது அனுபவம் குறைவாக இருந்தாலும் தொழில் நுட்ப அறிவு அதிகம் இருந்த காரனத்தால் பல நிறுவனங்களில் நான் அதிகச் சம்பளம் கேட்டிருக்கிறேன். எனவே பல இடங்களில் தேர்வாகாமல் சென்றிருக்கிறேன்.

கடந்த 2004 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிர்லாசாப்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் முடிவில் என்னைத் தேர்வு செய்ய அந்த நிறுவனத்தின் HR சேவியர்/ஜோசப் என்னிடம் ரூபாய் 5000 லஞ்சமாகக் கேட்டார். நான் யோசித்து மறுநாள் காலையில் சொல்வதாகச் சொல்லி அந்த இடத்தில் இருந்து நழுவிவேன். மறுநாள் காலை ஒரு திட்டத்துடன் நான் 5000 ரூபாய் செக் தருகிறேன் என்று சொன்னதும் அவர் பயந்து போய் பணமாகக் கொடுக்குமாறு என்று கேட்டுக் கொண்டார். சரி என்று சொல்லி இரண்டு நாட்கள் இழுத்தடித்தேன். பின்னர் நான் அவருக்குப் போன் செய்து பணம் தரமுடியாது திட்டவட்டமாகச் சொன்னதும், மறுநாள் அப்பாயிண்ட் கடிதத்தை தபாலில் அனுப்பி வைத்தார்(ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை).

பின்னர்,இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டு, செய்யும் வேலையையும் விட்டு விட்டேன். இருந்தாலும் மனதில் இருந்த ஒரு உறுத்தலின் காரணமாக வேறு ஒரு நிறுவனத்திலும் நேர்முகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பெங்களூருக்குச் வர முடிவு செய்து விட்டேன். இதற்குள் வேறு யாரோ ஒருவர் மூலம் பிர்லா சாப்ட் நிறுவனத்திற்குத் தகவல் சென்று சேவியர்/ஜோசப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில் தோல்வி அடைந்து பலர் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர்.

ஆனால் இப்போது பல இடங்களிலும் இது போல தில்லு முல்லு வேலைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் அதிகாரங்கள் பலரிடம் இருப்பதால் இது போல எளிதில் தவறுகள் நடக்கின்றன. ஒரு HR நினைத்தால், டம்மியாக ஒரு நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு யாரையும் பணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடக்கின்றன. மேலும் சம்பளம் அதிகம் கிடைப்பதால் லஞ்சம் கொடுப்பதற்கும் யாரும் தயங்குவதும் இல்லை.

திறமையான கணிப்பொறி வல்லுநர்களே தங்களின் வேலைக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள். பிடிபட்டால் வேலை போவதுடன் அடுத்த வேலைக்குச் செல்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே உஷார்.....

Wednesday, October 18, 2006

வரி நீக்கத்தால் தமிழ் வளர்ந்ததா??

நேற்று பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் டி.வி.டி வாங்கச் சென்றேன். எம்டன் மகன் என்ற படம் இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ அப்படி ஒரு படமே வரவில்லை என்று சொன்னார்.

என்னடா இது வம்பாப் போச்சு என்று என் நண்பனைத் தொலைபேசியில் அழைத்து "என்னாடா, எம்டன் மகன் படத்துல பரத் படத்துல நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னீயே, கடைக்காரர் அப்படி ஒரு படமே வரலன்னு சொல்றார்டா என்றேன்." எம்டன் மகன் படத்தை எம் மகன் என்று தமிழ் வளர்சிக்காக பெயர் மாற்றப்பட்டதையும், அதற்காக திரையுலகினரின் பாராட்டுவிழா என்று குத்தாட்டத்தை தாத்தா கலைஞ்ர் ரசித்ததையும் அதற்குப் போட்டியாக ஜெயா டீ.வி யும் புரட்சித் தலலவியும் குத்தாட்டத்தை ரசித்து பார்த்த மற்றொரு நிகழ்சியை போட்டுக் காட்டியதை சொல்லி அங்கிருந்தபடியே காறித் துப்பினான். நமக்கு எதுக்குப்பா அரசியல் என்று 'எம் மகன்' படத்தை வாங்கிப் பார்த்தேன். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் 'எம்டன் மகன்' 'எம் மகன்' ஆனதால் தமிழ் வளர்ச்சி அடைந்ததா என்று குண்டக்க மண்டக்க நினைத்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.

இந்த பெயர் மாற்றத்தால் ஒரு மண்ணாங்கட்டி வளர்சியும் இல்லை. கலைஞருக்கு நல்ல வருமானம் மற்றும் 80+ வயதிலும் இளைஞராக இருந்து நமீதாவின் கவர்சியை ரசிக்க நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும்.

இதில் கருவிகளின் பெயர்கள்,அறிவியல் சொற்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக 'வாங்க டாக்டர்' என்பதற்கு 'வாங்க வைத்தியரே' என்று சொல்லலாம். 'டீ.வி யை ஆப் பண்ணு' என்பதை 'தொலைக்காட்சியை நிறுத்து' என்று சொல்லலாம். இப்படிச் சிறிது சிறிதாக தமிழ் சொற்களைப் பழக்கத்தில் கொண்டு வரலாம்.

Wednesday, October 11, 2006

யார் மனதில் யார்? அவங்களுக்கு என்ன பெயர்?

G.S.பிரதீப்... தி கிராண்ட் மாஸ்டர். இவர் பெயர்களின் புதையல்.

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமானவர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பான செய்திகள் அவர்களைப் பற்றிய தகவல்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.
ஆம் நான் சொல்லிக் கொண்டிருப்பது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராண்ட் மாஸ்டர் நிகழ்சியைப் பற்றித்தான்.

இது ஒரு மிகவும் அருமையான தொலைக்காட்சி நிகழ்சி.

நிகழ்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரு பிரபலமானவரை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். கிராண்ட் மாஸ்டர் உங்களிடம் 21 கேள்விகள் கேட்பார்.
அதற்கு ஆம், இல்லை என பதில் சொல்ல வேண்டும். முடிவில் நம் மனதில் உள்ள அந்தப் பிரபலமானவரை அவர் 99 சதவீதம் சரியாகச் சொல்லி விடுவார்.

கிராண்ட் மாஸ்டரால் கண்டறிய முடியாத பெயர்களை நாம் மனதில் நினைத்திருந்தால் நமக்குப் பரிசு இருபத்து ஐந்தாயிரம், ஐம்பதாயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு.

நான் கடந்த 10 வாரங்களாக நிகழ்சியைப் பார்த்து வருகிறேன். அதில் அவரால் மார்க்கோபோலோ மற்றும் தமிழ்வாணன்(மணிமேகலை பிரசுரம்)ஆகிய பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த விளையாட்டில் நடுவராக மூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். நிகழ்சியின் ஆரம்பத்தில் நாம் நினைத்திருக்கும் பெயரை அவர்களிடம் ரகசியமாகச் சொல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பெயரை அனுமதித்தால் நாம் விளையாடலாம். மேலும் நடுவர்கள் நம்முடைய பதில்களை உடனுக்குடன் சரிபார்த்து , நம் பதில் தவறு என்றால் உடனே எச்சரிக்கை செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு நம் அறிவுக்குத் தீனி போடும் நிகழ்சியாகும்.

கடையில் நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். இந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்குபவர் நடிகை காயத்திரி ஜெயராம். வழு வழுப்பாக அழகாக இருக்கிறார்.குரலும் அழகாக வசீகரமாக இருக்கிறது. இது தான் அவருடைய உண்மையான குரலா அல்லது மாற்றிப் பேசி தொகுத்து வழங்குகிறாரா என்று தெரியவில்லை. அருமை.

லண்டனில் நான் இருந்த போது வேறு வழியே இல்லாமல் சன் டீவியில் கோலங்கள், செல்வி போன்ற கொடுமையான தொலைக்காட்சிகளை நிகழ்சிகளை வேறு வழியில்லாமல் பார்த்தேன்.பெங்களூரில் இப்போது அதில் இருந்து எனக்கு விடுதலை.

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டீவியில் தான் அருமையான நிகழ்சிகள் இருக்கின்றன.

யார் மனதில் யார்?, ஹட்ச் கலக்கப் போவது யார்?, தீபாவளி கலாட்டா போன்றவைகள் அருமையாக இருக்கின்றன. இவைகளைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சீக்கிரம் கிளம்பி விடுகிறேன்.

Sunday, August 06, 2006

என் ஆசிரியர் - 2

பாகம் 1 - அறிவுச் செல்வன்

நான் பள்ளியில் படித்துக் ஒன்பதாம் வகுப்பு கொண்டிருந்த போது எங்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தவர் எங்கள் பள்ளியின் தாவரவியல் ஆசிரியரான திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.ஆங்கிலப் பாடம் எடுக்க ஆசிரியர் பற்றாக்குறை வந்ததால் தாவரவியல் ஆசிரியரை ஆங்கில ஆசிரியராக வாரம் ஐந்து மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொல்லியிருந்தார் தலைமை ஆசிரியர்.

உரைநடை, ஆங்கில இலக்கணம் இது போன்ற பாடங்களை அவர் வேறு ஆசிரியர்களின் துணையின்றி இலகுவாக கற்பித்தார். ஆங்கிலச் செய்யுள்களுக்கு வேறு சில ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு வந்து எங்களுக்குப் போதனை செய்தார்.

அவரின் வகுப்புகள் மிகவும் எளிமையாகவும் ஆங்கிலம் என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதகவும் அமைந்திருந்தன. வகுப்பில் கடைசி மாணவன் கூட ஆங்கிலத்தில் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்கள் பெற்றனர்.

ஆங்கில வகுப்பு எடுப்பதற்காகவே தினமும் இரண்டு மணி நேரம் தன்னைத் தயார் செய்து கொள்வார். ஒரு மாணவனின் நிலையில் இருந்து வகுப்பில் என்னன்ன சந்தேகங்கள் வருமோ அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார்.

ஆங்கிலத்தில் சுமாராகப் படிக்கும் எல்லோருக்கும் வகுப்பெடுக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே ஆங்கிலத்தில் வினைச்சொற்கள் அடங்கிய ஒரு லிஸ்ட் கொடுத்து அதன் ஒவ்வொன்றின் அர்த்தமும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு அஸைன்மெண்ட் கொடுத்தார். யாரிடமும் கேட்கக் கூடாது, தெரியாத வார்த்தைகளுக்கு அகராதியில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது கட்டளை. இந்தப் பயிற்சி எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

அந்த ஆண்டு கல்வி அதிகாரியின் பள்ளிச் சோதனையின் போது எங்களின் ஆங்கில வகுப்பை மட்டும் சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தார். ஒவ்வொறு மாணவர்களின் ஆங்கில அறிவு, ஆசிரியரின் பாடம் கற்பிக்கும் முறை,ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க எடுத்துக் கொண்ட குறிப்புகள் இவை அனைத்தையும் கண்டு மிகுந்த மகிழ்சியுடன் இந்த வகுப்பறைதான் தான் ஆய்வு செய்த வகுப்புகளிலேயே தன்னை 200 சதவீதம் திருப்தி அடையச் செய்தது என்று குறிப்பிட்டார்.

அன்றிலிருந்து ஒன்பதாம் வகுப்பின் நிரந்தர ஆங்கில ஆசிரியராக மாற்றப்பட்டார். அவரின் இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் மாணவர்க்ளின் தேர்ச்சி விகிதம் அதிகமானது.

என் போன்ற வசதியில்லாத மாணவர்களுக்காக வீட்டில் இலவசமாக டியூசன் எடுத்து ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களைப் பயிற்றுவித்தார். அவரின் கணவர் வேறு ஒரு பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் என்பதால் கூடுதலாக உயிரியல் பாடங்கள் நன்றாகப் படிக்க முடிந்தது.

தாவரவியல் ஆசிரியர் என்பதால் அவரின் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்கும். செம்பருத்திச் செடியின் கீழே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் வெள்ளையாகவும், மேலே உள்ள கிளைகளில் இருந்து வரும் பூக்கள் சிவப்பு நிறமாகவும், நடுப்பகுதியில் இருந்து வரும் பூக்கள் இரண்டும் கலந்த நிறமாகவும் இருக்கும். வீட்டில் விதவிதமான போன்சாய் மரங்கள் கண்ணைக் கவரும். போன்சாய் ஆலமரம் விழுதுகளுடன் மிகவும் அருமையாக இருக்கும்.
மீன்கள், பாம்புகள் ஆகியவற்றை வெந்நீரில் போட்டு நன்கு அவியவைத்து அதன் எலும்புகளை மட்டும் உடையாமல் தனியே எடுத்து அதில் பல வண்ணம் பூசி அழகாக வீட்டு ஹாலில் மாட்டிவைத்திருப்பார் விலங்கியல் ஆசிரியர்.

இன்று வெள்ளைக்காரர்களுடன் ஓரளவு உருப்படியாக ஆங்கிலம் பேசமுடிகிறது என்றால் அதற்கு திருமதி. ராஜேஸ்வரி அவர்களும் ஒரு காரணம். அவரின் சேவைகளை நினைத்துப் பார்க்கும் இந்த நேரத்தில் அவரை வணங்குகிறேன்.

Friday, July 28, 2006

மித வேகம் மிக நன்று

நாம் பலமுறை பேருந்துகளில் செல்லும் போது நினைத்திருப்போம் "டிரைவர் வண்டிய உருட்டுராரு".பலபேர் டிரைவரின் காதுபடவே இதனைச் சொல்வார்கள். சில டிரைவர்கள் வீராப்பு கொண்டு வேகமாக வண்டியை ஓட்டுவார்கள்.சிலர் என்னதான் சொன்னாலும் "எருமை மாடு மேலே மழை பெய்த்தது போல ஆடி அசைந்த்து ஓட்டிச் செல்வார்கள்".கடந்த ஆண்டு வரை நம்ம ஊர் பஸ் டிரைவர்கள் பற்றிய என் எண்னமும் இப்படியே இருந்தது.

கடந்த ஆண்டு இந்தியா வந்த பொழுது, பெங்களூரில் இருந்து மதுரை வருவதற்காக பஸ் ஏறினேன். திட்டமிடாத பயணம் என்பதால் வந்த வேலை முடிந்ததும் பஸ்பிடித்து சேலம் வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 1 மணி. சேலம் - மதுரை பயணம். அரசு பஸ் டிரைவரும் கண்டக்டரும் "திண்டுக்கல் மதுரை மட்டும் ஏறிக்குங்க நாமக்கல் கரூர் நிக்காது" என்று சொல்லியவுடன் விரைவாக மதுரை சென்றுவிடலாம் என்று மனம் குதூகலித்தது.

பஸ்ஸின் முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் சீட். வசதியாகத்தான் இருந்தது. சேலம் பஸ்டாண்டை விட்டு வெளியே வந்ததுமே அசுர வேகத்தில் பஸ்ஸை இயக்கினார் டிரைவர். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நேஷனல் ஹைவே - 7ல் சுமார் 100கி.மீ வேகத்தில் பல தடைகளைத் தாண்டி பஸ் பறந்து கொண்டிருந்தது. நாமக்கல் தாண்டி ஒரு இடத்தில் லாரியை ஓவர் டேக் செய்ய வேண்டும். டிரைவர் வேகத்தைக் குறைக்காமல் எதிரே லாரி வருவதைக் கணக்கிட்டு வேகத்தை அதிகப்படுத்தி ஒரு ' H ' கட் அடித்து லாரியை முன்னேறிய போது முன்னே விழித்திருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அரண்டு போய்விட்டேன். ஒரு வினாடி நேரம் பிசகியிருந்தால் பஸ்ஸின் ஒரு பகுதி சின்னா பின்னமாகியிருக்கும். அப்போதுதான் நான் சுதாரித்து, இது சாதாரணமாக வேகமாக ஓட்டும் டிரைவரின் செயல் அல்ல என்று எனக்கு உரைத்தது. கொஞ்ச நேரத்தில் யாரோ ஒரு கரூர் டிக்கட் டிரைவருக்குத் தெரியாமல் ஏறி அமர்ந்திருக்கிறார்.

"டிரைவர் சார் என்னை கரூர் விலக்கு ரோட்டில் இறக்கி விட்டு விடுங்கள்" என்று சொன்னதுதான் தாமதம்டிரைவருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. "ஏன்யா என் உயிரை வாங்குறீங்க?" என்று வசவு செய்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

"சார் இவனுங்க தொல்லை தாங்க முடியல சார்" என்று என்னைப் பார்த்துக் கூறினார்,"நைட் நேரம். நிறுத்தித்தான் போகலாமே சார்?" என்றேன் நான்."நான் தூங்கி கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஆகிவிட்டது தெரியுமா சார்" என்றார் டிரைவர்.

தூக்கி வாரிப் போட்டது எனக்கு.

"ஆமாம் சார் டிரைவர் பற்றாக்குறை என்று அடிக்கடி ஓவர் டியூட்டி போட்டுடுராங்க சார். என்னால கண்ணை முழிச்சுப் பார்க்க முடியல சார். கண்ணெல்லாம் எரியுது"

"மெதுவாகப் போனால் தூங்கிவிடுவேன். அதனால் தான் வெறியுடன் வண்டியை விரட்டுரேன்"

"சீக்கிரம் மதுரை போய்விட்டால் தூங்கிவிடலாம்" என்றார் டிரைவர்.

"புலம்பாம வண்டியை ஓட்டுய்யா" என்று சொல்லிவிட்டு கண்டக்டர் தலையச் சாய்த்து விட்டார்.

என்ன விபரீதம் இது. அரசு நிர்வாகம் டிரைவர்களுக்கு ஓவர் டியூட்டி கொடுத்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதே என்று ஆத்திரம் வந்தது. அதற்குள் என் பக்கதில் இருந்த பெரியவர் விழித்துக் கொண்டு விட்டார். டிரைவர் சார் அருகில் ஏதாவது டீக்கடை வந்தால் நிறுத்துங்க, டீ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்றார். சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை வந்தது. டிரைவருக்கு நல்ல ஸ்டிராங்காக இரண்டு டீ சொன்னோம்.

நன்றாக முகத்தைக் கழுவிவிட்டு சிறுது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயண ஓட்டுநர்களுக்கு நல்ல ரெஸ்ட் வேணும் சார், இல்லேண்ணா, தூக்கத்தில் வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும் என்றார். எங்க கஷ்டத்தை யாரும் புர்ந்துகிட மாட்டேங்கிறாங்க சார். எனக்கு 20 வருட அனுபவம் அதனால் சமாளிக்கிறேன். சின்னப் பசங்க என்றால் இந்நேரம் அந்த லாரியில் வண்டியை நுழைத்திருப்பாங்க என்றார்.

உங்களுக்கு ஓவர் டியூட்டி ஏன் போடறாங்க? வண்டிய எடுக்க முடியாதுன்னு மேனேஜரிடம் சொல்லலாமே என்றேன்.

பேன் காத்துலேயும், ஏசியிலேயும் உக்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு எங்க கஷ்டம் புரியாது. நாங்களும் முடியாதுன்னு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா வேற ஏதாவது விசயத்தில கோர்த்து விட்டுப் பழிவாங்கிடுவான் அந்த ஆள், என்றார். மேலும் அரசு டிரைவர்கள் பற்றாக்குறை மற்றும் திருவிழாக்காலங்களில் விடப்படும் சிறப்புப் பேருந்துகளால் ஏற்படும் பணிச்சுமை இது போல பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களிலும் சில நேரம் டியூட்டி போட்டுவிட்டால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட முடியாது. இது போன்ற நாட்களில் எங்களுக்கு அலவன்ஸ் கிடைத்தாலும் அது குடும்பதினருடன் செலவிட நினைக்கும் சந்தோசத்திற்கு இணையாகாது பணம்.

இது போல தூக்கத்தைக் கட்டுப்படுத்ததான் டிரைவர்கள் சிகரெட், பான்பராக் போன்ற பழக்கத்தை ஆரம்பிக்கிறாங்க. பிற்காலத்தில் அதற்கு அடிமையாகி உடல் நலம் கெட்டு பாதிக்கப்படுறாங்க என்றார்.

சார் எங்களுக்கும் குழந்தைகள் குடும்பம் எல்லாம் இருக்கு. உங்களுக்கெல்லாம் வேலைக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம் என்ற உத்திரவாதம் இருக்கு. ஆனால் எங்களுக்கு இல்லை.

நாங்க தவறு செய்தாலோ, இல்லை எதிரே வருகிறவன் தவறு செய்தாலோ, மெக்கானிக் தவறு செய்தாலோ எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து என்றார். அவரின் தொழில் பற்றிய கருத்துகள் முற்றிலும் நியாயமானவையே.

உண்மையிலேயே சொல்லப் போனால் நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்ங்கதான் ரூல்ஸ் பாலோ பண்ணி வண்டி ஓட்டுவாங்க. அவங்க வேகம் எப்போதுமே 50கி.மீ தாண்டாது. வண்டியும் கண்டிஷனாக இருக்கும். மேலும் எல்லா இடத்துலேயும் பொறுமையாக செயல்படுவாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. எங்களுக்கு நேரம் முக்கியம். அதனால் தான் அவசரப்பட்டு வேகமாக ஓட்டி சில நேரங்களில் விபத்துக்குக் காரணமாகிவிடுகிறது என்றார்.

எங்களுக்கும் நல்ல ஓய்வு, தினமும் 8 மணிநேரம் வேலை, நல்ல கண்டிஷனில் வண்டிகள் அப்படீன்னு இருந்தா எங்கலாலேயும் விபத்துகள் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்.

வண்டி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நுழைந்த பொழுது காலை 6.30 மணி. டிரைவர் சார் வாங்க டீ அடிக்கலாம் என்று அழைத்தேன். அவர் சிரித்துக் கொண்டே என்னுடன் சேர்ந்து ஒரு டீ குடித்து விட்டு நட்புடன் விடை பெற்றார். ராமநாதபுரம் செல்ல இன்னும் மூன்று மணி நேரப் பயணத்தை நினைத்து அலுப்பாக வந்தது எனக்கு.

Saturday, July 22, 2006

குழந்தையின் மேல் வன்முறை





இரண்டொரு நாட்கள் முன்பு சில சாமான்கள் வாங்குவதற்காகத் தமிழ்கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் ஒரு அழகான இரண்டு வயதுக் குழந்தையும் அப்பாவும் கடையில் ஏதோ பொருளைத் தேடிக் கொண்டிருந்தனர். அழகான குழந்தை அவ்வப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் முகபாவனைகள் மூலம் சில விளையாட்டுகாட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. நான் எட்டிப் பார்த்த போது அந்த அப்பா குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.(ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம். இதற்குச் சிறைத் தண்டனையோ அல்லதுமனநோய் மருத்துவரிம் ஒரு கலந்துரையாடலோ அரசால் ஏற்படுத்தப்படும்.) அந்தக் குழந்தை கடையில் அடுக்கி வைத்திருந்த சில பொருட்களைத் தள்ளி விட்டுவிட்டு விட்டது என்பதற்காக அந்தத் தந்தை குழந்தையை அடித்திருந்தார்.

குழந்தைகளின் மீது பெற்றோர் வன்முறை காட்டுவது என்பது ஒரு தவறான செயல். அது அவர்களின் ஆழ்மனதில் உள்ள சில சைக்கோத் தனமான எண்ணங்களால் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு வடுகிறது. அதற்குக் காரணம் பின்வருவனவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

1. மனைவியைப் பிடிக்காத கணவர்கள் குழந்தைகள் மீது காட்டும் வன்முறை.(அதற்குக் குழந்தை என்னங்க செய்யும். பாவம்)

2. பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால், அதனை அடக்க முடியாமல் சில நேரங்களில் குறைந்த ஆற்றல் உள்ளவர்களிடம் பீறிட்டு வெளிவருவது. (மன அழுத்தம் என்றால் என்ன என்பதும் கூட தெரியாமல் அதனால் அவஸ்தைப்படுவர்கள் அதிகம்)

3. தன்னுடைய குழந்தையின் செயல்களை/கல்வித் திறனை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல இல்லையே என்ற ஒரு வித ஈகோ மனப்பான்மையால் ஏறபடுவது.(தன்னுடைய குழந்தைக்கு என்ன ஆர்வம் என்று கண்டுபிடித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை)

4. உண்மையிலேயே ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறை காட்டுவது. (உதாரணமாக, எனக்கு ஐந்து வயதிருக்கும் போது 'முண்டை' என்ற சொல என் பேச்சில் அடிக்கடி வரும். என் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததால் விறகுக் கட்டை உடையும் வரை அடி வாங்கியது. அதன் பின்னர் அது போன்ற சொற்களைச் சொல்வதற்கு இன்றும் பயம்)

ஆக இதில் பெரும்பாலான தவறுகள் பெற்றோரிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் செய்யும் செயல்களை ரசிப்பது நம்மை மேலும் இளமையான மனநிலையில் வைத்திருக்கும். இன்றைய குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் நேற்று நாம் செய்ததின் தொடர்சியாக நினைத்து பாருங்கள், உங்களுக்குச் சிரிப்பு வரும்.

நான் மேலே சொன்ன நிகழ்ச்சி தொடர்ந்து சில முறைகள் நடந்தால் குழந்தையின் பிற்கால நடவடிக்கை எப்படி இருக்கும்? எந்த ஒரு பொருளையும் எடுப்பதற்கு யோசிக்கும். அதனால் அதில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் குறைந்துவிடும். அதன் தொடர்சியாக பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரு வழியிலான சிந்தனைகளே அந்தக் குழந்தையிடம் இருக்கும்.எதனையும் மாற்றுக் கோணத்தில்(Lateral thinking) ஆராயும் குணமும் குறைந்து விடும். அதுவே இந்தப் போட்டி நிறைந்த உலகில் பின் தேக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இன்றைய வலைப்பூ வாசகர்கள், படைப்பாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, கலைக்கதிர் போன்ற இதழ்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்திருப்பார்கள். அதன் தொடர்சியாகவே இன்று நல்ல வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குகிறீர்கள். பத்து வயதில் என்ன எப்போதும் கதைப் புத்தகம்? என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் வாசிக்கும் தன்மைகுறைந்தவர்களாகவே இன்றும் இருந்திருப்பீர்கள்.

எனவே குழந்தைகளை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். அன்பால் சொல்லி நல்ல வழியைக் காட்டுங்கள். நாளைய நல்ல மனிதர்களை உருவாக்குவது இன்றைய பெற்றோர்களின் கையில்.

Sunday, July 16, 2006

லண்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

டிரிங்.. டிரிங்..
..
"சொல்லுங்க அண்ணே..."
"மகேந்ரா எப்ப வர்ற.."
"இன்னக்கி மதியம் ஒரு மூணு மணியில இருந்து நாலுக்குள்ள வந்துடுறேன்."
"சரி அப்படியே மதன் வந்துருக்கானுல்ல அவனையும் கூட்டிட்டு வந்துரு."
"சரிண்ணே."

இது எனக்கு JK என நான் அழைக்கும் நம்ம ஜெயக்குமாருடன் என்னுடைய உரையாடல், நேற்று ஞாயிறு காலை 11 மணிக்கு

JK வீட்டிற்குள் நுழையும் போது 4.30 மணி.
வீட்டிற்குள் நுழையும் போதே, "எண்ணணே இன்னக்கி நண்டுக் குழம்பா.." என்று கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.
"இல்லப்பா, உங்களுக்காக prawn பிரியாணி."

அப்படியா ன்னு கேட்டுக் கொண்டே வீட்டில் அவரது குழந்தையுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு
prawn பிரியாணியும், ஆட்டு ஈரல் வறுவலையும் ஒரு பிடி பிடித்தேன்.

அப்படியே தமிழ்மணத்தின் லேட்டஸ்ட் நிலவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

"ஏண்ணே இப்ப எழுதுறத விட்டுட்டீங்க?"
"இல்லப்பா, என் குழந்தையுடன் விளையாடுவதற்கே நேரம் சரியா இருக்கு.
எழுதனும்.. ஒரு ஆறு மாதம் ஒரு வருசம் கழிச்சு" என்றார் JK.

அப்புறம் செல்வி, கோலங்கள் போன்ற சீரியல்களில் என்ன கதை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுக் கொண்டேன்.

அப்போது சன் நியூஸில் முத்தையா முரளிதரன் நிருபர்களுக்கு விமான நிலைய வாசலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

நம்ம லக்கிலுக்கை ரெம்ப விசாரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து "அப்படியே நைட் சாப்பாடும் சாப்டுட்டுப் போயிருங்க" என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
"வந்த நோக்கத்தை கரக்டாக கண்டு பிடிச்சுட்டீங்க போல.." அப்டீன்னு கொஞ்சம் காமெடி பண்ணிவிட்டு...

அவசர வெளி வேலைகள் இருப்பதால் போய்ட்டு வர்றேன் என்று விடை பெற்றோம்.

இப்படியாக லண்டனில் ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இனிதே நிறைவேறியது.


பின் குறிப்பு : JK எனக்கு 1998 ம் ஆண்டில் இருந்து தெரியும். அவர் எனக்கு கல்லூரியில் 2 வருடம் சீனியர்.

Saturday, July 15, 2006

அனுபவம் - மிக்சர் - 1

நான் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பி,ஈ மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்து விட்டது. வேறெ ஒன்னுமில்லீங்க, நம்ம பசங்க வேலி தாண்டிட்டாங்க. சும்மா, வேலியத் தாண்டி லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள போயி மாட்டிக்கிட்டாங்க.

ரெம்ப நாளா இதெல்லாம் ஒரு பிரச்சனையின்னு காலேஜே ரெம்பக் கலங்கிப் போயி இருந்துச்சு.

அப்பத்தான் cultural program நடத்துறக்குப் பிரின்ஸி கூப்டாரு. எப்படியாவது பொண்னுங்களைப் பழி வாங்கிடனும்மா மச்சிகளானுட்டு பசங்களெல்லாம் கிளம்பிட்டாங்க.

cultural programல் கடைசி நாள் பாட்டுக் கச்சேரி. ஒரு பையனும் பொண்ணும் பாட்டு படிகிறாங்க. அது தான் இப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருகிற பாட்டு.

இந்தப் பாட்டை ஒரு போட்டிக்காக பையனும் பொண்ணும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதாக நினைத்துக் கொண்டு கேளுங்கள்.

"திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடான்னு" பசங்க ஆரம்பிக்க
.......
"எங்கூருப் பொண்ணுகள மோப்பமிட வந்தவனை எங்க சீயான் மூக்கறுத்தாக.." ன்னு பொண்னு படிக்க பிள்ளைகலெல்லாம் ஒரு ஆட்டம் ஆடி பின்னெயெடுத்துட்டாங்க.

"நாங்க குளிச்சு அனுப்பி விட்ட கொறட்டாத்துத் தண்ணியில் ஏண்டியம்மா கறி சமைச்சீங்க" ன்னு பையன் பாட

லேடீஸ் ஹாஸ்லகுக்கு தண்ணீர் பசங்க ஹாஸ்டலில் இருந்து தான் போய்க்கிட்டு இருந்தத நினைச்சு ஒரு ஆட்டம் போட்டோம் பாருங்க.

"அட களவானிக் கோத்திரமே காளமாட்டு .த்திரமே" ன்னு படிக்க விசிலு பின்னி பெடலெடுத்துட்த்துட்டோம்.

இனையத்துல இந்தப் பாட்டைக் கேட்டதும் பழைய நினைவெல்லாம் வந்துட்டுதுங்க.


சூடு தணிய!!

இப்போது இங்கே நல்ல கோடை காலமாக இருப்பதால் சூடு தணிய சில யோசனைகள். தமிழ்மணம் படித்துவிட்டும் சாப்பிடலாம்.

1. தினமும் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் கண்ணை மூடிக்கொண்டு கசப்பை மறந்து மென்று தின்று விடவும்.

2.கால்கரி சிவா சொன்னபடி ஜிகர்தண்டா செய்து பருகிவந்தால் சூடு உடணே தணியும்.

3.சின்ன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு நன்று மென்று விழுங்கவும்.

இது தாங்க சூடு பிடித்துக் கொண்டால் நான் செய்யும் வைத்தியம். நீங்களும் தமிழ்மணம் படித்து விட்டுச் செய்து பாருங்கள். உடல் உடனே குளிர்ச்சியடையும்.

அப்படியே சித்த வைத்தியத்திற்கான கட்டணதை paypal மூலம் செலுத்திவிடவும்.

Sunday, July 02, 2006

பூவும் புஸ்தகமும்

---------------------------------------------------------
இந்தச் சிறுகதை தேன்கூடு ஜூலை மாத சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
--------------------------------------------------------

"அம்மா.. "

"என்னடா செல்லம்?"

"அப்பா இன்னக்கி எனக்குப் புஸ்தகம் எல்லாம் வாங்கிட்டு வருவாராம்மா?"
"கட்டாயம் வாங்கிட்டு வருவாருப்பா. அப்பா இன்னைக்கி சவாரி எல்லாம் முடிச்சிட்டு வரும் போது உனக்குப் புத்தகம் உனக்குப் பிடிச்ச பூந்தி எல்லாம் வாங்கிட்டு வருவார்."
"இப்ப நீ நல்ல பிள்ளையா இத சாப்பிடுவியாம் அப்புறம் அம்மா உனக்கு ஒரு கதை சொல்லுவேன். கதை கேட்டுக்கிட்டே நல்ல பிள்ளையாகத் தூங்கிடனும் சரியா."

"சரிம்மா."

ராம், இவன் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். அப்பா ஆட்டோ ஓட்டுநர் நடராஜ். அவரின் சொற்ப வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது.

"ஆட்டோ... சீக்கிரம் சென்ட்ரல் போகனும் இன்னும் அரைமணி நேரத்தில கல்கத்தா டிரெயின் புறப்பட்ரும். உடனே போகனும் வர்றீயா?"

"போயிரலாம் சார்..அரைமணி நேரம் இருக்குல்ல. ஏதாவது போட்டுக் கொடுங்க சார். "

"நீ மட்டும் சரியான நேரத்துக் போயிட்டீன்னா மீட்டருக்கு மேலே ஐம்பது ரூபாய் தர்ரேன்."

சார் நீங்க சீக்கிரம் ஏறுங்க. நடராஜுக்கு இன்று மகனுக்கு புத்தகமும் பூந்தியும் வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஆட்டோவை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நடராஜ். பல ஸ்கூட்டர், பைக் ஓட்டும் நடுத்தர மக்களிடம் சாவுகிராக்கி போன்ற வசவுகளைக் கேட்டுக் கொண்டே முன்னேறிச் செல்ல ஆரம்பித்தார்.

அங்கே ஒரு திருப்பதில் எதிரே வந்த பைக் மீது மோதுவதைத் தவிர்க்க எண்ணி வண்டியைத் திருப்பும் போது வண்டி குடை சாய்ந்து தலையில் அடிபட்டு நடராஜ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

"அம்மா.. இன்னைக்கி எனக்குப் புதுப் புத்தகம் வாங்கனும்மா. "

"அப்பா நாளைக்கு வாங்கித் தர்றேன்ன்னு சொல்லியிருக்காருப்பா."

"சரிம்மா டீச்சர் இந்த வாரத்துக்குள்ள எல்லோரும் புத்தகம் வாங்கிடனும்னு சொல்லியிருக்காங்கம்மா. "

"அப்பா கண்டிப்பா வாங்கிக் கொடுத்துவிடுவார். கவலைப்படாதே.நீ இப்பத் தூங்கு ராஜேஷ்,"

ராமும் ராஜேசும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரின் வீடும் பக்கக்த்துப் பக்கதில் தான்.

நடராஜின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பலத்த அலறல், அழுகை, கண்ணீர் அந்தத் தெருவையே நனைத்தது. பலருக்கும் நடராஜ் நண்பர்.
அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விடுபவரும் அவரே. பல குழந்தைகளுக்கு என்ன என்று சொல்லிப் புரிய வைக்க முடியாத நிகழ்வு அது.

மறுநாள்,

"ராம், உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு? "

"அவர் இறந்துட்டாருடா. "

"அப்படீன்னா அவர் திரும்பி வரமாட்டாராடா? "

"இல்லடா அவர் இருபது வருசம் கழிச்சு சாமிகிட்ட இருந்து திரும்பி வந்துடுவாருன்னு எங்க அம்மா சொன்னாங்க."

"எங்க தாத்தா கூட செத்துப் போயிட்டாருடா. அவரும் சாமிகிட்டப் போயிட்டுத் திரும்ப்பி வந்துட்டாருடா" என்றான் ராஜேஷ்

அடுத்த வாரம் ராஜேஸ் அம்மாவிடம் சொன்னான்

"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா"

"அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே"

"ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."

"அப்படியா, சரி நீ போய் தூங்கு ராஜேஸ்."

"சரிம்மா."

ஏங்க கண் கலங்குறீங்க என்று ராஜேஸின் அம்மா ராஜேஸின் அப்பாவிடம் கேட்டார்.

"தெருமுனையில இருக்கிற என்னோட பூக்கடையில தான் அன்னைக்கு நடராஜிக்குப் போட எல்லோரும் மாலை வாங்குனாங்க. அந்தப் பணத்துல தான் நான் நம்ம ராஜேஸுக்குப் புத்தகம் வாங்கினேன், இப்ப அத நினைச்சுத்தான் நான் கண்கலங்கினேன்" என்றார் ராஜேஸின் அப்பா.

Sunday, June 25, 2006

உலகம் இவ்ளோ சின்னதா?

லண்டனில் நானும் என் நண்பர் ராஜேஸும் தனியாக வாடகைக்கு வீடு பார்த்துத் தங்க முடிவு செய்து கடந்த வாரம் புதிய வீட்டிற்குக் குடியேறினோம். கல்யாணம் ஆகாத(ஆயினும்) பிரம்மச்சாரிகள் நான்கு பேர்கள் சேர்ந்து தங்கினால்தான் வீட்டு வாடகை கட்டுபடியாகும். எனவே வேறு நண்பர்களைத் தேடினோம்.

ராஜேஸின் நண்பரின் நண்பர் லண்டன் வருவதாகச் சொன்னதும் அவரையும் வீட்டின் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். கடந்த ஒரு வாரம் சேர்ந்து தங்கினாலும் வேலைப் பளு காரணமாக புதிய நண்பரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை. இந்த வாரயிருதி விடுமுறையில் அவரைப் பற்றிக் கேட்டதும் எனக்கு எழுந்த கேள்விதான் 'உலகம் இவ்ளோ சின்னதா?'

புதிய நண்பர் சந்தோஷ் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1997-2000 MCA படித்தவர்(ன்)(அவரே வாடா போடா நீ வா போ என்று சொல்ல உரிமை கொடுத்து விட்டார்). நான் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி 1998-2001 MCA படித்தவன். பல்கலைக்கழகமும் பொறியியல் கல்லூரியும் ஒரே சாலையில் தான் அமைந்துள்ளது.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் பல நண்பர்கள் உண்டு. என்னுடைய நண்பர்கள் பலர் அவருக்கும் நண்பர்கள். என்னுடைய B.Sc சீனியர் மாணவர் அவருக்கு MCA வகுப்புத் தோழர் என்று இருவருக்குப் பொதுவாகப் பல நண்பர்கள். அவரின் MCA ஜுனியர் மாணவர்கள் எனக்கு நண்பர்கள். பேசிக் கொண்டே போகும் போது, உங்களுக்கு இவரைத் தெரியுமா? அவரைத் தெரியுமா? என்று கேட்கக் கேட்க ஒரே ஆச்சயர்யம் பலரையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார், அல்லது நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

ஆக ஒரு புதிய நண்பரும் அவரின் மூலம் பல பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பச் சொல்லுங்கள் உலகம் இவ்ளோ சின்னது தானே?

Friday, June 16, 2006

தில்லுமுல்லு தில்லுமுல்லு-நீங்களும் சாமியார் ஆகலாம்-1



சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் டீவியில் மேஜிக் நிபுனர்கள் எப்படி மேஜிக் செய்கின்றனர் என்று அவர்களின் பின் முகத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பும், மேஜிக் செய்பவர்களிடம் எதிர்ப்பும் கிடைத்தது நினைவிருக்கலாம்.

நம் முத்து தமிழினி சாய்பாபாவின் முகத்தை உரித்துக் காட்டினார். நான் சில சாமியார்களின் சித்து வேலைகள் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். முடிந்தால் நீங்களும் சாமியார் ஆகி கோடி கோடியாகச் சம்பாதித்து அனுபவங்களை வலைப்பதியலாம்.

சில சாமியார்களிடம் போகும்போது அவர் நம்முடைய விபரங்களை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தால் அவர் அதில் இருந்து ஒவ்வொரு சீட்டாக எடுப்பார். அந்தச் சீட்டைப் பிரித்துப் படிக்காமலேயே அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை ஞான திருஷ்டியால் படித்துக் கூறுவார், இது எப்படிச் சாத்தியம்? அவர் சரியான விளக்கங்களைச் சரியாகச் சொன்னதும் பணக்காரர்கள் பணத்தை அவரிடம் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வித்தை மிகச் சுலபம் உங்களுக்கு வேகமாகப் படிக்கும் திறனும், ஞாபக சக்தியும் அதிகம் இருந்தால்.

சரி இப்போது வித்தைக்கு வருவோம்.

தேவையானவைகள்
1. உங்களின் ஞாபகசக்தி,
2. நம்பிக்கையான மூன்று சிஷ்யர்கள்
3. ஒரு பெரிய தாம்பாளத் தட்டு
3. பூக்கள் பக்தர்களின் காதுகளின் வசதிக்கேற்ப.
5. நல்ல பழங்கள்(கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் பக்தனுக்கு ஒரு வாழைப் பழமாவது கொடுக்க வேண்டாமா?)

சாமியார் ஒரு அறையிலும் பக்தர்கள் மற்றொரு அறையிலும், சுவாமிகளின் பூஜை முடிவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களுடன் சாமியார்களின் வேஷம் போட்ட இரண்டு சீடர்களும் பாலோடு கலந்த தண்ணீர் போல ஒன்னுமே தெரியாதது போல பவ்யமாக இருக்க வேண்டும்.

மற்றொரு சீடர் அவர்களிடம் இருந்து குறிப்புகள் எழுதிய சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சுவாமிகள் பூஜையை முடித்தவுடன் அனைவரும் மொத்தமாக சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மூன்றாவது சீடர் குறிப்புகள் எழுதிய சீட்டுகளை சுவாமிகளின் முன்னால் பவ்யமாக வைக்க வேண்டும்.

இப்போது சுவாமிகள்(அட நீங்க தாங்க) பிடித்த கடவுளை வணங்கி விட்டு முதலில் ஒரு சீட்டை எடுத்து ஞானதிருஷ்டியால் உங்களின் முதல் 'ஆமாம் சாமி' சீடரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். சீட்டைப் பிரிக்காமலேயே அவரின் விபரங்களை புட்டுப் புட்டு(சாப்பிடுற புட்டு இல்லீங்க) வைக்க வேண்டும். கடைசியாக சீட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் அவருடன் பேசிக் கொண்டே சீட்டில் எழுதியிருக்கும் குறிப்புகளைப் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தச் சீட்டு அங்கு அமர்ந்திருக்கும் யாருடைய சீட்டாகவாவது இருக்கலாம். பின்னர் பின்னால் நிற்கும் மூன்றாவது சீடரிடம் கொடுத்துவிட வேண்டும்.

சிறிது நேரக் கழித்து மூன்றாவது சீடர் மூலம் அடுத்த சீட்டை எடுத்துத்தரச் சொல்ல வேண்டும். சீட்டைப் பிரிகாமலேயே முதல் சீடர் எடுத்துக் கொடுத்த சீட்டின் விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்த பக்தரை அழைக்க வேண்டும். ஞாபகத்தில் உள்ள விபரங்களின் முலம் குறி சொல்லிக் கொண்டே அவர் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்க வேண்டும்.அவரை அனுப்பி விட்டு அடுத்த சீட்டை எடுக்க வேண்டும். இப்படியே தொடந்து நீங்கள் களைப்படையும் வரை நாள் முழுவதும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இடையில் முந்தய சீட்டின் விபரங்கள் மறந்து விட்டால் கூட்டத்தில் இருக்கவே இருகிறார் உங்களின் இரண்டாவது சீடர். அவரை அழைத்து விளையாட்டைத் தொடருங்கள். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டு திறமையாகப் பெரிய அளவில் செய்யலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

எனக்கு நீங்கள் சம்பாதித்த பணத்தில் ராயல்டி மட்டும் கொஞ்சம் கொடுதால் போதும். :))

அடுத்த சித்து இன்னும் சில நாட்களில். stay tuned...

Monday, June 12, 2006

நானும் 8 ம் நம்பரும்

8
நம்ம ஞானியாருக்கு மட்டும் தான் நம்பர்கள் ஆச்சர்யம் கொடுக்குமா என்ன?. எனக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 8 என்ற என் என்னைத் தொடர்ந்து வருகிறது. தவிர்க்க நினைத்தாலும் அது தான் கடைசியில் அமைகிறது.

நான் வீட்டில் இருந்து தனியே வந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது முதல் நான் தங்கியிருக்கும் அறை மற்றும் வீடுகளின் எண்கள் அல்லது அவற்றின் கூட்டுத் தொகை எட்டு என்றே வருகின்றது.

நான் B.Sc முதலாண்டு படிக்கும் போது விடுதியில் நான் தங்கியிருந்த அறை எண் - 8.
நான் B.Sc இரண்டாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 48.

நான் B.Sc மூன்றாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 9 அதாவது அந்த விடுதியில்(என் கல்லூரியில் நான்கு விடுதிகள் உள்ளன) அதில் எட்டாம் அறை வார்டனுக்கானது. அந்த அறையின் நேர் மேலே உள்ள அறை தான் 9.

MCA படித்த போது என் விடுதி அறையின் எண் 308. மூன்று ஆண்டுகளும் ஒரே அறையில் தான் இருந்தேன்.

நான் சென்னையில் இருந்த போது என் மேன்சன் அறையின் எண் 17. கூட்டுத்தொகை எட்டு.

லண்டனில் முதலில் நான் தங்கியிருந்த வீட்டின் எண்ணும் எட்டு. இப்போது தங்கியிருக்கும் வீட்டின் எண் 107. அடுத்த வாரம் நான் மாறப் போகும் வீட்டின் என் 86. இதிலும் 8 வருகிறது.

இப்படியாக நான் தங்கியிந்த/யிருக்கின்ற இடத்தில் எல்லாம் எட்டு என்ற என் துரத்திக் கொண்டே வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?