Saturday, November 18, 2006

கணிணித் துறையிலும் பரவிவிட்ட ஊழல்!

சென்ற வாரம் கணிபொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் தொலைபேசி செய்து, தனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னார். நான் வாழ்த்துக்களைச் சொன்ன போது , அந்த நிறுவனத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அலுவலர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்பதாகச் சொன்னார். நான் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும் சில மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்து மேலதிகாரிகளிடம் ஆதாரத்துடன் புகார் கொடுக்கும்மாறு அறிவுறுத்தினேன்.

இதே போன்று எனக்கும் ஒரு அனுபவம் நடந்தது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வேலை செய்த போது பல நிறுவனங்கலுக்கும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றுள்ளேன்.அப்போது அனுபவம் குறைவாக இருந்தாலும் தொழில் நுட்ப அறிவு அதிகம் இருந்த காரனத்தால் பல நிறுவனங்களில் நான் அதிகச் சம்பளம் கேட்டிருக்கிறேன். எனவே பல இடங்களில் தேர்வாகாமல் சென்றிருக்கிறேன்.

கடந்த 2004 ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் பிர்லாசாப்ட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் முடிவில் என்னைத் தேர்வு செய்ய அந்த நிறுவனத்தின் HR சேவியர்/ஜோசப் என்னிடம் ரூபாய் 5000 லஞ்சமாகக் கேட்டார். நான் யோசித்து மறுநாள் காலையில் சொல்வதாகச் சொல்லி அந்த இடத்தில் இருந்து நழுவிவேன். மறுநாள் காலை ஒரு திட்டத்துடன் நான் 5000 ரூபாய் செக் தருகிறேன் என்று சொன்னதும் அவர் பயந்து போய் பணமாகக் கொடுக்குமாறு என்று கேட்டுக் கொண்டார். சரி என்று சொல்லி இரண்டு நாட்கள் இழுத்தடித்தேன். பின்னர் நான் அவருக்குப் போன் செய்து பணம் தரமுடியாது திட்டவட்டமாகச் சொன்னதும், மறுநாள் அப்பாயிண்ட் கடிதத்தை தபாலில் அனுப்பி வைத்தார்(ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை).

பின்னர்,இன்னும் ஒரு மாதத்தில் வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டு, செய்யும் வேலையையும் விட்டு விட்டேன். இருந்தாலும் மனதில் இருந்த ஒரு உறுத்தலின் காரணமாக வேறு ஒரு நிறுவனத்திலும் நேர்முகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பெங்களூருக்குச் வர முடிவு செய்து விட்டேன். இதற்குள் வேறு யாரோ ஒருவர் மூலம் பிர்லா சாப்ட் நிறுவனத்திற்குத் தகவல் சென்று சேவியர்/ஜோசப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதில் தோல்வி அடைந்து பலர் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர்.

ஆனால் இப்போது பல இடங்களிலும் இது போல தில்லு முல்லு வேலைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. மிகப் பெரிய நிறுவனங்களில் அதிகாரங்கள் பலரிடம் இருப்பதால் இது போல எளிதில் தவறுகள் நடக்கின்றன. ஒரு HR நினைத்தால், டம்மியாக ஒரு நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு யாரையும் பணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடக்கின்றன. மேலும் சம்பளம் அதிகம் கிடைப்பதால் லஞ்சம் கொடுப்பதற்கும் யாரும் தயங்குவதும் இல்லை.

திறமையான கணிப்பொறி வல்லுநர்களே தங்களின் வேலைக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள். பிடிபட்டால் வேலை போவதுடன் அடுத்த வேலைக்குச் செல்வதிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஆகவே உஷார்.....