Sunday, June 25, 2006

உலகம் இவ்ளோ சின்னதா?

லண்டனில் நானும் என் நண்பர் ராஜேஸும் தனியாக வாடகைக்கு வீடு பார்த்துத் தங்க முடிவு செய்து கடந்த வாரம் புதிய வீட்டிற்குக் குடியேறினோம். கல்யாணம் ஆகாத(ஆயினும்) பிரம்மச்சாரிகள் நான்கு பேர்கள் சேர்ந்து தங்கினால்தான் வீட்டு வாடகை கட்டுபடியாகும். எனவே வேறு நண்பர்களைத் தேடினோம்.

ராஜேஸின் நண்பரின் நண்பர் லண்டன் வருவதாகச் சொன்னதும் அவரையும் வீட்டின் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். கடந்த ஒரு வாரம் சேர்ந்து தங்கினாலும் வேலைப் பளு காரணமாக புதிய நண்பரைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை. இந்த வாரயிருதி விடுமுறையில் அவரைப் பற்றிக் கேட்டதும் எனக்கு எழுந்த கேள்விதான் 'உலகம் இவ்ளோ சின்னதா?'

புதிய நண்பர் சந்தோஷ் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1997-2000 MCA படித்தவர்(ன்)(அவரே வாடா போடா நீ வா போ என்று சொல்ல உரிமை கொடுத்து விட்டார்). நான் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி 1998-2001 MCA படித்தவன். பல்கலைக்கழகமும் பொறியியல் கல்லூரியும் ஒரே சாலையில் தான் அமைந்துள்ளது.

எனக்குப் பல்கலைக்கழகத்தில் பல நண்பர்கள் உண்டு. என்னுடைய நண்பர்கள் பலர் அவருக்கும் நண்பர்கள். என்னுடைய B.Sc சீனியர் மாணவர் அவருக்கு MCA வகுப்புத் தோழர் என்று இருவருக்குப் பொதுவாகப் பல நண்பர்கள். அவரின் MCA ஜுனியர் மாணவர்கள் எனக்கு நண்பர்கள். பேசிக் கொண்டே போகும் போது, உங்களுக்கு இவரைத் தெரியுமா? அவரைத் தெரியுமா? என்று கேட்கக் கேட்க ஒரே ஆச்சயர்யம் பலரையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார், அல்லது நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

ஆக ஒரு புதிய நண்பரும் அவரின் மூலம் பல பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பச் சொல்லுங்கள் உலகம் இவ்ளோ சின்னது தானே?

Friday, June 16, 2006

தில்லுமுல்லு தில்லுமுல்லு-நீங்களும் சாமியார் ஆகலாம்-1சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் டீவியில் மேஜிக் நிபுனர்கள் எப்படி மேஜிக் செய்கின்றனர் என்று அவர்களின் பின் முகத்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பும், மேஜிக் செய்பவர்களிடம் எதிர்ப்பும் கிடைத்தது நினைவிருக்கலாம்.

நம் முத்து தமிழினி சாய்பாபாவின் முகத்தை உரித்துக் காட்டினார். நான் சில சாமியார்களின் சித்து வேலைகள் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். முடிந்தால் நீங்களும் சாமியார் ஆகி கோடி கோடியாகச் சம்பாதித்து அனுபவங்களை வலைப்பதியலாம்.

சில சாமியார்களிடம் போகும்போது அவர் நம்முடைய விபரங்களை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தால் அவர் அதில் இருந்து ஒவ்வொரு சீட்டாக எடுப்பார். அந்தச் சீட்டைப் பிரித்துப் படிக்காமலேயே அவர்கள் எழுதிக் கொடுத்த குறிப்பை ஞான திருஷ்டியால் படித்துக் கூறுவார், இது எப்படிச் சாத்தியம்? அவர் சரியான விளக்கங்களைச் சரியாகச் சொன்னதும் பணக்காரர்கள் பணத்தை அவரிடம் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வித்தை மிகச் சுலபம் உங்களுக்கு வேகமாகப் படிக்கும் திறனும், ஞாபக சக்தியும் அதிகம் இருந்தால்.

சரி இப்போது வித்தைக்கு வருவோம்.

தேவையானவைகள்
1. உங்களின் ஞாபகசக்தி,
2. நம்பிக்கையான மூன்று சிஷ்யர்கள்
3. ஒரு பெரிய தாம்பாளத் தட்டு
3. பூக்கள் பக்தர்களின் காதுகளின் வசதிக்கேற்ப.
5. நல்ல பழங்கள்(கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் பக்தனுக்கு ஒரு வாழைப் பழமாவது கொடுக்க வேண்டாமா?)

சாமியார் ஒரு அறையிலும் பக்தர்கள் மற்றொரு அறையிலும், சுவாமிகளின் பூஜை முடிவதற்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களுடன் சாமியார்களின் வேஷம் போட்ட இரண்டு சீடர்களும் பாலோடு கலந்த தண்ணீர் போல ஒன்னுமே தெரியாதது போல பவ்யமாக இருக்க வேண்டும்.

மற்றொரு சீடர் அவர்களிடம் இருந்து குறிப்புகள் எழுதிய சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். சுவாமிகள் பூஜையை முடித்தவுடன் அனைவரும் மொத்தமாக சுவாமிகளின் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும். மூன்றாவது சீடர் குறிப்புகள் எழுதிய சீட்டுகளை சுவாமிகளின் முன்னால் பவ்யமாக வைக்க வேண்டும்.

இப்போது சுவாமிகள்(அட நீங்க தாங்க) பிடித்த கடவுளை வணங்கி விட்டு முதலில் ஒரு சீட்டை எடுத்து ஞானதிருஷ்டியால் உங்களின் முதல் 'ஆமாம் சாமி' சீடரின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். சீட்டைப் பிரிக்காமலேயே அவரின் விபரங்களை புட்டுப் புட்டு(சாப்பிடுற புட்டு இல்லீங்க) வைக்க வேண்டும். கடைசியாக சீட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு நிமிடம் அவருடன் பேசிக் கொண்டே சீட்டில் எழுதியிருக்கும் குறிப்புகளைப் படித்து ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தச் சீட்டு அங்கு அமர்ந்திருக்கும் யாருடைய சீட்டாகவாவது இருக்கலாம். பின்னர் பின்னால் நிற்கும் மூன்றாவது சீடரிடம் கொடுத்துவிட வேண்டும்.

சிறிது நேரக் கழித்து மூன்றாவது சீடர் மூலம் அடுத்த சீட்டை எடுத்துத்தரச் சொல்ல வேண்டும். சீட்டைப் பிரிகாமலேயே முதல் சீடர் எடுத்துக் கொடுத்த சீட்டின் விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்த பக்தரை அழைக்க வேண்டும். ஞாபகத்தில் உள்ள விபரங்களின் முலம் குறி சொல்லிக் கொண்டே அவர் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்க வேண்டும்.அவரை அனுப்பி விட்டு அடுத்த சீட்டை எடுக்க வேண்டும். இப்படியே தொடந்து நீங்கள் களைப்படையும் வரை நாள் முழுவதும் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

இடையில் முந்தய சீட்டின் விபரங்கள் மறந்து விட்டால் கூட்டத்தில் இருக்கவே இருகிறார் உங்களின் இரண்டாவது சீடர். அவரை அழைத்து விளையாட்டைத் தொடருங்கள். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டு திறமையாகப் பெரிய அளவில் செய்யலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்.

எனக்கு நீங்கள் சம்பாதித்த பணத்தில் ராயல்டி மட்டும் கொஞ்சம் கொடுதால் போதும். :))

அடுத்த சித்து இன்னும் சில நாட்களில். stay tuned...

Monday, June 12, 2006

நானும் 8 ம் நம்பரும்

8
நம்ம ஞானியாருக்கு மட்டும் தான் நம்பர்கள் ஆச்சர்யம் கொடுக்குமா என்ன?. எனக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 8 என்ற என் என்னைத் தொடர்ந்து வருகிறது. தவிர்க்க நினைத்தாலும் அது தான் கடைசியில் அமைகிறது.

நான் வீட்டில் இருந்து தனியே வந்து 11 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது முதல் நான் தங்கியிருக்கும் அறை மற்றும் வீடுகளின் எண்கள் அல்லது அவற்றின் கூட்டுத் தொகை எட்டு என்றே வருகின்றது.

நான் B.Sc முதலாண்டு படிக்கும் போது விடுதியில் நான் தங்கியிருந்த அறை எண் - 8.
நான் B.Sc இரண்டாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 48.

நான் B.Sc மூன்றாம் படிக்கும் போது நான் தங்கியிருந்த அறை எண் - 9 அதாவது அந்த விடுதியில்(என் கல்லூரியில் நான்கு விடுதிகள் உள்ளன) அதில் எட்டாம் அறை வார்டனுக்கானது. அந்த அறையின் நேர் மேலே உள்ள அறை தான் 9.

MCA படித்த போது என் விடுதி அறையின் எண் 308. மூன்று ஆண்டுகளும் ஒரே அறையில் தான் இருந்தேன்.

நான் சென்னையில் இருந்த போது என் மேன்சன் அறையின் எண் 17. கூட்டுத்தொகை எட்டு.

லண்டனில் முதலில் நான் தங்கியிருந்த வீட்டின் எண்ணும் எட்டு. இப்போது தங்கியிருக்கும் வீட்டின் எண் 107. அடுத்த வாரம் நான் மாறப் போகும் வீட்டின் என் 86. இதிலும் 8 வருகிறது.

இப்படியாக நான் தங்கியிந்த/யிருக்கின்ற இடத்தில் எல்லாம் எட்டு என்ற என் துரத்திக் கொண்டே வருகிறது. என்ன காரணமாக இருக்கும்?

Saturday, June 10, 2006

இனியெல்லாம் சுகமே

ஏதாவது ஒரு பதிவு போடனும், எனக்கு ஏத்த மாதிரி விஷயம் கிடைக்காததால் நான் தினசரி ஒரு முறையாவது கேட்கும் பாடலை நம் மக்களுடன் பகிந்து கொள்கிறேன். அந்தப் பாடல் அவள் அப்படித்தான் என்ற திரைப் படத்திலிருந்து "உறவுகள் தொடர்கதை. உணர்வுகள் சிறுகதை". நானும் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை இது என் உயிரை உருக்குகிறது.

பாடலின் வரிகளும் அதன் அர்த்தமும் அதன் பின்னனி இசையும் குரலும் இனைந்து ஒரு மேஜிக் உண்டாகிறது.

நான் இன்னும் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லையென்றாலும் காதலனும் காதலியும் இணையும் போது உள்ள சூழ்நிலையில் படமாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

பாடலுக்கு இசை அமைத்தவர் யார், படத்தில் நடித்தவர்கள் யார் யார் போன்ற மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இனி அந்தப் பாடலை என்னுடைய தளதில் இருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்

---
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்.
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே

--
இப்போது ஒரு காற்று என்னை வந்து தழுவிச் சென்றது போல உணர்கிறேன்.