Sunday, December 31, 2006

என் மைசூர் சுற்றுலாப் பயணம் - சில புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு மைசூர் சுற்றுலா சென்றிருந்தேன். அது ஒரு நாள் பயணம் என்பதான் மைசூர் விலங்குகள் பூங்காவும், பிருந்தாவன் தோட்டம் ஆகியவைகள் மட்டுமே சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு பயணம் நல்ல முறையில் அமைந்தது. இதோ அந்தப் பயணத்தின் சில நினைவுகள்.

வெள்ளை மயில். சாதாரணமாகப் பல இடங்களில் காணப்படுவதில்லை. திருப்பரங்குன்றத்தில் இவைகளை நான் பார்த்திருக்கிறேன். பெண் மயிலைப் பார்க்கும் போது பெரிய பிராய்லர் கோழியின் நினைவு ஏனோ வந்து போனது.

இவைகள் நம்முடைய முன்னோர்கள். கொரில்லா குரங்குகள் இந்தியாவில் மைசூரில் மட்டுமே பாதுகாத்து வரப்படுகிறது.

காண்டாமிருகம். வெயிலின் சூடு தாங்காமல் தண்ணீர்த் தொட்டியைத் தேடி வருகிறார்.

வரிக்குதிரை. நிழலில் ஓய்வு எடுக்கிறார். நம்ம ஊர் கழுதைகளுக்குச் சூடு போட்டால் அவைகள் வரிக்குதிரை ஆகிவிடுமா?

இவரும் நம்ம முன்னோர் தான். எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி தாவிக்குதித்து நடனமாடி மகிழ்வித்தார்.

ஆப்பிரிக்க யானை. இந்தியாவில் மைசூரில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். வேறு யானைகள் எதுவும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் வந்திறங்கியதாகத் தகவல்கள் இல்லை எனவே இந்தியாவில் உள்ள இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் இதுவும் ஒன்று. இந்தப் புகைப்படம் ஆனந் அவர்களின் இந்தப் பதிவை மனதில் நினைத்துக் கொண்டே எடுத்தேன். யானையாரும் நன்கு ஒத்துழைத்ததால் புகைப்படமும் நன்றாக அமைந்துள்ளது.

மைசூர் பிருந்தாவன் பூந்தோட்டத்தின் அழகிய தோற்றம். பிருந்தாவனம் என்றதும் அது தனியாரால் நடத்தப்படும் பூங்கா என்று தவறாக இந்தனை நாட்கள் நினைத்திருந்தேன். அது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் நிர்வாகத்தில் இருக்கின்றது என்று சென்றவாரம் தான் தெரிந்தது. பூங்கா ரம்யமாக இருக்கிறது.

டிஜிட்டல் காமிரா என்பதால் நினைபதை, பார்ப்பதையெல்லாம் சுட்டதில் சுமாரக வந்த பூக்கள்.கே.ஆர்.எஸ் அணைக்கட்டில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடல் போல் விரிந்து கிடக்கும் காவிரி நீர் கே.ஆர்.எஸ் அணைக்கட்டில். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீர் தான்.

இரவில் இசைக்கு ஏற்ப நடனமாடிய நீர்வீழ்ச்சி. நேரில் பார்க்க மிக அருமையாக இருந்தது. டிஜிட்டல் கேமராவில் mode செட் செய்யத் தெரியாததால் இரவில் நகரும் பொருட்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியவில்லை.

Thursday, December 21, 2006

ஒரு நீதிக்கதை.

ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

ஒன்று மிகவும் நல்ல பண்பு,பாசம்,நேசம்,மனிதத்தன்மை,உண்மை போன்ற குணங்கள்.

மற்றொன்று கோபம்,பொறாமை,பொய், தான்மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார்.

அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன்.தாத்தா நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார்.

நீதி :
நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

இது இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு கதையின் தமிழாக்கம்.

Wednesday, December 13, 2006

உஷாரய்யா உஷாரு!!!

நேற்று மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது ஒருவர் தன்னிடம் டிஜிட்டல் வீடியோ கேமரா இருப்பதாகவும் விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டார்.

சரி காண்பியுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு ஓரமாகக் கூட்டிச் சென்று காண்பித்தார். அது நிக்கான் எஸ்.எல்.ஆர் கேமரா போல இருந்தது(நிக்கான் காமிரா அல்ல). காமிராவைக் காட்டி இதன் மூலம் 4 மணி நேரம் வீடியோ பதிவு செய்யலாம் என்று சொன்ன போது, சரி டேப் எப்படி கேமராவில் மாட்டுவது என்று கேட்ட போது அது அவர் உளற ஆரம்பித்தார். வுடு ஜூட் என்று எஸ்கேப் ஆனேன். அவரோ என்னைத் துரத்திக் கொண்டே அலுவலகம் வரை வந்தார்.

இது போல இரண்டு முறை மயிரிழையில் ஏமாற்றலில் இருந்து தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் ஒருவர் தான் குடும்பத்துடன் ஊரில் இருந்து வந்ததாகவும் பணம் இல்லாததால் ஒரு கைக்கடிகாரத்தைக் காட்டி அதன் விலை 1000 ரூபாய் என்றும் அதனை வைத்துக் கொண்டு 700 ரூபாய் மட்டும் தருமாறுகேட்டார்.

அப்போது திடீரென் ஆஜரான மற்றொருவர் தான் தான் அருப்புக்கோட்டையில் பிரபலமான கைக்கடிகாரக் கடையின் உரிமையாளர் என்றும் மதுரை செல்வதற்காக பேருந்துக்குக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு அந்தக் கடிகாரத்தை வாங்கிப் பார்த்தார். இது ஒரிஜினல் கடிகாரம் என்றும் 1000 ரூபாய் விலை பெறும் என்றும் கூறினார்.

நான் உடனே, மதுரை பஸ் அங்கிட்டு(வேறுபக்கம்) அல்லவா நிற்கும். மேலும் மதுரை செல்லக் காத்துக் கிடக்கத் தேவையில்லையே? நீங்கள் சுமார் அரை மணிநேரமாக இந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதுதான் தாமதம் , இருவரும் தலைதெறிக்க ஓட்டம்
பிடித்தனர்.(நமக்கு நன்கு தெரிந்த ஊர்களில் இது போல அடிச்சு ஆடலாம்.:)))) ).

மற்றொரு முறை சென்னை வடபழனியில் பேருந்துக்காக் காத்துக் கொண்டிருந்த போது ஒருவர் தன்னிடம் தங்கம் இருப்பதாகவும் குறைந்த விலைக்குத் தருவதாகவும் கூறினார்.

அப்போது என்னிடம் கையில் ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.எனவே என்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அவருடன் ஓரமாக ஒதுங்கினேன். அப்போது மற்றொருவர் தனக்கும் தங்கம் வேண்டும் என்று கூறி என்னுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் ஒரு பையில் இருந்து ஒரு தங்கக் கட்டியை எடுத்துக் காட்டினார்.உடனே என்னுடன் சேர்ந்து கொண்ட மற்றொருவர் தங்கத்தை வாங்கி உள்ளங்கையில் உரசிப்பார்த்துப் பின்னர் அதனை முகர்ந்து பார்த்தார். உடனே அது சுத்தமான தங்கம் என்று சர்டிபிக்கேட் கொடுத்தார்.

எனக்கோ உரைகல்லில் உரசிப்பார்த்தாலே போலிகளைக் கண்டறிய சிரமமாக உள்ள காலத்தில், உள்ளங்கையில் உரசிப்பார்த்து சொல்வதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

உடனே, சார் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார், நான் ஐம்பது ரூபாய் இருக்கிறது என்றேன். சார் செயின் மோதிரம் ஏதாவது இருந்தால் நாம் தங்கத்தைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்டவுடன் எதுவும் இல்லையே என்றேன். கடுப்பாகிப் போய் இருவரும் திட்டிக் கொண்டே சென்றனர்.

ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.