Thursday, May 25, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 7

இரண்டாம் நம்பர் காய்கறிகள். பழைய உருளைக்கிழங்கு, உடைந்த தக்காளி, முற்றிய முருங்கைக்காய்,பூச்சி விழுந்த கத்தரிக்காய் இன்னபிற காய்கறிகள் தான் இரண்டாம் நம்பர் காய்கள். யார் இவைகளை வாங்குவார்கள்? அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஹோட்டல்காரர்கள். ஆமாம் மக்களே, பெரும்பாலான சிறிய ஹோட்டல்களில் இன்றைய நிலைமை இதுதான். நாங்களும் பல ஹோட்டல்களுக்கு இது போன்ற காய்களை சப்ளை செய்கிறோம். கேட்கலாம் எங்களுக்கு மனசாட்சி இல்லையா? இருக்கிறதய்யா. நாங்கள் விற்காவிட்டால் வேறு கடைகளில் வாங்கிக் கொள்ளப்போகிறார்கள். வருகிற வரைக்கும் வரட்டும் என்றே விற்பனை செய்கின்றோம்.

என் சித்தி ஊருக்குச் செல்லும் போதெல்லாம் நானும் என் சித்தப்பாவும் ஹோட்டலில் தான் சாப்பிடுவோம். அந்த நாட்களில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு மட்டும் நல்ல காய்கறிகளை இரண்டாம் நம்பர் காய்கறிகளின் விலைக்கே அனுப்புவோம். ஹோட்டல்காரரும் நாங்கள் சாப்பிட வருவதைத் தெரிந்து கொண்டு ஸ்பெசல் சாப்பாடு தருவார். என்ன செய்றதுங்க சுயநலம் தான். நான் எப்போதும் நல்லவன் என்று சொல்லிப் புனித பிம்பமாக விரும்பவில்லை. ஹோட்டல்காரர்கள் கேட்டால் நல்ல காய்கறிகள் தரத் தயாராவே இருக்கிறோம். இது போன்று தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லையெனில் அவர்களால் அளவுச் சாப்பாடு 15 ரூபாய்க்குத் தரமுடியாது. கோடம்பாக்கம் டாடா உடுப்பி ஹோட்டலில்லேயே இது தான் நிலைமை(ஒரு முறை நான் வண்டியில் இருந்து காய்களை இறக்கும் போது பார்த்து விட்டேன்). இருந்தாலும் காரக் குழம்பின் சுவைக்காக மூன்று வருடங்களில் பலமுறை அங்குதான் இரவுச் சாப்பாடு சாப்பிட்டேன். :)))

பிரியாணி ஐந்து ரூபாய்க்குத் தருவதானால், காக்கா பிரியாணிதான் தரமுடியும். காக்கா பிரியாணி சாப்ட்டா காக்கா குரல் வராம உன்னிக் கிருஷ்ணன் குரலா வரும்.

எனவே மக்களே, சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடுவதைத்த் தவிருங்கள்.

Tuesday, May 23, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 6


காய்கறிக்கடையில் சில்லறை விற்பனை செய்வது கொஞ்சம் சிரமம் தான். மொத்த வியாபாரம் என்றால் வியாபாரிகள் வேணும் காய்கறிகளை எழுதிக் கொடுத்து விடுவார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் கேட்ட காய்கறிகளை எடை போட்டுக் கொடுத்துவிடுவோம். ஆனால் சில்லறை வியாபாரத்தில் நம் பெண்மணிகளுடன் தினம் தினம் போராட்டம் தான். இந்த வியாபாரத்தில் பீக் ஹவர்ஸ் காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையும் மாலை 7 மணிமுதல் 9மணி வரையிலும். காலை 9.30 மணி முதல் 12.30 வரை வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளும், மாலை 7 மணிமுதல் 9மணி வரையில் அலுவலகம் செல்லும் பெண்களும் அதிகம் வருவார்கள். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இங்கு கணக்குப் பார்த்து காசு வாங்கிப் போடுவதும் அனுபவம் இல்லையெனில் சிரமம் தான். கூட்டம் அதிகமான நேரங்களில் யார் யாருக்கு என்னென்னெ காய்கள் கொடுத்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் சிரமம் தான். பெரும்பாலும் அவர்களையே என்னென்ன காய்கள் வாங்கினீர்கள் என்று கேட்டுத்தான் பணத்தைக் கணக்கிடுவோம். அவர்கள் பெரும்பாலும் 99% ஏமாற்ற மாட்டார்கள். ஏமாற்ற நினைத்து மாற்றிச் சொல்ல ஆரம்பித்தால் தடுமாற ஆரம்பித்து விடுவார்கள். அதனை வைத்தே நாங்கள் உஷாராகி கொஞ்சம் அழுத்திக் கேட்க ஆரம்பித்தால் சரியாகச் சொல்லிவிடுவார்கள்.

கணக்கீடு செய்வதும் மனக்கணக்குதான். அவர்கள் வாங்கிய காய்கறியின் அளவைச் சொல்லச் சொல்ல உடனே கூட்டிக் காசை வசூலிப்போம்.
கத்தரிக்காய் கால் கிலோ - 2.50
தக்காளி 100 - 1.25
காரட் 100 - 2.00
பச்ச மிளகாய் 1.00
உடனே கூட்டி 6.75 என அடுத்த 3 நொடிகளில் சொல்லி மீதப் பணம் அடுத்த 5-10 வினாடிகளில் கொடுத்து அடுத்த வாடிக்கையாளரைப் பார்க்க வேண்டும். இந்தக் கணக்கையெல்லாம் அனுபவித்துச் செய்தால் சோர்வு வராது. வெகு சில நேரங்களில் கூட்டுதல் தவறாகி ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய் கூடவோ குறையவோ ஆகலாம். யாராவது வந்து திருப்பிக் கேட்டால் மறுபேச்சு இல்லாமல் திருப்பிக் கொடுத்து விடுவோம். குறைவாகக் கண்க்கீடு செய்திருந்தால் யாரும் காசைத் திருப்பித் தர வரமாட்டார்கள். இது தானே உலக நியதி.

மேலும் பெண்கள் தேவையான எல்லாக் காய்களையும் மொத்தமாக எடைபோட எடுத்து வரமாட்டார்கள். ஒவ்வொன்றாகவே போய் எடுத்துவருவார்கள். சரியாகக் கணக்கு வைத்துக் கொள்ள அதுவும் எங்களுக்குச் சிரமம் தான். பல பெண்கள் காய்கறிகடைக்கு வந்துதான் என்ன சமையல் செய்யலாம் என யோசனை செய்வார்கள்(என்னக்கிதான் முன் யோசனையுடன் செய்தார்கள் என்கிறீர்களா?? :)) ). சிலரோ அடுப்பில் பருப்பு கொதிக்குது சீக்கிரம் காய்கறி தாங்க என்று காலில் வெந்நீரை ஊற்றியது போல பரபரப்பாக வந்து நிற்பார்கள், அவர்க்களையும் வேகமாகக் கவனித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சில ஆண்களும்/குழந்தைகளும் கடைக்கு வருவார்கள். ஆண்களுக்கு எடை போட்டுக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்து அழுகிய/பூச்சி விழுந்த காய்கறிகளையோ எடுத்து வந்திருந்தால் அவற்றை எடுத்துப் போட்டுவிடுவோம். இல்லையெனில் அடுத்த பத்தாவது நிமிடம், விவரம் தெரியாதவரை(??!!) ஏமாற்றி விட்டதாக அவரின் வீட்டுக்காரம்மா சண்டைக்கு வந்து விடுவார். சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

குழந்தைகள் வந்தால் நாங்களே நல்ல காய்கறிகளாகப் போட்டு அனுப்புவோம். எடையும் சற்று அதிகமாகவே போடுவோம். இல்லையெனில் சிறு குழந்தைகளை எடையில் ஏமாற்றி விட்டார்கள் என்ற அவச்சொல் எங்களுக்கு வரும். குழந்தைதைகளிடம் சிறு பிரச்சினை என்னவெனில் மீதக் காசைக் கொடுத்து அனுப்புவது தான். சில சமயங்களில் தவற விட்டு விட்டார்களெனில் சில சமையங்களில் தாய்மார்கள் நாங்கள் தான் ஏமாற்றி விட்டதாகச் சண்டைக்கு வருவார்கள். விளக்கமாகச் சொல்லிச் சமாளிக்க வேண்டும் நேர விரயமாகும். எங்களை நன்கு புரிந்து கொண்டவர்கள் அடுத்த முறை பெரியவர்கள் கடக்கு வரும்போது காசு தருவதாகச் சொல்லி அனுப்புவார்கள். நாங்களும் கேட்கும் பொருட்களைக் கொடுத்து அனுப்புவோம்.

அடுத்த பதிவு இரண்டாம் நம்பர் காய்கறிகள் பற்றி..

Saturday, May 20, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 5
காய்கறிக்கடையில் என் சித்தப்பாவின் நிர்வாகத் திறமையை இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து ஒரு அரசையே கவிழ்த்தது பலருக்கு நினைவிருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் வெங்காய வியாபாரம் செய்வதே சிரமமாக இருந்தது. ஒரே நாளில் 10 முறை விலை மாற்றம் ஏற்பட்டது. ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு நாள் வெங்காயம் கிலோ 27 ரூபாய் விலை இருந்தது. அப்போது ஒரு விவசாயி 300கிலோ வெங்காயத்துடன் விற்பனைக்கு வந்தார். நான் சித்தப்பாவிடம் 22 ரூபாய்க்கு வாங்கி 27 ரூபாய்க்கு விற்று விடலாம் என்று கூறினேன். உடனே லேசாக்ச் சிரித்து விட்டு அந்த விவசாயியை மதுரைக்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்தார்.

அன்று இரவு காரணம் கேட்ட போது, தற்போதய நிலவரத்தில் 300 கிலோ வெங்காயம் விற்க ஒரு வாரம் ஆகும். இன்னும் மூன்று நாளில் வெங்காயம் விலை 10 ரூபாய்க்கு வரும் என்று ஆருடம் கூறினார். எனக்கோ அச்சர்யம். அது எப்படிச் சரியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது இன்னும் மூன்று நாட்களுக்குள் மழை பெய்யும் என்றும், அப்படி மழை பெய்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தில் சில பெரிய வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கும் வெங்காயம் அழுக ஆரம்பிக்கும். உடனே அவைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வரும் போது விலை சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது விளக்கம் கொடுத்தார்.

அவர் சொன்னபடியே மூன்றாவது நாள் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நல்ல மழை. வெங்காயமும் விலை குறைந்தது. இந்திய அரசாங்கமும் ஈரானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் விலை குறைந்ததற்குக் காரணம் ஆனது. அது சரி எப்படி மழை பெய்யும் என்பதைக் கணிப்பது? அவர் சொன்ன இரண்டு வழிமுறைகள். 1. தட்டான்கள்(தும்பி) தாழ்வாகப் பறந்து செல்வது மற்றும் தெளிவான வானத்தில் நிலாவைச் சுற்றி நெருக்கமான வட்டங்கள் ஏற்படுவது.

மற்றொருமுறை ஒரு வெங்காய விவசாயி வந்து சாம்பிள் வெங்காயம் காண்பித்து , இது போன்ற வெங்காயம் தன்னிடம் 500 கிலோவிற்கு இருப்பதாகவும் என்ன விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள் என்றும் கேட்டார். நாங்கள் அதனை ஒரு கிலோ ரூபாய் 5.50க்கு வாங்கிக் கொள்வதாக ஒத்துக் கொண்டோம். அவர் அடுத்த நாள் சுமார் ஒரு டன் வெங்காயத்தை மாட்டுவண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டார். அனைத்தும் கடை வாசலில் இறக்கி வைக்கப்பட்டது. உடனே சித்தப்பா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனைத்து வெங்கயத்தையும் ஒன்றாகக் கலந்துவிட்டு பின்னர் எடை போடலாம் என்று சொன்னார். அதற்கு அந்த விவசாயி ஒத்துக் கொள்ளவில்லை.என் சித்தப்பாவோ விடவில்லை. ஒன்றாகக் கலந்து எடை போடுவது என்றால் வாங்கிக் கொள்கிறேன் இல்லையென்றால் திருப்பி எடுத்துச் செல்லலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

அப்போது அந்த விவசாயி பாதி மூட்டைகள் வெங்காயத்தை மட்டும் எடை போட்டுக் கொண்டு மீதியை வேறு இடத்தில் விற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். சரி என்று சொல்லி வாங்கிக் கொண்டோம். நானோ என்ன நடக்கிறது எனப் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்த்து அவரே சொன்னார். அந்த விவசாயி தன்னிடம் உள்ள வெங்காயம் போக தன் பக்கத்துத் தோட்டத்தில் விளைந்த சற்றுத் தரம் குறைந்த வெங்காயத்தையும் ரூபாய்5.50கு விற்று விடலாம் என வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்துவிட்டார். முதல் மூட்டையைப் பிரித்துக் காண்பித்த போது முந்தய நாள் சாம்பிள் காட்டிய அதே வெங்காயம். அந்த மூட்டைகள் அனைத்தும் அடையாளத்திற்காகச் சணலில் கட்டப்பட்டிருந்தன. பக்கத்துத் தோட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மூட்டைகள் எல்லாம் அடையாளத்திற்காகத் துணியால் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு மூட்டையாக எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். ஆனால் ஒன்றாகக் கலந்து எடை போடும் போது யாருடைய வெங்காயம் எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். இதனைத் தடுக்கவே கலந்து எடை போடுவது என்ற உத்தியைப் பயன்படுத்தி அந்தப் பிராடுத்னத்தைக் முறியடித்தார். நான் வியந்தது என்னவெனில் ஒரு கணப் பார்வையிலேயே இவை அனைத்தையும் கணித்து, அதைத் தடுக்க முடிவெடுத்த வேகத்தையும் நினைத்துத்தான். சுமாவா, அவருக்கு 40 ஆண்டுகள் காய்கறி வியாபாரத்தில் அனுபவம் உள்ளதே.

காய்கறி விற்பனையிலும் நாள் நேரம் எல்லாம் பார்க்க வெண்டும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காரட்,முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற காய்கள் மற்ற நாட்களை விட மூன்று மடங்மு அதிகமாக விற்பனையாகும். ஏனெனில் வெள்ளிக் கிழமையன்றுதான் சாம்பார், காய்கறிகள் என் சுத்த சைவமாக இருக்கும். எனவே அந்த நாட்களை அனுசரித்து மொத்தமாக காய்கள் வாங்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அடுத்த பகுதியில்.

Friday, May 19, 2006

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய ஏகாதிபத்தியம்

நான் முந்தய பதிவு ஒன்றில் நம்முடைய நாட்டின் சில்லறை வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடுவது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லியிருந்தேன். அதனை உறுதிப்படுத்துவது போல ஜெயக்குமார் அவர்களின் பதிவும் அமைந்துள்ளது. அதற்கு மேலும் பன்னானாட்டு நிறுவனம் ஒன்றின் செயல்பாட்டினை கடந்த இரு மாதங்களாக கவனித்து வருகின்றேன்.
என்னுடைய அலுவலகத்தின் அருகே டெஸ்கோ இருக்கிறது. அங்குதான் கடந்த ஒரு வருடமாக மதிய உணவு வாங்குவது வழக்கம். அங்கு பணிபுரியும் பணியாளர்களில் சிலர் நன்கு பழக்கமாகி விட்டனர். கடந்த இருமாதமாக கடையில் பல மாற்றங்கள். சுமார் நாற்பது பணியாளர்கள் பில் போடும் பணியில் இருந்தார்கள். தற்போது 30 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் புதிதாக 20 automatic checkout பாயிண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அனைவரும் automatic checkoutக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இங்குதான் அவர்களின் தந்திரம். அந்தக் கடையில் நிரந்தர வாடிக்கையாளர்களே அதிகம். அவர்களுக்கு automatic checkout உபயோகிக்கப் பழக்கப் படுத்தப்படுகின்றனர். இன்னும் சில மாதங்களில் இந்த automatic checkout மிஷின்கள் அதிகப்படுத்தப்பட்டு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப் படுவார்கள். இப்பொழுதே பெரும்பாலான பணியாளர்கள் வேலை போய்விடும் என்ற பயத்தில் உள்ளனர்.

நான் சொல்ல வருவது என்னவெனில் தங்களின் சொந்த நாட்டுப் பணியாளர்களின் மீதே இரக்கம் காட்டாமல், லாபத்திற்காக வேலையை விட்டுத் துரத்துகின்ற நிறுவனம் தான் இந்தியாவிலும் தங்களின் கிளையை நிறுவ அனுமதி கேட்டு நிற்கிறது. நம் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகப்படுத்தப்படும் என்று சொல்லி வாசலைத் தட்டி நிற்கிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் நம் நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி தன் நாட்டிற்கு எடுத்துச் செல்ல வந்து நிற்கிறது. டெஸ்கோவின் கடந்த ஆண்டு லாபம் 2.2 பில்லியன் பவுண்டுகள். அதனை 3 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்பது அதன் குறிக்கோள். அதற்குத்தான் இந்த இயந்திர மயமாக்கம், பணிநீக்கம் எல்லாம்.

என் தாய்நாட்டை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. இது போன்ற நிறுவனங்களை அனுமதித்து அதில் மண்ணைப் போட்டு விடாதீர்கள் அரசியலவாதிகளே.

திராவிடமும் நானும்

தேர்தல் முடிந்து விட்டது எனவே தமிழ்மணத்திலேயும் சூடு குறைந்திருக்கும் எனச் சில நாட்கள் தமிழ்மணத்திற்கு வருகை தராமல் இருந்தேன்.
சில முக்கியமான நிகழ்சிகள் வேகமாக நடந்துள்ளன.
முதலாவது :
நம்ம விஜயகாந்த் போல புதிதாக திராவிடத் தமிழர்கள் இயக்கம் ஆரம்பித்து முத்து & கோ வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மகிழ்ச்சி.திராவிடன்(ம்) என்ற வார்த்தையை சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவன். ஆனாலும் இதுவரை அதற்குச் சரியான அர்த்தம் எது என்று தேடியதில்லை.எனக்குத் தெரிந்தவரை திராவிடத் தமிழர்கள் என்றால் என்றால் பூர்வீகத் தமிழர்கள் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. உங்கள் குழு அது குறித்து சில பதிவுகள் வெளியிடும் என நம்புகிறேன்.மேலும் என்னைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர்களும் திராவிடர்கள் என்பதில் அடக்கம். அது குறித்து தங்களின் குழுவின் கொள்கைகள் என்ன என்று விளக்குங்கள். நான் இந்தியன் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பவன். ஆனால் விடுதலைப் புலிகளை அல்ல.

இரண்டாவது :
நம்ம போலி முதல் முறையாக நேரடியாக மாயவரத்தானிடம் பிடிபட்டது. நான் போலியைத் தடுக்கத் தயாரித்து வரும் மென்பொருளின் முதல் பகுதி என்னிடம் சோதனையில் உள்ளது. என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டம் இடுபவர்களிம் ip-address களைச் சேகரிக்கிறேன். அதில் அநாகரிகப் பின்னூட்டம் வந்தால் அந்த ip-adderess களை மட்டும் குறித்துக் கொண்டு மற்றவற்றை அழித்து விடுவேன். என்னுடைய பின்னூட்டச் சாளரத்தில் (ஜன்னல் என்பது போர்துகீசிய வார்த்தையாக்கும்) நீங்கள் ஜோதிகாவை ஒரு பார்வை நீங்கள் பார்த்து முடிப்பதற்குள் உங்களின் ip-address ம், மற்றும் அப்போதய நேரமும் எனக்கு வந்துவிடும். பின்னர் பின்னூட்டச் சாளரம் திறந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்குத் தகவல் வரும். இது முதல் கட்டம். மென்பொருளின் இரண்டாவது கட்டமும் என்னுடைய நண்பரின் வேறு ஒரு வலைத் தளத்தில் சோதனையில் உள்ளது. இவை இரண்டையும் இணைக்கும் போது நல்ல மென்பொருள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

இன்று இரவு என் காய்கறிக் கடையின் அடுத்த பகுதியை எழுதிவிட்டு உங்களைச் சந்திக்கிறேன்.

Sunday, May 07, 2006

நெசவாளர்கள்->கஞ்சித்தொட்டி<-வணிகர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறந்தும் அதற்கு எதிர்ப்பாக பிரியாணி வழங்கி ஒரு அரசியல் கட்சி நம்முடைய மானத்தை வாங்கியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

நெசவுத் தொழிலுக்கு என்று பல நவீன ஆலைகள் வந்துவிட்டன். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் செய்துவிடுகின்றன அதுவும் மிகுந்த தரத்துடன். இந்தக் காரணம் நாம் பள்ளியிலேயே படித்ததுதான். இந்தத் தொழிற்புரட்சியில் நம்முடைய நெசவாளர்கள் வருகின்ற விபரீத்ததை உணர்ந்து வேறு சில தொழில்களைக் கற்று தொழிலை மாற்றியிருக்க வேண்டும். எல்லோருமே குறைந்த செலவில் தான் எதையும் வாங்க விருப்புவார்கள். இயந்திரப் புரட்சி அதற்குத் துணை போய்விட்டது. இது தவிர்க்க முடியாதது தான்.

1950களில் இந்தியாவில் இயந்திர நெசவுக்கூடங்கள் நிறுவப்பட்ட போது நிலைமையை உணர்ந்து வேறு சில தொழில்களுக்கு மாறியிருக்க வேண்டும். சமீபத்தில் நெசவாளர் ஒருவரின் பேட்டியைக் கண்ட போது, தாங்கள் ஆறு தலைமுறைகளாக நெசவுத் தொழில்செய்து வருவதாகவும் தங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்றும் கூறினார். அவரின் மகன்களும் அதே தொழிலில் இருப்பதாகவும் மிகவும் கஷ்டப் படுவதாகவும் கூறியவுடன் அவர் மீது என்க்குக் கோபம் வந்தது. ஆரம்ப காலம் முதல் ஒரே வேலையை எந்த வித மாற்றமும் இல்லாமல் செய்து வந்தால் எப்படி முன்னேறுவது? நெசவுத் தொழிலில் சிரமம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே தெரியவந்தது. அதை உணர்ந்து அவரின் பிள்ளைகளை வேறு தொழில்களுக்கு மாற்றியிருந்தால் நிலைமை இவ்வளவு தீவிரமாக இருந்திருக்காது.

இது பற்றிய விழிப்புணர்ச்சியை அரசாவது செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுக்கு மானியம், அரசே கைத்தறித் துணிகளை வாங்குவது போன்ற தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து தற்போது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன். இங்கு வணிகர்கள் எங்கு வருகிறார்கள்?

சில்லரை வணிகத்தில் வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் அனுமதிகோரி மன்மோகன் சிங் அரசை அனுகியிருக்கிறது. அரசு அனுமதித்தால் வணிகர்கள் 10 ஆண்டுகளில் தெருவுக்கு வருவதைத் தடுக்க முடியாது. வால்மார்ட், டெஸ்கொ போன்ற நிறுவனங்கள் பல வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொல்வார்கள். ஆம் அவைகள் பல தொழிலாளர்களை உருவாக்கும். முதலாளிகளை அல்ல. முதலாளிகளே அரசுக்கு வரி செலுத்துபவர்கள். டெஸ்கோ போன்ற நிறுவனங்களும் வரி செலுத்தும், ஆனால் லாபத்தை இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்லும். அது மிகவும் ஆபத்தானது. நம்முடைய வணிகர்கள் வரி ஏய்ப்புச் செய்தாலும் பணம் நம்முடைய நாட்டை விட்டு வெளியே செல்லாது. விதிகள்/சட்டங்கள் கடுமையாக்கப் பட்டால் வரி ஏய்ப்பைத் தடுத்து விட முடியும். ஆனால் அவர்களை உள்ளே விட்டால் கூடாரத்தினுள் ஒட்டகத்தை விட்ட கதை தான்.கூடாரம்/நம்முடைய நாடு சாயாமல் இராது.

இதற்குச் சிறந்த உதாரணமாக பெப்ஸி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவு காரணமாக நம்ம ஊர் மாப்பிள்ளை விநாயகர், கோல்ட் ஸ்பாட் போன்ற நிறுவனங்கள் மறைந்து விட்டன. மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடாவின் சுவையை பெப்ஸி, கோக் போன்றவற்றில் காணமுடியுமா?

அப்போது நம்முடைய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் கஞ்சித் தொட்டி வைக்க வேண்டிய நிலை வரும்.
வணிகர்களே நீங்களும் குடும்பத் தொழில் என்று உங்களின் வாரிசுகளை ஒரே விதமான வணிகத்திலேயே ஈடுபடுத்துகிறீர்கள். தொலைநோக்கில் இது மிகவும் ஆபத்தானது.

நம்முடைய அரசின் சில செயல்பாடுகள் புரிந்து கொள்ள முடியாதபடி உள்ளன. ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னெற்ற குடும்பத்தலைவி செலவுகளைக் குறைக்கிறார். பக்க வருமானத்தைப் பெருக்க வழியேதும் உள்ளதா எனப் பார்ப்பார். பொதுவாக தன்னுடைய குடும்பத்தின் பணம் வெளியே போகாமல் பார்த்துக் கொள்வார். சாதாரணப் படிப்பு படித்த பெண்ணிற்குச் தெரிந்த இந்தச் சிறிய அடிப்படை கூடத் தெரியாமல் அந்நிய நிறுவனங்களுக்கு கதவு திறந்து விடுகிறார்கள்.

உங்களில் பல பேர் கேட்கலாம், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா/ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்த்துப் பணம் சம்பாதிக்கிறார்கள், எனவே அந்நாட்டு நிறுவனத்தை நம் நாட்டில் அனுமதிப்பது தானே தர்மம்/நியாயம் என்று. மக்களே தர்மம் நியாயம் பார்த்தால் நம்முடைய நாட்டை முன்னேற்ற முடியாது. தர்மம் நியாயம் பார்த்தா நம்முடைய நாட்டை 300 ஆண்டுகள் சுரண்டினார்கள்?

லண்டனில் ஜிகர்தண்டா

கால்கரி சிவா அவர்களின் பதிவைப் பார்த்து ஜிகர்தண்டா செய்து பருகிவிடுவது என்று ஒருவித ஆர்வத்துடன் கடல்பாசியையும், நன்னாரி சர்பத்தையும் தேடி அலையத் தெடங்கினேன். நான் வாடிக்கையாக வாங்கும் ஸ்ரீலங்கன் தமிழ்கடையில் கடல்பாசியும், சர்பத்தும் கிடைக்கவில்லை.
இன்று முடிதிருத்த அல்பர்டான் சென்ற போது ஈலிங் ரோட்டில் உள்ள கணபதி ஸ்டோரில் கடல்பாசி கிடைத்தது. அங்கேயே நன்னாரி சர்பத்தையும் தேடி கடைகடையாக அலையத் தொடங்கினேன். இன்னும் கிடைத்த பாடில்லை. நேரம் கிடைக்காததால் ஈஸ்ட்ஹாம் பகுதிகளுக்குச் சென்று விசாரிக்க முடியவில்லை. ஈஸ்ட்ஹாம் அன்பர்கள் சுவாதி ஸ்டோர்சில் நன்னாரி சர்பத் குறித்து விசாரித்துச் சொல்லவும்.
இருப்பினும் நன்னாரி சர்பத்துக்குப் பதில் ரோஜா எசன்ஸ் சேர்த்த சர்பத் கிடைத்துள்ளது. அது வைத்து இன்னும் 6 மணி நேரத்தில் ஜிகர்தண்டா தயாராகிவிடும். யாராவது வந்தால் அவர்களுக்கும் ஜிகர்தண்டா வழங்கி சோதனை செய்யப்படும் :))).

காய்கறிக்கடை அனுபவங்கள் - 4

காய்கறி மொத்த வியாபாரம் கொஞ்சம் எளிதானது என்றேன். தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி சிறிது லாபம் வைத்து விற்று விடலாம். மொத்தமாக விற்பதற்கு ஏற்ப சில்லறை வியாபாரிகளைப் பிடிக்கவேண்டும். அவர்கள் கடனுக்குத்தான் வாங்கிச் செல்வார்கள். அன்றன்றைக்கு மாலையோ அல்லது வாரம் ஒரு முறையோ பணத்தைச் செலுத்துவார்கள். மொத்த வியாபாரிகளிடமும் நாங்களும் கடனுக்குத்தான் வாங்கியிருப்போம். வாரம் ஒருமுறை பணத்தை வந்து வாங்கிச் செல்வார்கள்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி விற்பது கொஞ்சம் வேறுமாதிரியானது. விவசாயிகள் எங்களிடம் விவசாயத்திற்குத் தேவையான பணத்தைக் கடனாக வாங்கிச் செல்வார்கள். அவர்கள் விளை பொருட்களை வேறு எந்த வியாபாரிகளிடம் கடன் தீரும் வரை விற்பனை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத ஒப்பந்தம். அதற்காக விவசாயிகளிடம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அர்த்தமல்ல. அன்றைய மார்க்கெட் விலைக்கு பொருட்களை வாங்கிக் கொள்வோம். கொடுத்த பணத்திற்கு வட்டியில்லாம் கிடையாது. இதுதான் எங்கள் கடையின் பாலிசி. வேறு சில கடைகளில் பணத்திற்கு வட்டி போட்டு அதற்கும் காய்கறிகள் தரவேண்டும் எனக் கூறுவார்கள். காய்கறிகளை விற்றுக் கடனை அடைத்து விற்றால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பெரும்பாலும் வேறு யாரிடமும் செல்ல மாட்டார்கள், ஏனெனில் வேறு எங்கு சென்றாலும் மார்க்கெட் விலைக்கே வாங்குவார்கள், அதற்குப் பதில் எங்களிடமே விற்று விடுவார்கள்.

விவசாயிகளிடம் இருந்து பெரும்பாலும் கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய், கறிவேப்பிலை போன்ற காய்கறிகளே வரும். கத்தரிக்காய் வந்தவுடன் அதிலிருந்து பூச்சி விழுந்த சூத்தைக் காய்கறிகளைப் பிரித்து எடுத்து நல்ல கத்தரிகாய்க்கு ஒருவிலையும், சூத்தைக் காய்க்கு ஒரு விலையும் வைத்து வாங்கப்படும். சூத்தைக் காய்களை மாடுகளுக்கு உணவாக வாங்கிச் செல்வார்கள். தக்காளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்க வேண்டும். நல்ல தக்காளிகள், உடைந்த தக்காளிகள், அளவில் சிறிய தக்காளிகள் மற்றும் சூத்தைக் தக்காளிகள் என்று.

எல்லா விவசாயிகளுடனும் எனக்கு நல்ல பழக்கமும் , நல்ல வியாபார உறவும் இருந்தது அந்தக் கறிவேப்பிலை வியாபாரியைத் தவிர. எங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஒரு கறிவேப்பிலை மரக்கன்று தருமாறு அவரிடம் கேட்டேன். அவர் இல்லையென்று சொல்லியிருந்தாலோ, பிறகு தருகிறேன் என்று சொல்லியிருந்தாலோ புரிந்து கொண்டிந்திருப்பேன். அவர் நேரடியாக, நான் கறிவேப்பிலைக் கன்று தந்து, சில ஆண்டுகளில் மரம் பெரிதாகிவிட்டால் தன்னுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று நேரடியாகக் கூறவும் எனக்கு ஒரு வித தர்மசங்கடமாகிவிட்டது. ஆனால் வேறு ஒரு கத்தரிக்காய் விவசாயி மறுநாள் கறிவேப்பிலைக் இரண்டு கன்றுகளைத் தந்தார். அவைகள் இன்று தளதளவென வளர்ந்து நிற்கின்றன.
படத்தில் இந்தியாவில் எங்கள் வீட்டு மாமரமும், அதன் பின்னால் கறிவேப்பிலை, வாழை மற்றும் சப்போட்டா பழ மரங்களும்.

இன்னும் வரும்...

Thursday, May 04, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 3

மளிகைக் கடையில் வேலை பார்த்தது என் பள்ளி விடுமுறை நாட்களில். நான் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து முதுகலைப் பட்டப்படிபிற்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த 3 மாதங்களில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமமும் இல்லாத டவுனும் இல்லாத ஊரான திருச்சுழியில் என் சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் வெட்டி ஆபீசரான நான் காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். பார்த்தார் என் சித்தப்பா. இப்படியே விட்டால் சோம்பேறிப் பயலாப் போயிருவான்னு நினைத்து என் சித்தியிடம் சொல்லிக் கடைக்கு வரும்படி உத்தரவு வந்தது. முதல் நாள் கொஞ்சம் வெறுப்புடனே கடைக்குச் சென்றேன்.

எங்கள் கடை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்யப்படும் கடை.
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் குளுமையான இடத்தில் தான் எங்கள் கடை அமைந்திருந்தது. சுற்றுப்பட்டு விவசாயிகள் தங்கள் காய்கறிகளை எங்கள் கடையில் வந்து விற்று விட்டுச் செல்வார்கள். அருப்புக்கோட்டையில் வாங்கப்படும் விலையில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அருப்புக்கோட்டை, நரிக்குடி, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளுக்கு பேருந்துகளில் காய்கறிகளை மொத்தமாக அனுப்புவார். சுற்றுப்பட்டு கிராம மக்கள் எங்கள் கடையில் வந்து அனைத்து காய்கறிகளையும் புத்தம் புதிதாக நியாயமான விலையில் வாங்கிச் செல்வார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக என் சித்தப்பா 15 வயதில் இருந்து வியாபாரம் செய்து வருகிறார். விசயத்திற்கு வருவோம்.

என்னை முதலில் மொத்த வியாபாரப் பகுதியில் வேலை செய்யச் சொன்னார். சுமார் 20 கிலோ முதல் 60 கிலோ வரையிலான எடையைத் தூக்க வேண்டும். முதல் 5 நாட்கள் உடல்வலி பின்னியெடுத்துவிட்டது. பின்னர் பழகிவிட்டது.

அந்தக் கடைக்கும் எனக்கும் ஒரு ராசியுள்ளது. எப்போது கடைக்கு விடுமுறையில் வந்தாலும் என்னிடம் ரத்தப்பலி வாங்காமல் விடாது. தராசு முள் கையில் குத்தி ரத்தம் வரும். அல்லது படிக்கல் காலில் விழுந்து ரத்தம் வரும் அல்லது முட்டைக்கோஸ் வெட்டும் போது கையையும் சேர்த்து வெட்டி ரத்தம் வரும். எப்படியாவது ரத்தம் வரும்படியான காயமாகிவிடும். ஒரு முறை கடைக்குள் எலி ஒன்று ஓடியது. அதைக் கண்டவுடன் முட்டைக் கோஸ் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தேன். அது எலியின் மீது சரியாக விழுந்தது. எலி செத்துப் போயிருக்கும் என முட்டைக்கோஸை எடுத்த போது கையில் எலி கடித்து ரத்தக் காயமாகிவிட்டது. இப்போது கடைக்குப் போனாலும் ஏதாவது ஒன்று நடந்து விடுகிறது.

காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. தக்காளி விலை ரூபாய் 20 இருக்கும் போது தக்காளி விவசாயத்தை ஆரம்பிப்பார். தை மாதத்தில் தக்காளி விளைந்து வரும்போது கிலோ ரூபாய் 2 க்கு விற்பனையாகும். அவர்கள் மாட்டுவண்டி முழுவதும் 150 கிலோ தக்காளி கொண்டுவந்து, வெறும் 300 ரூபாய்க்கு விற்றுச் செல்வார்கள். பெருத்த நஷ்டம் அவர்களுக்கு. நாங்களும் இது போன்ற சூழ்நிலையில் 2 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சீசன் இல்லாத நேரங்களில் தக்காளி ஆண்டிப்பட்டியில் இருந்தும், கத்தரிக்காய் ஒட்டன்சத்திரத்தில் இருந்தும், முருங்கைக்காய்கள் தாராபுரத்தில் இருந்தும், காரட், முள்ளங்கி, கோஸ், காலிப் பிளவர் போன்ற காய்கறிகள் கொடைக்கானலில் இருந்தும் கடைக்கு வரும்.

மொத்த வியாபாரப் பிரிவில் வேலை மிக எளிதாக இருக்கும். கேட்ட காய்கறிகளை நிறுத்துப் போட்டுவிட்டு பில் எழுதி என் சித்தப்பாவிடம் அனுப்பிவிடுவேன் அவர் விலை சரிபார்த்துவிட்டு காசு வாங்கிவிடுவார். மூளைக்கு வேலையெல்லாம் இல்லை. ஒரு மிஷின் மாதிரியானது. சில்லறை வியாபாரம் இதற்கு நேர்மாறானது. அது பற்றி அடுத்த பதிவில்...

Wednesday, May 03, 2006

அந்நியன் முயற்சி! தேவைப்படும் மாற்றங்கள்

நம்முடைய அந்நியன் அவர்கள் போலிப் பின்னூட்டங்களைத் தடுக்க சில வழிமுறைகளைச் செய்திருக்கிறார். அது மிகவும் நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சில தொழில் நுட்ப ஓட்டைகள் உள்ளன.
அவரின் ப்ளாக்(http://anniyan2006.blogspot.com/) முழுவதையும் பிரித்துப் போட்டுப் பார்த்ததில், XSS (Croos site scripting) எனப்படும் குறுக்கு வழித் தொழில் நுட்பம் மூலம் உபயோகிப்பவர்களின் user id மற்றும் password ஆகியவற்றை போலி திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் 100 சதவீதம்.

நம்ம போலி கம்ப்யூட்டர் கில்லாடி என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இது குறித்து கலந்தாலோசனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அந்நியன் அவர்களே உங்களின் E-Mail முகவரியைப் இந்தப் பதிவில் பின்னூட்டம் இடுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன், அதை வெளியிட மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வாருங்கள், போலியை ஒரு கை பார்ப்போம்