Sunday, May 07, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 4

காய்கறி மொத்த வியாபாரம் கொஞ்சம் எளிதானது என்றேன். தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி சிறிது லாபம் வைத்து விற்று விடலாம். மொத்தமாக விற்பதற்கு ஏற்ப சில்லறை வியாபாரிகளைப் பிடிக்கவேண்டும். அவர்கள் கடனுக்குத்தான் வாங்கிச் செல்வார்கள். அன்றன்றைக்கு மாலையோ அல்லது வாரம் ஒரு முறையோ பணத்தைச் செலுத்துவார்கள். மொத்த வியாபாரிகளிடமும் நாங்களும் கடனுக்குத்தான் வாங்கியிருப்போம். வாரம் ஒருமுறை பணத்தை வந்து வாங்கிச் செல்வார்கள்.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி விற்பது கொஞ்சம் வேறுமாதிரியானது. விவசாயிகள் எங்களிடம் விவசாயத்திற்குத் தேவையான பணத்தைக் கடனாக வாங்கிச் செல்வார்கள். அவர்கள் விளை பொருட்களை வேறு எந்த வியாபாரிகளிடம் கடன் தீரும் வரை விற்பனை செய்யக்கூடாது என்பது எழுதப்படாத ஒப்பந்தம். அதற்காக விவசாயிகளிடம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அர்த்தமல்ல. அன்றைய மார்க்கெட் விலைக்கு பொருட்களை வாங்கிக் கொள்வோம். கொடுத்த பணத்திற்கு வட்டியில்லாம் கிடையாது. இதுதான் எங்கள் கடையின் பாலிசி. வேறு சில கடைகளில் பணத்திற்கு வட்டி போட்டு அதற்கும் காய்கறிகள் தரவேண்டும் எனக் கூறுவார்கள். காய்கறிகளை விற்றுக் கடனை அடைத்து விற்றால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். பெரும்பாலும் வேறு யாரிடமும் செல்ல மாட்டார்கள், ஏனெனில் வேறு எங்கு சென்றாலும் மார்க்கெட் விலைக்கே வாங்குவார்கள், அதற்குப் பதில் எங்களிடமே விற்று விடுவார்கள்.

விவசாயிகளிடம் இருந்து பெரும்பாலும் கத்தரி, தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய், கறிவேப்பிலை போன்ற காய்கறிகளே வரும். கத்தரிக்காய் வந்தவுடன் அதிலிருந்து பூச்சி விழுந்த சூத்தைக் காய்கறிகளைப் பிரித்து எடுத்து நல்ல கத்தரிகாய்க்கு ஒருவிலையும், சூத்தைக் காய்க்கு ஒரு விலையும் வைத்து வாங்கப்படும். சூத்தைக் காய்களை மாடுகளுக்கு உணவாக வாங்கிச் செல்வார்கள். தக்காளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்க வேண்டும். நல்ல தக்காளிகள், உடைந்த தக்காளிகள், அளவில் சிறிய தக்காளிகள் மற்றும் சூத்தைக் தக்காளிகள் என்று.

எல்லா விவசாயிகளுடனும் எனக்கு நல்ல பழக்கமும் , நல்ல வியாபார உறவும் இருந்தது அந்தக் கறிவேப்பிலை வியாபாரியைத் தவிர. எங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஒரு கறிவேப்பிலை மரக்கன்று தருமாறு அவரிடம் கேட்டேன். அவர் இல்லையென்று சொல்லியிருந்தாலோ, பிறகு தருகிறேன் என்று சொல்லியிருந்தாலோ புரிந்து கொண்டிந்திருப்பேன். அவர் நேரடியாக, நான் கறிவேப்பிலைக் கன்று தந்து, சில ஆண்டுகளில் மரம் பெரிதாகிவிட்டால் தன்னுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று நேரடியாகக் கூறவும் எனக்கு ஒரு வித தர்மசங்கடமாகிவிட்டது. ஆனால் வேறு ஒரு கத்தரிக்காய் விவசாயி மறுநாள் கறிவேப்பிலைக் இரண்டு கன்றுகளைத் தந்தார். அவைகள் இன்று தளதளவென வளர்ந்து நிற்கின்றன.
படத்தில் இந்தியாவில் எங்கள் வீட்டு மாமரமும், அதன் பின்னால் கறிவேப்பிலை, வாழை மற்றும் சப்போட்டா பழ மரங்களும்.

இன்னும் வரும்...

8 comments:

மகேஸ் said...

என்ன ஆச்சுன்னெ தெரியலியே, நம்ம காய்கறிக் கடைக்கு யாரையுமே காணோமே?

மா சிவகுமார் said...

சுவையான அனுபவங்கள்.

கோயம்பேடு வந்து சேரும் காய்கறிகளின் பின்பு இவ்வளவு பின்னணிகள் இருக்கிறதா என்ன?

உழவர் சந்தைகள் இந்த வியாபாரங்களில் ஏதாவது பாதிப்புகளை மாற்றங்களை ஏற்படுத்தினவா?

மகேஸ் said...

உழவர் சந்தைகளால் பெரிய மாற்றங்கள் இல்லை. ஒரு விவசாயி ஒரு நாளில் 400கிலோ கத்தரிக்காய் கொண்டுவருவார். அவர் உழவர் சந்தையில் சென்று விற்று எப்போது வீடு திரும்புவது? மேலும் அவருக்கு வேறு சில விவசாய வேலைகளும் இருக்கும், உழவர் சந்தையால் எங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

கானா பிரபா said...

வணக்கம் மகேஸ்

அருமையான ஆவணப்படுத்த வேண்டிய தொடர் இது.

உங்கள் நண்பன் said...

நண்பரே...
நானும் இராமநாதபுரத்துக்காரன் தான்.
சுவாட்ஸ் பள்ளியில் 96-97-ஆம் ஆண்டு எனது 12-ஆம் வகுப்பை முடித்தேன்
சத்திரக்குடி அருகே உள்ள வளநாடு என்னும் கிராமத்தை சேர்ந்த்தவன்,
தொடர்ந்து எழுதவும்,
வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

பழூர் கார்த்தி said...

நல்லா இருக்குங்கோவ்வ், காய்கறி வியபார அனுபவம், தொடர்ந்து எழுதுங்கள் !!

மகேஸ் said...

நன்றி சோம்பேறி பையன்

மகேஸ் said...

வாங்க சரவணன்,
நம்ம அப்துல்கலாம் படிச்ச பள்ளிக்கூடத்துல படிசிருக்கிறீங்க.

நான் கமுதியில் படித்தேன். பேருந்தில் சத்திரக்குடி வழியாக கமுதிக்கும், மதுரைக்கும் போவேன். என் அப்பா பிறந்து வளந்த ஊர் உங்க ஊருக்குப் பக்கதில் உள்ள கீழக்கோட்டை.