Thursday, May 04, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 3

மளிகைக் கடையில் வேலை பார்த்தது என் பள்ளி விடுமுறை நாட்களில். நான் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து முதுகலைப் பட்டப்படிபிற்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்த 3 மாதங்களில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமமும் இல்லாத டவுனும் இல்லாத ஊரான திருச்சுழியில் என் சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போதெல்லாம் வெட்டி ஆபீசரான நான் காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்பது வழக்கம். பார்த்தார் என் சித்தப்பா. இப்படியே விட்டால் சோம்பேறிப் பயலாப் போயிருவான்னு நினைத்து என் சித்தியிடம் சொல்லிக் கடைக்கு வரும்படி உத்தரவு வந்தது. முதல் நாள் கொஞ்சம் வெறுப்புடனே கடைக்குச் சென்றேன்.

எங்கள் கடை மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்யப்படும் கடை.
ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் குளுமையான இடத்தில் தான் எங்கள் கடை அமைந்திருந்தது. சுற்றுப்பட்டு விவசாயிகள் தங்கள் காய்கறிகளை எங்கள் கடையில் வந்து விற்று விட்டுச் செல்வார்கள். அருப்புக்கோட்டையில் வாங்கப்படும் விலையில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அருப்புக்கோட்டை, நரிக்குடி, மானாமதுரை, பார்த்திபனூர், பரமக்குடி போன்ற ஊர்களில் உள்ள வியாபாரிகளுக்கு பேருந்துகளில் காய்கறிகளை மொத்தமாக அனுப்புவார். சுற்றுப்பட்டு கிராம மக்கள் எங்கள் கடையில் வந்து அனைத்து காய்கறிகளையும் புத்தம் புதிதாக நியாயமான விலையில் வாங்கிச் செல்வார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக என் சித்தப்பா 15 வயதில் இருந்து வியாபாரம் செய்து வருகிறார். விசயத்திற்கு வருவோம்.

என்னை முதலில் மொத்த வியாபாரப் பகுதியில் வேலை செய்யச் சொன்னார். சுமார் 20 கிலோ முதல் 60 கிலோ வரையிலான எடையைத் தூக்க வேண்டும். முதல் 5 நாட்கள் உடல்வலி பின்னியெடுத்துவிட்டது. பின்னர் பழகிவிட்டது.

அந்தக் கடைக்கும் எனக்கும் ஒரு ராசியுள்ளது. எப்போது கடைக்கு விடுமுறையில் வந்தாலும் என்னிடம் ரத்தப்பலி வாங்காமல் விடாது. தராசு முள் கையில் குத்தி ரத்தம் வரும். அல்லது படிக்கல் காலில் விழுந்து ரத்தம் வரும் அல்லது முட்டைக்கோஸ் வெட்டும் போது கையையும் சேர்த்து வெட்டி ரத்தம் வரும். எப்படியாவது ரத்தம் வரும்படியான காயமாகிவிடும். ஒரு முறை கடைக்குள் எலி ஒன்று ஓடியது. அதைக் கண்டவுடன் முட்டைக் கோஸ் ஒன்றை எடுத்து அதன் மீது எறிந்தேன். அது எலியின் மீது சரியாக விழுந்தது. எலி செத்துப் போயிருக்கும் என முட்டைக்கோஸை எடுத்த போது கையில் எலி கடித்து ரத்தக் காயமாகிவிட்டது. இப்போது கடைக்குப் போனாலும் ஏதாவது ஒன்று நடந்து விடுகிறது.

காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. தக்காளி விலை ரூபாய் 20 இருக்கும் போது தக்காளி விவசாயத்தை ஆரம்பிப்பார். தை மாதத்தில் தக்காளி விளைந்து வரும்போது கிலோ ரூபாய் 2 க்கு விற்பனையாகும். அவர்கள் மாட்டுவண்டி முழுவதும் 150 கிலோ தக்காளி கொண்டுவந்து, வெறும் 300 ரூபாய்க்கு விற்றுச் செல்வார்கள். பெருத்த நஷ்டம் அவர்களுக்கு. நாங்களும் இது போன்ற சூழ்நிலையில் 2 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சீசன் இல்லாத நேரங்களில் தக்காளி ஆண்டிப்பட்டியில் இருந்தும், கத்தரிக்காய் ஒட்டன்சத்திரத்தில் இருந்தும், முருங்கைக்காய்கள் தாராபுரத்தில் இருந்தும், காரட், முள்ளங்கி, கோஸ், காலிப் பிளவர் போன்ற காய்கறிகள் கொடைக்கானலில் இருந்தும் கடைக்கு வரும்.

மொத்த வியாபாரப் பிரிவில் வேலை மிக எளிதாக இருக்கும். கேட்ட காய்கறிகளை நிறுத்துப் போட்டுவிட்டு பில் எழுதி என் சித்தப்பாவிடம் அனுப்பிவிடுவேன் அவர் விலை சரிபார்த்துவிட்டு காசு வாங்கிவிடுவார். மூளைக்கு வேலையெல்லாம் இல்லை. ஒரு மிஷின் மாதிரியானது. சில்லறை வியாபாரம் இதற்கு நேர்மாறானது. அது பற்றி அடுத்த பதிவில்...

6 comments:

kirukan said...

I like Thiruchuzhi very much, especially the railway station, Naaval Maram outside the station and the river (when there is water) :)

I visited Thiruchuzi almost everyyear for Aadi Thabasu until I was in school. Btw, I come from Aruppukottai.

மகேஸ் said...
This comment has been removed by a blog administrator.
Kumaresan V said...

எங்க ஊருக்கு பக்கத்துல தான் வேலை பார்த்தீங்களா? எந்த ஊருன்னு கேக்கறீங்களா...அருப்புக்கோட்டை தான்(கிருக்கன் கவனிக்கவும்)

சுவையான பதிவு.

அன்புடன்
குமரேசன்

மகேஸ் said...

வாங்க கிறுக்கன், குமரேசன்.
என் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி. அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி வருவது வழக்கம். வரும்போதெல்லாம் ஹோட்டம் இனிமையில் சாப்பிட்டுவிட்டுச் செல்வது வழக்கம்.
கிறுக்கன், நீங்கள் அருப்புக் கோட்டையில் எந்த இடம்?

Amala Singh said...

பார்த்திபனூர் என் சொந்த ஊர். இப்போது நான் பிரித்தானியில் வசிக்கிறென். உங்களுடன் பேச ஆவல்/

மகேஸ் said...

வாங்க அமலா சிங். நீங்களும் ராமநாதபுரம் மாவட்டமா.
நம்ம ஊர் காரங்க வலைப்பதிவில் எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியலையே.

நீங்க உங்க தொலைபேசி எண்ணை என்க்குப் பின்னூட்டமாக அனுப்புங்கள். நான் நாளை அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொள்கிறேன்.(தொலைபேசி எண் உங்கள் அனுமதியின்றி வெளியிடப்பட மாட்டாது)