Wednesday, December 13, 2006

உஷாரய்யா உஷாரு!!!

நேற்று மதிய உணவு இடைவேளையில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது ஒருவர் தன்னிடம் டிஜிட்டல் வீடியோ கேமரா இருப்பதாகவும் விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டார்.

சரி காண்பியுங்கள் என்று கேட்ட பொழுது ஒரு ஓரமாகக் கூட்டிச் சென்று காண்பித்தார். அது நிக்கான் எஸ்.எல்.ஆர் கேமரா போல இருந்தது(நிக்கான் காமிரா அல்ல). காமிராவைக் காட்டி இதன் மூலம் 4 மணி நேரம் வீடியோ பதிவு செய்யலாம் என்று சொன்ன போது, சரி டேப் எப்படி கேமராவில் மாட்டுவது என்று கேட்ட போது அது அவர் உளற ஆரம்பித்தார். வுடு ஜூட் என்று எஸ்கேப் ஆனேன். அவரோ என்னைத் துரத்திக் கொண்டே அலுவலகம் வரை வந்தார்.

இது போல இரண்டு முறை மயிரிழையில் ஏமாற்றலில் இருந்து தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் ஒருவர் தான் குடும்பத்துடன் ஊரில் இருந்து வந்ததாகவும் பணம் இல்லாததால் ஒரு கைக்கடிகாரத்தைக் காட்டி அதன் விலை 1000 ரூபாய் என்றும் அதனை வைத்துக் கொண்டு 700 ரூபாய் மட்டும் தருமாறுகேட்டார்.

அப்போது திடீரென் ஆஜரான மற்றொருவர் தான் தான் அருப்புக்கோட்டையில் பிரபலமான கைக்கடிகாரக் கடையின் உரிமையாளர் என்றும் மதுரை செல்வதற்காக பேருந்துக்குக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு அந்தக் கடிகாரத்தை வாங்கிப் பார்த்தார். இது ஒரிஜினல் கடிகாரம் என்றும் 1000 ரூபாய் விலை பெறும் என்றும் கூறினார்.

நான் உடனே, மதுரை பஸ் அங்கிட்டு(வேறுபக்கம்) அல்லவா நிற்கும். மேலும் மதுரை செல்லக் காத்துக் கிடக்கத் தேவையில்லையே? நீங்கள் சுமார் அரை மணிநேரமாக இந்தப்பக்கமாகவே சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டதுதான் தாமதம் , இருவரும் தலைதெறிக்க ஓட்டம்
பிடித்தனர்.(நமக்கு நன்கு தெரிந்த ஊர்களில் இது போல அடிச்சு ஆடலாம்.:)))) ).

மற்றொரு முறை சென்னை வடபழனியில் பேருந்துக்காக் காத்துக் கொண்டிருந்த போது ஒருவர் தன்னிடம் தங்கம் இருப்பதாகவும் குறைந்த விலைக்குத் தருவதாகவும் கூறினார்.

அப்போது என்னிடம் கையில் ஐம்பது ரூபாய் மட்டுமே இருந்தது.எனவே என்னை எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அவருடன் ஓரமாக ஒதுங்கினேன். அப்போது மற்றொருவர் தனக்கும் தங்கம் வேண்டும் என்று கூறி என்னுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் ஒரு பையில் இருந்து ஒரு தங்கக் கட்டியை எடுத்துக் காட்டினார்.உடனே என்னுடன் சேர்ந்து கொண்ட மற்றொருவர் தங்கத்தை வாங்கி உள்ளங்கையில் உரசிப்பார்த்துப் பின்னர் அதனை முகர்ந்து பார்த்தார். உடனே அது சுத்தமான தங்கம் என்று சர்டிபிக்கேட் கொடுத்தார்.

எனக்கோ உரைகல்லில் உரசிப்பார்த்தாலே போலிகளைக் கண்டறிய சிரமமாக உள்ள காலத்தில், உள்ளங்கையில் உரசிப்பார்த்து சொல்வதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.

உடனே, சார் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார், நான் ஐம்பது ரூபாய் இருக்கிறது என்றேன். சார் செயின் மோதிரம் ஏதாவது இருந்தால் நாம் தங்கத்தைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்டவுடன் எதுவும் இல்லையே என்றேன். கடுப்பாகிப் போய் இருவரும் திட்டிக் கொண்டே சென்றனர்.

ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

6 comments:

நாமக்கல் சிபி said...

//ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.//

தனியா கூட்டிட்டுப் போய் அடிச்சிடப் போறாங்க! கத்தி கித்தி வெச்சிருந்தால் கோபத்துல அப்படியே ஒரு கீசு கீசிட்டுப் போய்டுவாங்க!

ஜாக்கிரதை!

மகேஸ் said...

//கத்தி கித்தி வெச்சிருந்தால் கோபத்துல அப்படியே ஒரு கீசு கீசிட்டுப் //
ஆமாங்க, கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கனும்.

பொன்ஸ்~~Poorna said...

//ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் அவனை வெறுப்பேற்றுவதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.//

அதுசரி :)

மகேஸ் said...

வாங்க பொன்ஸ், சவுக்கியமா?

மகேஸ் said...

பீட்டா பிளாக்கர் டெஸ்ட்

Anonymous said...

Best Online Casino in Australia - 카지노 먹튀 틜스마 더나인 온카지노 온카지노 카지노사이트 카지노사이트 363T3 Bet