Friday, July 28, 2006

மித வேகம் மிக நன்று

நாம் பலமுறை பேருந்துகளில் செல்லும் போது நினைத்திருப்போம் "டிரைவர் வண்டிய உருட்டுராரு".பலபேர் டிரைவரின் காதுபடவே இதனைச் சொல்வார்கள். சில டிரைவர்கள் வீராப்பு கொண்டு வேகமாக வண்டியை ஓட்டுவார்கள்.சிலர் என்னதான் சொன்னாலும் "எருமை மாடு மேலே மழை பெய்த்தது போல ஆடி அசைந்த்து ஓட்டிச் செல்வார்கள்".கடந்த ஆண்டு வரை நம்ம ஊர் பஸ் டிரைவர்கள் பற்றிய என் எண்னமும் இப்படியே இருந்தது.

கடந்த ஆண்டு இந்தியா வந்த பொழுது, பெங்களூரில் இருந்து மதுரை வருவதற்காக பஸ் ஏறினேன். திட்டமிடாத பயணம் என்பதால் வந்த வேலை முடிந்ததும் பஸ்பிடித்து சேலம் வந்து சேர்ந்தேன். இரவு சுமார் 1 மணி. சேலம் - மதுரை பயணம். அரசு பஸ் டிரைவரும் கண்டக்டரும் "திண்டுக்கல் மதுரை மட்டும் ஏறிக்குங்க நாமக்கல் கரூர் நிக்காது" என்று சொல்லியவுடன் விரைவாக மதுரை சென்றுவிடலாம் என்று மனம் குதூகலித்தது.

பஸ்ஸின் முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் சீட். வசதியாகத்தான் இருந்தது. சேலம் பஸ்டாண்டை விட்டு வெளியே வந்ததுமே அசுர வேகத்தில் பஸ்ஸை இயக்கினார் டிரைவர். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நேஷனல் ஹைவே - 7ல் சுமார் 100கி.மீ வேகத்தில் பல தடைகளைத் தாண்டி பஸ் பறந்து கொண்டிருந்தது. நாமக்கல் தாண்டி ஒரு இடத்தில் லாரியை ஓவர் டேக் செய்ய வேண்டும். டிரைவர் வேகத்தைக் குறைக்காமல் எதிரே லாரி வருவதைக் கணக்கிட்டு வேகத்தை அதிகப்படுத்தி ஒரு ' H ' கட் அடித்து லாரியை முன்னேறிய போது முன்னே விழித்திருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் அரண்டு போய்விட்டேன். ஒரு வினாடி நேரம் பிசகியிருந்தால் பஸ்ஸின் ஒரு பகுதி சின்னா பின்னமாகியிருக்கும். அப்போதுதான் நான் சுதாரித்து, இது சாதாரணமாக வேகமாக ஓட்டும் டிரைவரின் செயல் அல்ல என்று எனக்கு உரைத்தது. கொஞ்ச நேரத்தில் யாரோ ஒரு கரூர் டிக்கட் டிரைவருக்குத் தெரியாமல் ஏறி அமர்ந்திருக்கிறார்.

"டிரைவர் சார் என்னை கரூர் விலக்கு ரோட்டில் இறக்கி விட்டு விடுங்கள்" என்று சொன்னதுதான் தாமதம்டிரைவருக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது. "ஏன்யா என் உயிரை வாங்குறீங்க?" என்று வசவு செய்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

"சார் இவனுங்க தொல்லை தாங்க முடியல சார்" என்று என்னைப் பார்த்துக் கூறினார்,"நைட் நேரம். நிறுத்தித்தான் போகலாமே சார்?" என்றேன் நான்."நான் தூங்கி கிட்டத்தட்ட 36 மணி நேரம் ஆகிவிட்டது தெரியுமா சார்" என்றார் டிரைவர்.

தூக்கி வாரிப் போட்டது எனக்கு.

"ஆமாம் சார் டிரைவர் பற்றாக்குறை என்று அடிக்கடி ஓவர் டியூட்டி போட்டுடுராங்க சார். என்னால கண்ணை முழிச்சுப் பார்க்க முடியல சார். கண்ணெல்லாம் எரியுது"

"மெதுவாகப் போனால் தூங்கிவிடுவேன். அதனால் தான் வெறியுடன் வண்டியை விரட்டுரேன்"

"சீக்கிரம் மதுரை போய்விட்டால் தூங்கிவிடலாம்" என்றார் டிரைவர்.

"புலம்பாம வண்டியை ஓட்டுய்யா" என்று சொல்லிவிட்டு கண்டக்டர் தலையச் சாய்த்து விட்டார்.

என்ன விபரீதம் இது. அரசு நிர்வாகம் டிரைவர்களுக்கு ஓவர் டியூட்டி கொடுத்து பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறதே என்று ஆத்திரம் வந்தது. அதற்குள் என் பக்கதில் இருந்த பெரியவர் விழித்துக் கொண்டு விட்டார். டிரைவர் சார் அருகில் ஏதாவது டீக்கடை வந்தால் நிறுத்துங்க, டீ சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்றார். சிறிது தூரத்தில் ஒரு டீக்கடை வந்தது. டிரைவருக்கு நல்ல ஸ்டிராங்காக இரண்டு டீ சொன்னோம்.

நன்றாக முகத்தைக் கழுவிவிட்டு சிறுது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயண ஓட்டுநர்களுக்கு நல்ல ரெஸ்ட் வேணும் சார், இல்லேண்ணா, தூக்கத்தில் வண்டி பள்ளத்தில் இறங்கிவிடும் என்றார். எங்க கஷ்டத்தை யாரும் புர்ந்துகிட மாட்டேங்கிறாங்க சார். எனக்கு 20 வருட அனுபவம் அதனால் சமாளிக்கிறேன். சின்னப் பசங்க என்றால் இந்நேரம் அந்த லாரியில் வண்டியை நுழைத்திருப்பாங்க என்றார்.

உங்களுக்கு ஓவர் டியூட்டி ஏன் போடறாங்க? வண்டிய எடுக்க முடியாதுன்னு மேனேஜரிடம் சொல்லலாமே என்றேன்.

பேன் காத்துலேயும், ஏசியிலேயும் உக்கார்ந்து வேலை செய்றவங்களுக்கு எங்க கஷ்டம் புரியாது. நாங்களும் முடியாதுன்னு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா வேற ஏதாவது விசயத்தில கோர்த்து விட்டுப் பழிவாங்கிடுவான் அந்த ஆள், என்றார். மேலும் அரசு டிரைவர்கள் பற்றாக்குறை மற்றும் திருவிழாக்காலங்களில் விடப்படும் சிறப்புப் பேருந்துகளால் ஏற்படும் பணிச்சுமை இது போல பல காரணங்கள் இருக்கிறது என்றார்.

தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களிலும் சில நேரம் டியூட்டி போட்டுவிட்டால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட முடியாது. இது போன்ற நாட்களில் எங்களுக்கு அலவன்ஸ் கிடைத்தாலும் அது குடும்பதினருடன் செலவிட நினைக்கும் சந்தோசத்திற்கு இணையாகாது பணம்.

இது போல தூக்கத்தைக் கட்டுப்படுத்ததான் டிரைவர்கள் சிகரெட், பான்பராக் போன்ற பழக்கத்தை ஆரம்பிக்கிறாங்க. பிற்காலத்தில் அதற்கு அடிமையாகி உடல் நலம் கெட்டு பாதிக்கப்படுறாங்க என்றார்.

சார் எங்களுக்கும் குழந்தைகள் குடும்பம் எல்லாம் இருக்கு. உங்களுக்கெல்லாம் வேலைக்குப் போனால் மாலையில் வீடு திரும்பலாம் என்ற உத்திரவாதம் இருக்கு. ஆனால் எங்களுக்கு இல்லை.

நாங்க தவறு செய்தாலோ, இல்லை எதிரே வருகிறவன் தவறு செய்தாலோ, மெக்கானிக் தவறு செய்தாலோ எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து என்றார். அவரின் தொழில் பற்றிய கருத்துகள் முற்றிலும் நியாயமானவையே.

உண்மையிலேயே சொல்லப் போனால் நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்ங்கதான் ரூல்ஸ் பாலோ பண்ணி வண்டி ஓட்டுவாங்க. அவங்க வேகம் எப்போதுமே 50கி.மீ தாண்டாது. வண்டியும் கண்டிஷனாக இருக்கும். மேலும் எல்லா இடத்துலேயும் பொறுமையாக செயல்படுவாங்க. ஆனா நாங்க அப்படியில்லை. எங்களுக்கு நேரம் முக்கியம். அதனால் தான் அவசரப்பட்டு வேகமாக ஓட்டி சில நேரங்களில் விபத்துக்குக் காரணமாகிவிடுகிறது என்றார்.

எங்களுக்கும் நல்ல ஓய்வு, தினமும் 8 மணிநேரம் வேலை, நல்ல கண்டிஷனில் வண்டிகள் அப்படீன்னு இருந்தா எங்கலாலேயும் விபத்துகள் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்.

வண்டி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நுழைந்த பொழுது காலை 6.30 மணி. டிரைவர் சார் வாங்க டீ அடிக்கலாம் என்று அழைத்தேன். அவர் சிரித்துக் கொண்டே என்னுடன் சேர்ந்து ஒரு டீ குடித்து விட்டு நட்புடன் விடை பெற்றார். ராமநாதபுரம் செல்ல இன்னும் மூன்று மணி நேரப் பயணத்தை நினைத்து அலுப்பாக வந்தது எனக்கு.

Saturday, July 22, 2006

குழந்தையின் மேல் வன்முறை





இரண்டொரு நாட்கள் முன்பு சில சாமான்கள் வாங்குவதற்காகத் தமிழ்கடைக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்தக் கடையில் ஒரு அழகான இரண்டு வயதுக் குழந்தையும் அப்பாவும் கடையில் ஏதோ பொருளைத் தேடிக் கொண்டிருந்தனர். அழகான குழந்தை அவ்வப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் முகபாவனைகள் மூலம் சில விளையாட்டுகாட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டது. நான் எட்டிப் பார்த்த போது அந்த அப்பா குழந்தையை அடித்துக் கொண்டிருந்தார். ஒரு கணம் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.(ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிப்பது குற்றம். இதற்குச் சிறைத் தண்டனையோ அல்லதுமனநோய் மருத்துவரிம் ஒரு கலந்துரையாடலோ அரசால் ஏற்படுத்தப்படும்.) அந்தக் குழந்தை கடையில் அடுக்கி வைத்திருந்த சில பொருட்களைத் தள்ளி விட்டுவிட்டு விட்டது என்பதற்காக அந்தத் தந்தை குழந்தையை அடித்திருந்தார்.

குழந்தைகளின் மீது பெற்றோர் வன்முறை காட்டுவது என்பது ஒரு தவறான செயல். அது அவர்களின் ஆழ்மனதில் உள்ள சில சைக்கோத் தனமான எண்ணங்களால் அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு வடுகிறது. அதற்குக் காரணம் பின்வருவனவற்றில் எதுவாகவும் இருக்கலாம்.

1. மனைவியைப் பிடிக்காத கணவர்கள் குழந்தைகள் மீது காட்டும் வன்முறை.(அதற்குக் குழந்தை என்னங்க செய்யும். பாவம்)

2. பணியால் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால், அதனை அடக்க முடியாமல் சில நேரங்களில் குறைந்த ஆற்றல் உள்ளவர்களிடம் பீறிட்டு வெளிவருவது. (மன அழுத்தம் என்றால் என்ன என்பதும் கூட தெரியாமல் அதனால் அவஸ்தைப்படுவர்கள் அதிகம்)

3. தன்னுடைய குழந்தையின் செயல்களை/கல்வித் திறனை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் போல இல்லையே என்ற ஒரு வித ஈகோ மனப்பான்மையால் ஏறபடுவது.(தன்னுடைய குழந்தைக்கு என்ன ஆர்வம் என்று கண்டுபிடித்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை)

4. உண்மையிலேயே ஒரு நல்ல காரணத்திற்காக வன்முறை காட்டுவது. (உதாரணமாக, எனக்கு ஐந்து வயதிருக்கும் போது 'முண்டை' என்ற சொல என் பேச்சில் அடிக்கடி வரும். என் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததால் விறகுக் கட்டை உடையும் வரை அடி வாங்கியது. அதன் பின்னர் அது போன்ற சொற்களைச் சொல்வதற்கு இன்றும் பயம்)

ஆக இதில் பெரும்பாலான தவறுகள் பெற்றோரிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் செய்யும் செயல்களை ரசிப்பது நம்மை மேலும் இளமையான மனநிலையில் வைத்திருக்கும். இன்றைய குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் நேற்று நாம் செய்ததின் தொடர்சியாக நினைத்து பாருங்கள், உங்களுக்குச் சிரிப்பு வரும்.

நான் மேலே சொன்ன நிகழ்ச்சி தொடர்ந்து சில முறைகள் நடந்தால் குழந்தையின் பிற்கால நடவடிக்கை எப்படி இருக்கும்? எந்த ஒரு பொருளையும் எடுப்பதற்கு யோசிக்கும். அதனால் அதில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் குறைந்துவிடும். அதன் தொடர்சியாக பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரு வழியிலான சிந்தனைகளே அந்தக் குழந்தையிடம் இருக்கும்.எதனையும் மாற்றுக் கோணத்தில்(Lateral thinking) ஆராயும் குணமும் குறைந்து விடும். அதுவே இந்தப் போட்டி நிறைந்த உலகில் பின் தேக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இன்றைய வலைப்பூ வாசகர்கள், படைப்பாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதில் சிறுவர்மலர், அம்புலிமாமா, கலைக்கதிர் போன்ற இதழ்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்திருப்பார்கள். அதன் தொடர்சியாகவே இன்று நல்ல வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் விளங்குகிறீர்கள். பத்து வயதில் என்ன எப்போதும் கதைப் புத்தகம்? என்று பெற்றோர்களால் தடுக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் வாசிக்கும் தன்மைகுறைந்தவர்களாகவே இன்றும் இருந்திருப்பீர்கள்.

எனவே குழந்தைகளை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். அன்பால் சொல்லி நல்ல வழியைக் காட்டுங்கள். நாளைய நல்ல மனிதர்களை உருவாக்குவது இன்றைய பெற்றோர்களின் கையில்.

Sunday, July 16, 2006

லண்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

டிரிங்.. டிரிங்..
..
"சொல்லுங்க அண்ணே..."
"மகேந்ரா எப்ப வர்ற.."
"இன்னக்கி மதியம் ஒரு மூணு மணியில இருந்து நாலுக்குள்ள வந்துடுறேன்."
"சரி அப்படியே மதன் வந்துருக்கானுல்ல அவனையும் கூட்டிட்டு வந்துரு."
"சரிண்ணே."

இது எனக்கு JK என நான் அழைக்கும் நம்ம ஜெயக்குமாருடன் என்னுடைய உரையாடல், நேற்று ஞாயிறு காலை 11 மணிக்கு

JK வீட்டிற்குள் நுழையும் போது 4.30 மணி.
வீட்டிற்குள் நுழையும் போதே, "எண்ணணே இன்னக்கி நண்டுக் குழம்பா.." என்று கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.
"இல்லப்பா, உங்களுக்காக prawn பிரியாணி."

அப்படியா ன்னு கேட்டுக் கொண்டே வீட்டில் அவரது குழந்தையுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு
prawn பிரியாணியும், ஆட்டு ஈரல் வறுவலையும் ஒரு பிடி பிடித்தேன்.

அப்படியே தமிழ்மணத்தின் லேட்டஸ்ட் நிலவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

"ஏண்ணே இப்ப எழுதுறத விட்டுட்டீங்க?"
"இல்லப்பா, என் குழந்தையுடன் விளையாடுவதற்கே நேரம் சரியா இருக்கு.
எழுதனும்.. ஒரு ஆறு மாதம் ஒரு வருசம் கழிச்சு" என்றார் JK.

அப்புறம் செல்வி, கோலங்கள் போன்ற சீரியல்களில் என்ன கதை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுக் கொண்டேன்.

அப்போது சன் நியூஸில் முத்தையா முரளிதரன் நிருபர்களுக்கு விமான நிலைய வாசலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

நம்ம லக்கிலுக்கை ரெம்ப விசாரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து "அப்படியே நைட் சாப்பாடும் சாப்டுட்டுப் போயிருங்க" என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
"வந்த நோக்கத்தை கரக்டாக கண்டு பிடிச்சுட்டீங்க போல.." அப்டீன்னு கொஞ்சம் காமெடி பண்ணிவிட்டு...

அவசர வெளி வேலைகள் இருப்பதால் போய்ட்டு வர்றேன் என்று விடை பெற்றோம்.

இப்படியாக லண்டனில் ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இனிதே நிறைவேறியது.


பின் குறிப்பு : JK எனக்கு 1998 ம் ஆண்டில் இருந்து தெரியும். அவர் எனக்கு கல்லூரியில் 2 வருடம் சீனியர்.

Saturday, July 15, 2006

அனுபவம் - மிக்சர் - 1

நான் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பி,ஈ மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்து விட்டது. வேறெ ஒன்னுமில்லீங்க, நம்ம பசங்க வேலி தாண்டிட்டாங்க. சும்மா, வேலியத் தாண்டி லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள போயி மாட்டிக்கிட்டாங்க.

ரெம்ப நாளா இதெல்லாம் ஒரு பிரச்சனையின்னு காலேஜே ரெம்பக் கலங்கிப் போயி இருந்துச்சு.

அப்பத்தான் cultural program நடத்துறக்குப் பிரின்ஸி கூப்டாரு. எப்படியாவது பொண்னுங்களைப் பழி வாங்கிடனும்மா மச்சிகளானுட்டு பசங்களெல்லாம் கிளம்பிட்டாங்க.

cultural programல் கடைசி நாள் பாட்டுக் கச்சேரி. ஒரு பையனும் பொண்ணும் பாட்டு படிகிறாங்க. அது தான் இப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருகிற பாட்டு.

இந்தப் பாட்டை ஒரு போட்டிக்காக பையனும் பொண்ணும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதாக நினைத்துக் கொண்டு கேளுங்கள்.

"திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடான்னு" பசங்க ஆரம்பிக்க
.......
"எங்கூருப் பொண்ணுகள மோப்பமிட வந்தவனை எங்க சீயான் மூக்கறுத்தாக.." ன்னு பொண்னு படிக்க பிள்ளைகலெல்லாம் ஒரு ஆட்டம் ஆடி பின்னெயெடுத்துட்டாங்க.

"நாங்க குளிச்சு அனுப்பி விட்ட கொறட்டாத்துத் தண்ணியில் ஏண்டியம்மா கறி சமைச்சீங்க" ன்னு பையன் பாட

லேடீஸ் ஹாஸ்லகுக்கு தண்ணீர் பசங்க ஹாஸ்டலில் இருந்து தான் போய்க்கிட்டு இருந்தத நினைச்சு ஒரு ஆட்டம் போட்டோம் பாருங்க.

"அட களவானிக் கோத்திரமே காளமாட்டு .த்திரமே" ன்னு படிக்க விசிலு பின்னி பெடலெடுத்துட்த்துட்டோம்.

இனையத்துல இந்தப் பாட்டைக் கேட்டதும் பழைய நினைவெல்லாம் வந்துட்டுதுங்க.


சூடு தணிய!!

இப்போது இங்கே நல்ல கோடை காலமாக இருப்பதால் சூடு தணிய சில யோசனைகள். தமிழ்மணம் படித்துவிட்டும் சாப்பிடலாம்.

1. தினமும் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் கண்ணை மூடிக்கொண்டு கசப்பை மறந்து மென்று தின்று விடவும்.

2.கால்கரி சிவா சொன்னபடி ஜிகர்தண்டா செய்து பருகிவந்தால் சூடு உடணே தணியும்.

3.சின்ன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு நன்று மென்று விழுங்கவும்.

இது தாங்க சூடு பிடித்துக் கொண்டால் நான் செய்யும் வைத்தியம். நீங்களும் தமிழ்மணம் படித்து விட்டுச் செய்து பாருங்கள். உடல் உடனே குளிர்ச்சியடையும்.

அப்படியே சித்த வைத்தியத்திற்கான கட்டணதை paypal மூலம் செலுத்திவிடவும்.

Sunday, July 02, 2006

பூவும் புஸ்தகமும்

---------------------------------------------------------
இந்தச் சிறுகதை தேன்கூடு ஜூலை மாத சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
--------------------------------------------------------

"அம்மா.. "

"என்னடா செல்லம்?"

"அப்பா இன்னக்கி எனக்குப் புஸ்தகம் எல்லாம் வாங்கிட்டு வருவாராம்மா?"
"கட்டாயம் வாங்கிட்டு வருவாருப்பா. அப்பா இன்னைக்கி சவாரி எல்லாம் முடிச்சிட்டு வரும் போது உனக்குப் புத்தகம் உனக்குப் பிடிச்ச பூந்தி எல்லாம் வாங்கிட்டு வருவார்."
"இப்ப நீ நல்ல பிள்ளையா இத சாப்பிடுவியாம் அப்புறம் அம்மா உனக்கு ஒரு கதை சொல்லுவேன். கதை கேட்டுக்கிட்டே நல்ல பிள்ளையாகத் தூங்கிடனும் சரியா."

"சரிம்மா."

ராம், இவன் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். அப்பா ஆட்டோ ஓட்டுநர் நடராஜ். அவரின் சொற்ப வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது.

"ஆட்டோ... சீக்கிரம் சென்ட்ரல் போகனும் இன்னும் அரைமணி நேரத்தில கல்கத்தா டிரெயின் புறப்பட்ரும். உடனே போகனும் வர்றீயா?"

"போயிரலாம் சார்..அரைமணி நேரம் இருக்குல்ல. ஏதாவது போட்டுக் கொடுங்க சார். "

"நீ மட்டும் சரியான நேரத்துக் போயிட்டீன்னா மீட்டருக்கு மேலே ஐம்பது ரூபாய் தர்ரேன்."

சார் நீங்க சீக்கிரம் ஏறுங்க. நடராஜுக்கு இன்று மகனுக்கு புத்தகமும் பூந்தியும் வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஆட்டோவை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நடராஜ். பல ஸ்கூட்டர், பைக் ஓட்டும் நடுத்தர மக்களிடம் சாவுகிராக்கி போன்ற வசவுகளைக் கேட்டுக் கொண்டே முன்னேறிச் செல்ல ஆரம்பித்தார்.

அங்கே ஒரு திருப்பதில் எதிரே வந்த பைக் மீது மோதுவதைத் தவிர்க்க எண்ணி வண்டியைத் திருப்பும் போது வண்டி குடை சாய்ந்து தலையில் அடிபட்டு நடராஜ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

"அம்மா.. இன்னைக்கி எனக்குப் புதுப் புத்தகம் வாங்கனும்மா. "

"அப்பா நாளைக்கு வாங்கித் தர்றேன்ன்னு சொல்லியிருக்காருப்பா."

"சரிம்மா டீச்சர் இந்த வாரத்துக்குள்ள எல்லோரும் புத்தகம் வாங்கிடனும்னு சொல்லியிருக்காங்கம்மா. "

"அப்பா கண்டிப்பா வாங்கிக் கொடுத்துவிடுவார். கவலைப்படாதே.நீ இப்பத் தூங்கு ராஜேஷ்,"

ராமும் ராஜேசும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரின் வீடும் பக்கக்த்துப் பக்கதில் தான்.

நடராஜின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பலத்த அலறல், அழுகை, கண்ணீர் அந்தத் தெருவையே நனைத்தது. பலருக்கும் நடராஜ் நண்பர்.
அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விடுபவரும் அவரே. பல குழந்தைகளுக்கு என்ன என்று சொல்லிப் புரிய வைக்க முடியாத நிகழ்வு அது.

மறுநாள்,

"ராம், உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு? "

"அவர் இறந்துட்டாருடா. "

"அப்படீன்னா அவர் திரும்பி வரமாட்டாராடா? "

"இல்லடா அவர் இருபது வருசம் கழிச்சு சாமிகிட்ட இருந்து திரும்பி வந்துடுவாருன்னு எங்க அம்மா சொன்னாங்க."

"எங்க தாத்தா கூட செத்துப் போயிட்டாருடா. அவரும் சாமிகிட்டப் போயிட்டுத் திரும்ப்பி வந்துட்டாருடா" என்றான் ராஜேஷ்

அடுத்த வாரம் ராஜேஸ் அம்மாவிடம் சொன்னான்

"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா"

"அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே"

"ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."

"அப்படியா, சரி நீ போய் தூங்கு ராஜேஸ்."

"சரிம்மா."

ஏங்க கண் கலங்குறீங்க என்று ராஜேஸின் அம்மா ராஜேஸின் அப்பாவிடம் கேட்டார்.

"தெருமுனையில இருக்கிற என்னோட பூக்கடையில தான் அன்னைக்கு நடராஜிக்குப் போட எல்லோரும் மாலை வாங்குனாங்க. அந்தப் பணத்துல தான் நான் நம்ம ராஜேஸுக்குப் புத்தகம் வாங்கினேன், இப்ப அத நினைச்சுத்தான் நான் கண்கலங்கினேன்" என்றார் ராஜேஸின் அப்பா.