Wednesday, March 29, 2006

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்!

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்!இது வைகோவின் குரல். இந்த வலைப்பதிவைப் படித்ததும் சில சம்பவங்கள் என் மனதில் ஓடுகின்றன்.
அதை உங்களுடன் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்வதா அல்லது ஒரு சாதாரண நிகழ்வாகச் சொல்வதா எனத் தெரியவில்லை.

அது 1983ம் வருடம். நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது விடுதலைப் புலிகள் பள்ளிக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். புலிகள் என்றதும், ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் புத்தக அட்டையில் இருக்கும் புலியாக இருக்கும் என்று ஆர்வத்துடன் தலைமையாசிரியர் அறையை எட்டிப்பார்த்தேன். சிலர் ராணூவ உடை அணிந்து தலைமையாசிரியருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒரு சுற்றறிக்கை அனுப்பி விடுதலைப் புலிகளுக்காக காசு கேட்டார்கள். பத்துக்காசு கொடுத்திருப்பேன் என நினைக்கிறேன். இது போல் சில முறை நடந்தது.

பிறகு ஒரு நாள், 1986 அல்லது 1987 ம் வருடம் இருக்கும், ஜெயவர்தனாவின் கொடும்பாவியை ஊர்வலமாக எடுத்துவந்தார்கள். அவருக்கு செருப்பு மாலை அணிவித்து இருந்தார்கள். மேலும் எலி, பல்லியைக் கொன்று அவர் மேல் போட்டு இருந்தார்கள். பிறகு சிங்கக்குட்டி புரோட்டாக் கடை முச்சந்தியில் போட்டு அவரைச் செருப்பால் அடித்தார்கள். பின்னர் தீவைத்துக் கொழுத்தினார்கள்.

ஆனால் அதே போன்ற எழுச்சியை இப்போது எதிர்பார்க்க இயலுமா? ராஜீவ்காந்தியின் கொலைதானே அதைத்தடுக்கிறது.
ஆனால் என் சகோதரர்கள் செத்துக்கொண்டு இருப்பதை என்னால் சகிக்கமுடியவைல்லை. இப்பொழுது என் கைகள் இந்திய அரசின் சட்டத்தால் கட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தப் பிரச்சினையினால் தான் தமிழும்,தமிழர்கழும் உலகம்முழுவதும் பரவியுள்ளார்கள், மற்றும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது என நினைக்கும் போது உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சூழலில் "தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்" என்ற டார்வினின் கூற்றை நிரூபிக்க தமிழ் மொழி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடுகிறது என நினைக்கிறேன்.

No comments: