Sunday, July 02, 2006

பூவும் புஸ்தகமும்

---------------------------------------------------------
இந்தச் சிறுகதை தேன்கூடு ஜூலை மாத சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
--------------------------------------------------------

"அம்மா.. "

"என்னடா செல்லம்?"

"அப்பா இன்னக்கி எனக்குப் புஸ்தகம் எல்லாம் வாங்கிட்டு வருவாராம்மா?"
"கட்டாயம் வாங்கிட்டு வருவாருப்பா. அப்பா இன்னைக்கி சவாரி எல்லாம் முடிச்சிட்டு வரும் போது உனக்குப் புத்தகம் உனக்குப் பிடிச்ச பூந்தி எல்லாம் வாங்கிட்டு வருவார்."
"இப்ப நீ நல்ல பிள்ளையா இத சாப்பிடுவியாம் அப்புறம் அம்மா உனக்கு ஒரு கதை சொல்லுவேன். கதை கேட்டுக்கிட்டே நல்ல பிள்ளையாகத் தூங்கிடனும் சரியா."

"சரிம்மா."

ராம், இவன் இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன். அப்பா ஆட்டோ ஓட்டுநர் நடராஜ். அவரின் சொற்ப வருமானத்திலேயே குடும்பம் நடக்கிறது.

"ஆட்டோ... சீக்கிரம் சென்ட்ரல் போகனும் இன்னும் அரைமணி நேரத்தில கல்கத்தா டிரெயின் புறப்பட்ரும். உடனே போகனும் வர்றீயா?"

"போயிரலாம் சார்..அரைமணி நேரம் இருக்குல்ல. ஏதாவது போட்டுக் கொடுங்க சார். "

"நீ மட்டும் சரியான நேரத்துக் போயிட்டீன்னா மீட்டருக்கு மேலே ஐம்பது ரூபாய் தர்ரேன்."

சார் நீங்க சீக்கிரம் ஏறுங்க. நடராஜுக்கு இன்று மகனுக்கு புத்தகமும் பூந்தியும் வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

ஆட்டோவை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நடராஜ். பல ஸ்கூட்டர், பைக் ஓட்டும் நடுத்தர மக்களிடம் சாவுகிராக்கி போன்ற வசவுகளைக் கேட்டுக் கொண்டே முன்னேறிச் செல்ல ஆரம்பித்தார்.

அங்கே ஒரு திருப்பதில் எதிரே வந்த பைக் மீது மோதுவதைத் தவிர்க்க எண்ணி வண்டியைத் திருப்பும் போது வண்டி குடை சாய்ந்து தலையில் அடிபட்டு நடராஜ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

"அம்மா.. இன்னைக்கி எனக்குப் புதுப் புத்தகம் வாங்கனும்மா. "

"அப்பா நாளைக்கு வாங்கித் தர்றேன்ன்னு சொல்லியிருக்காருப்பா."

"சரிம்மா டீச்சர் இந்த வாரத்துக்குள்ள எல்லோரும் புத்தகம் வாங்கிடனும்னு சொல்லியிருக்காங்கம்மா. "

"அப்பா கண்டிப்பா வாங்கிக் கொடுத்துவிடுவார். கவலைப்படாதே.நீ இப்பத் தூங்கு ராஜேஷ்,"

ராமும் ராஜேசும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். இருவரின் வீடும் பக்கக்த்துப் பக்கதில் தான்.

நடராஜின் உடல் அன்று இரவே வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பலத்த அலறல், அழுகை, கண்ணீர் அந்தத் தெருவையே நனைத்தது. பலருக்கும் நடராஜ் நண்பர்.
அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விடுபவரும் அவரே. பல குழந்தைகளுக்கு என்ன என்று சொல்லிப் புரிய வைக்க முடியாத நிகழ்வு அது.

மறுநாள்,

"ராம், உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு? "

"அவர் இறந்துட்டாருடா. "

"அப்படீன்னா அவர் திரும்பி வரமாட்டாராடா? "

"இல்லடா அவர் இருபது வருசம் கழிச்சு சாமிகிட்ட இருந்து திரும்பி வந்துடுவாருன்னு எங்க அம்மா சொன்னாங்க."

"எங்க தாத்தா கூட செத்துப் போயிட்டாருடா. அவரும் சாமிகிட்டப் போயிட்டுத் திரும்ப்பி வந்துட்டாருடா" என்றான் ராஜேஷ்

அடுத்த வாரம் ராஜேஸ் அம்மாவிடம் சொன்னான்

"இன்னைக்கி புத்தகம் இல்லாதவங்க எல்லோரையும் டீச்சர் கை தூக்கச் சொன்னாங்கமா"

"அப்படியா? உனக்குத்தான் புத்தகம் இருக்குதே"

"ஆனா ராம் கை தூக்குனாம்மா. அப்புறம் டீச்சர் என்னுடைய புத்தகத்தை ராமையும் சேர்ந்து வாசிக்கச் சொன்னாங்கம்மா."

"அப்படியா, சரி நீ போய் தூங்கு ராஜேஸ்."

"சரிம்மா."

ஏங்க கண் கலங்குறீங்க என்று ராஜேஸின் அம்மா ராஜேஸின் அப்பாவிடம் கேட்டார்.

"தெருமுனையில இருக்கிற என்னோட பூக்கடையில தான் அன்னைக்கு நடராஜிக்குப் போட எல்லோரும் மாலை வாங்குனாங்க. அந்தப் பணத்துல தான் நான் நம்ம ராஜேஸுக்குப் புத்தகம் வாங்கினேன், இப்ப அத நினைச்சுத்தான் நான் கண்கலங்கினேன்" என்றார் ராஜேஸின் அப்பா.

26 comments:

Amar said...

நல்லா எழுதுயிருக்கீங்க மகேஸ்.ரிப்பீட்டே

மகேஸ் said...

நன்றி அரவிந்தன்

மகேஸ் said...

நன்றி சமுத்திரா.
இந்தக் கதையை எழுதி முடிச்சுட்டு படித்து படித்தவுடனேயே எனக்குக் கண்ணில் நீர் வந்துவிட்டது.

ilavanji said...

கருத்துள்ள கதை...

பேசும் வசனங்களை " " ல் போட்டால் படிக்க இன்னும் திருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்!

மகேஸ் said...

நன்றி இளவஞ்சி, இன்று மாலையில் அப்படியே செய்து விடுகிறேன்.

கோவி.கண்ணன் said...

நெகிழ்ச்சியான கதை... நன்றாக எழுதியிருக்கிறீர்கள்... வெற்றி பெற வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

கதை நல்லாருக்குங்க மகேஸ். பல குடும்பங்களில் இது போல bread winner இறந்ததும் பல விதமான இக்கட்டுகளைச் சந்திக்க நேரிடுகிறது.

மகேஸ் said...

நன்றி கோவி.கண்ணண்.

மகேஸ் said...

நன்றி கைப்புள்ள.

//இது போல bread winner இறந்ததும் பல விதமான இக்கட்டுகளைச் சந்திக்க நேரிடுகிறது//

ஆமாம்.நம்மில் பலரும் நம் குடும்பத்தினருக்கு மாற்று வழி ஏதும் செய்து வைப்பதில்லை.

நன்மனம் said...

நல்ல ஆக்கம். வாழ்த்துக்கள்.

மகேஸ் said...

வாழ்த்துக்கு நன்றி நன்மனம் அவர்களே.

கப்பி | Kappi said...

யதார்த்தமான கதை..வாழ்த்துக்கள் மகேஸ்..

'ஆட்டோ' மட்டுமில்லை..'கல்கத்தா'வும் பொதுவாக அமைந்துவிட்டது.. :)

மகேஸ் said...

//'ஆட்டோ' மட்டுமில்லை..'கல்கத்தா'வும் பொதுவாக அமைந்துவிட்டது//
அட ஆமா. இப்பத்தான் கவனிச்சேன்.

சில நேரங்களில் ஒரே மாதிரியான/கரு கொண்ட கதைகளை இருவர் எழுதியிருப்பார்கள். ஆனால் அந்த இருவருக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.

இது போன்ற நிகழ்வுகளை 'இணை கற்பனை' என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய விசயத்தில் அது நடக்கவில்லை.

மகேஸ் said...

இளவஞ்சி நீங்கள் சொன்னபடி பேசும் வசனங்களுக்கு " " போட்டாச்சு.

ILA (a) இளா said...

அருமையான கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மகேஸ் said...

நன்றி இளா.

மா சிவகுமார் said...

ஆட்டோ ஓட்டுநர், பூக்கடைக் காரர் இவர்கள், குடும்பத்தினர் பேசும் உரையாடல்கள் எழுத்துத் தமிழில் இல்லாமல் பேச்சு மொழியாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நல்ல கதை.

அன்புடன்,

மா சிவகுமார்

மகேஸ் said...

நன்றி சிவா.

நீங்கள் சொன்னா மாதிரியே அடுத்த கதியில செஞ்சுடுறேன்.

கோவி.கண்ணன் said...

//
கால்கரி சிவா பதிவில் நீங்கள் இட்ட

ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம் சிவமே அன்பாகும். நாத்திகம் பேசும் நல்லவர்கெல்லாம் அன்பே சிவமாகும்.//

திரு மகேஸ் ... இந்த பொன் எழுத்துக்களுக்காக உங்களை ஓராயிரம் முறை பாராட்ட வேண்டும்

மகேஸ் said...

//இந்த பொன் எழுத்துக்களுக்காக உங்களை ஓராயிரம் முறை பாராட்ட வேண்டும்//

ரெம்பப் புகழாதீங்க. கூச்சமா இருக்கு.
ஏன்னு அப்புறம் சொல்றேன்.

Maraboor J Chandrasekaran said...

நன்று - நடை, கருத்து,சொல்லாக்கம்!

மகேஸ் said...

நன்றி JC.

அப்படியே நமக்கே ஓட்டும் போட்டூடுங்க.

மகேஸ் said...

நன்றி தமிழா!தமிழா!.

போடுங்கம்மா ஓட்டு...
இந்தப்பதிவைப் பார்த்து.

போடுங்கய்யா ஓட்டு...
இந்தப்பதிவைப் பார்த்து.

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளித்து
மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

தமிழ் என்பது மூன்றெழுத்து!
வெற்றி என்பது மூன்றெழுத்து!
மகேஸ் என்பதும் மூன்றெழுத்து!
:)))

இலவசக்கொத்தனார் said...

மகேஸ்,

ஆப்பு என்பதும் மூணு எழுத்துதான் மறந்துடாதீங்க.

:-D

மகேஸ் said...

//ஆப்பு என்பதும் மூணு எழுத்துதான் மறந்துடாதீங்க//
கொத்து, சங்கத்துல சேர்ந்த்தில இருந்து தூங்கும் போது கூட உங்களுக்க்கு ஆப்பு ஞாபககமாவே இருக்கா? :D

மகேஸ் said...

முதலில் வெற்றி பெற்ற மகளிர் அணி(கூட்ட)யினருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் முதல் கதைக்கு மதிப்பளித்து வாக்களித்த வாசகர்களுக்கும் என் நன்றிகள் பல.

வாசகர்களைப் படைப்பாளர்களாக்க மாற்ற ஊக்குவிக்கும் தேன்கூடு மற்றும் தமிழ்மணத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகு:
தோல்வி என்பதும் மூன்றெழுத்து. :))