Monday, April 24, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 1

செய்யும் தொழிலே தெய்வம். இதை மிகவும் நம்புபவன் நான். இன்று ஒரு கணிப்பொறியாளராக இருக்கும் நான் மளிகைக்கடையிலும், காய்கறிக்கடையிலும் வேலை செய்திருக்கிறேன் என்று சிலரிடம் சொல்லும் போது சிலர் அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். சிலர் முகம் சுளித்திருக்கிறார்கள். எப்போதும் அதுபற்றிக் கவலைப் பட்டதில்லை.
இந்தத் தொடரில் நான் வேலை செய்த இடங்களில் சந்தித்த புத்திசாலியான வியாபாரிகள், ஏமாற்ற நினைக்கும் வியாபாரிகள், கிராமத்து விவசாயிகளின் கஷ்டங்கள், வியாரிகளின் பொதுவான தகிடுதத்தங்கள் ஆகியன பற்றி நேரம் கிடைக்கும் போது சுருக்கமாக எழுதுகிறேன். ஆதரவை வேண்டுகிறேன்.

நான் பதினென்றாம் வகுப்பின் முழு ஆண்டு விடுமுறையின் போது எல்லோரும் கோச்சிங் கிளாஸ் போய்க் கொண்டிருந்த போது நான் மட்டும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சென்றேன். அது குடும்பச் சூழ்நிலையால் அல்ல. பன்னிரண்டாம் வகுப்பிற்கு கோச்சிங் எல்லாம் தேவையில்லை, சாதாரணமாகவே படிக்க முடியும் என்ற தன்னம்பிகைதான். படிப்பிலும் பள்ளியில் மூன்றாவது ரேங்க் வாங்கிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் தராசு பிடிக்கக் கற்றுக் கொண்டேன். அது ஒரு மொத்த வியாபாரம் செய்யப்படும் மளிகைக்கடை. என் பக்கத்து வீட்டுக்காரரின் கடை. எனவே சம்பளம் எல்லாம் பேசவில்லை. தினமும் இரண்டு ரூபாய் பேட்டாக் காசாகக் கொடுப்பார்கள். வேலையெல்லாம் எனக்கு எளிதான வேலை தான். ஒரு கிலோ இரண்டுகிலோ போன்ற சிறிய அளவிளான நிறுவைகளை நான் நிறுத்துக் கொடுப்பேன். ஆனால் அதைப் பொட்டலமாக மடிக்கத் தெரியாது. வேறு சில வேலைக்காரர்களை வைத்துச் செய்வார் என் முதலாளி.

கடையின் மாடியில் தான் டால்டா,நெய், பேரீட்சை போன்ற பொருட்களை ஸ்டாக் வைத்திருப்பார்கள். பேரீட்சை பாக்கெடுகளை ஒரு மூலையில் கோணிப்பைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்து அவ்வப்போது மாடிக்குப் போகும் போது தின்றுவிட்டு வருவேன்.

கைத்தராசில் நிறுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நமக்கே தெரியாமல் குண்டுஏறிவிடும். அதாவது தராசின் சங்கிலி மேலை உள்ள சட்டத்தில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளும். அதை நாம் அவசரத்தில் கவனிக்காவிட்டால் சில நேரம் லாபம் நமக்கு அல்லை யென்றால் வாங்குபவருக்கு. அதாவது தராசுச் சட்டத்தின் சங்கிலி, படிக்கல்(எடைக்கல்) உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு அதிகமான பொருள் நிற்கும். அப்போது நஷ்டம் நமக்கு. அதே நேரம் தராசுச் சட்டத்தின் சங்கிலி பொருள் உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு குறைவான பொருள் நிற்கும். அப்போது வாங்குபவர் ஏமார்ந்து போவார்.

சில நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் வியாபாரம் செய்பவர்கள் அரைக்கிலோ பொருளின் விலை மிகவும் மலிவாகக் கொடுப்பதாகச் சொல்லுவார்கள். அவரின் தராசைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மாதிரி தராசுத் தட்டின் சங்கிலி மேலே சுற்றிக் கொண்டிருக்கும். பொருளின் எடை சுமார் ஒரு கிலோவிற்கு 300 கிராம் வரை குறைவாக இருக்கும். என்வே அடுத்த முறை காய்கறிகள், பழங்கள் நிறுத்து வாங்கும் போது கவனித்து வாங்குங்கள்.

கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்த போது ஒருவர் திராட்சைப்பழம் அரைக்கிலோ 5 ரூபாய்க்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் தாராசில் நான் மேற்கூறிய பித்தலாட்டத்தைச் செய்து வைத்திருந்தார். அவர் நிறுக்கும் போது அதைச் சரி செய்து அரைக்கிலோ தரும்படிக் கேட்ட போது, வியாபாரம் நடக்குற இடத்தில் பிரச்சனை பண்ணாதப்பா என்று அடிக்காத குறையாகத் துரத்திவிட்டார்கள்.

இன்னும் வரும்....

9 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நண்பா
ஒரு ஜிபி தக்காளி
2 எம்.பி உருளைக்கிழங்கு


எவ்வளவு விலைங்க..?


சும்மா கிண்டலுக்கு நண்பா..தவறாக நினைக்க வேண்டாம்..

கடந்து வந்த பாதையை மறக்காமல் இருக்கின்றீர்கள்..வாழ்த்துக்கள்..

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

பொன்ஸ்~~Poorna said...

புது விதமான அநுபவமாக இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

இப்போ எல்லாம் கைத்தராசு தான் குறைஞ்சு போச்சே.. எலக்ட்ரானிக் தான் எல்லா இடத்திலும்.. அதில் என்னல்லாம் ஏமாத்து வேலை இருக்கோ..

ஆப்பு said...

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

மா சிவகுமார் said...

மேலை நாடுகளில் இப்படி மாணவர்கள் விடுமுறையில் வேலை பார்த்துச் சம்பாதிப்பது வழக்கமாமே? உண்மையா?

துளசி கோபால் said...

இங்கே 14 வயசானவுடன் பிள்ளைங்க பார்ட் டைம் வேலைக்குப் போகலாம். ஆனா பள்ளிக்கூட
நாட்களில் ஸ்கூல் நேரம் முடியணும். வீக் எண்ட் களில் முழுநாளும்( 8 மணி நேரம்) செய்யலாம்.

நிறைய சூப்பர் மார்கெட்களில் இவுங்களை வேலைக்கு எடுப்பாங்க. மணிக்கு 8 அல்லது 9 டாலர் குடுத்தாப்
போதும் என்றதால்.

வயது ஏற ஏற சம்பளம் அதிகமாகும். 21 வயசானால் அடல்ட் சம்பளம் தரணும்.

மகேஸ் said...

//ஒரு ஜிபி தக்காளி
2 எம்.பி உருளைக்கிழங்கு//
சத்தமாகச் சிரித்து விட்டேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் :))))

//அதில் என்னல்லாம் ஏமாத்து வேலை இருக்கோ.. //
கைத்தராசில் கோல்லால் பண்ணியிருந்தால் பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். எலக்ரானிக் தராசில் பழுது ஏற்பட்டு எடையின் அளவு மாறினால் கஷ்டம் தான்.


//மேலை நாடுகளில் இப்படி மாணவர்கள் விடுமுறையில் வேலை பார்த்துச் சம்பாதிப்பது வழக்கமாமே? உண்மையா?//
உண்மைதான் சிவா. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் கணிப்பொறியாளர் ஒரு ரெஸ்டாரண்டில் மாலை 7 மணிமுதல் இரவு 10 மணி வரை பணி புரிகிறார். மணிக்கு 6 பவுண்டுகள் சம்பளம் பெறுகிறார். மாணவர்கள் ASDA, TESCO, Morrisons போன்ற பெரிய கடைகளில் பணி புரிகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் குஜராத்தியர்கள்.

மகேஸ் said...

//வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி .......//

அரசியலை ஆப்பு அவர்கள் மறந்துவிட்டார் போலும். சேர்த்துக் கொள்க. :))))

மகேஸ் said...

வரவுக்கு நன்றிகள் ரசிகவ்,பொண்ஸ்,சிவா,துளசியக்கா,மற்றும் பாரதி. அடுத்த பகுதி இரண்டொரு நாளில்.

ரசிகவ் எப்படி நீங்கள் இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினீங்க? நானும் உங்கள் ரசிகர்தான். ஆனால் பெரும்பாலும் அலுவலகத்தில் மறைத்து வைத்துப் படிப்பதால் நிறையப் பின்னூட்டங்கள் இட இயலுவதில்லை. இந்த வாரம் என் மேனேஜர் லீவ். ஒரு வாரம் ஒரே மாஜாதான்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரசிகவ் எப்படி நீங்கள் இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கினீங்க? //


அது பணத்துக்காக சேர்ந்த கூட்டமல்ல..
அன்பால சேர்ந்தது..

அட சும்மா ரஜினி மாதிரி டயலாக் விடலாம்னு நினைச்சேன்ங்க.. ;)

என்ன மகேஸ்..கவுக்குறமாதிரி இருக்குது..

எதற்கும் நன்றி சொல்லி வைக்கிறேன்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்